Sunday, November 8, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 46 திருவேளுக்கை

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 46 🌹🌹🌹


அருள்மிகு அழகிய சிங்கர் திருக்கோவில்:-

திருவேளுக்கை.
மூலவர்: அழகிய சிங்கர், முகுந்தநாயகன், ஆளரி
தாயார்: வேளுக்கைவல்லி, அம்ருதவல்லி
உற்சவர்: அழகிய சிங்கர்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: கனக விமானம்
தீர்த்தம்: கனகசரஸ், பிரகலாத தீர்த்தம்
மங்களாசாசனம்: பேயாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ வேளுக்கைவல்லீ ஸமேத ஸ்ரீ முகுந்தநாயகாய நமஹ.
ஊர்: காஞ்சிபுரம்.


🌺🌺 திருவேளுக்கை:-

"வேள்" என்பதற்கு "ஆசை" என்பது பொருள். "இருக்கை" என்பதற்கு "இருப்பிடம்" என்பது பொருள்.

பிருகு முனிவரின் விருப்பத்திற்கிணங்க இறைவன் காட்சி தந்த இடம் என்பதால் இத்தலம் அமைவிடத்திற்கு "திருவேளுக்கை" என்ற பெயர் உண்டானது.

சிம்ம முகம் கொண்டு அழகிய திருமேனியாக காட்சி தந்து அருளுவதால் இத்தல இறைவனுக்கு அழகிய சிங்கர் என்பது திருநாமம்.

உற்சவரின் திருநாமம் முகுந்த நாயகன் என்பதாகும்.

🌺🌺 தலவரலாறு:-

ஒருமுறை பிருகு முனிவர், பிரகலாதனுக்காக அவதாரம் செய்த அருள்மிகு நரசிம்ம சுவாமியைக் காண வேண்டி கச்சி மாநகரான இத்தலத்தில் தவமியற்றினார்.

காஞ்சி என்பது வடசொல். கச்சி என்பதே தமிழ்ச்சொல். அவரது தவத்திற்கு மனமிறங்கிய நரசிம்ம சுவாமி கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறு.

அன்றிவ் வுலகம் அளந்த
அசைவேகொல்
நின்றிருந்து வேளுக்கை
நீணகர்வாய், - அன்று
கிடந்தானைக் கேடீல்சீ ரானை,
முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்.

- பேயாழ்வார்.

பிற்காலத்தில் வந்த திருமங்கையாழ்வார் "மதித் கச்சி வேளுக்கை யாலறியே". என்று பாடியுள்ளமையால், மாட மாளிகைகளுடன் கூடிய பிரம்மாண்டமான கோவிலாகவும், இருந்துள்ளதையும் நம்மால் அறிய முடிகிறது.

அன்றைய கோவில் சிதைவடைந்து போயிருக்கலாம். இருப்பினும் பிற்காலத்தில் இம்மாநகரின் அமைப்பிற்கேற்ப மேற்கு நோக்கிய நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் மிக அழகிய வடிவில் கோவில் அமைத்துள்ளனர்.

🌺🌺 சிறப்புகள் :-

உக்கிரமூர்த்தி சாந்த சொரூபினியாக காட்சி தரும் திவ்யதேசம்.

நரசிங்க சுவாமி அழகிய சிங்க பெருமாளாக காட்சி தரும் திவ்யதேசம்.

திருமகள் தாயார் வேளுக்கை வல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

பேயாழ்வார்- 3, திருமங்கையாழ்வார்-1 என 4 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம் :-

காஞ்சிபுரம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ரங்கசாமி குளம் பேருந்து நிறுத்தத்தின் அருகாமையில் அமைந்துள்ளது.

அருள்மிகு அழகிய சிங்கர் திருவடிகளே சரணம்.
அருள்மிகு வேளுக்கைவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில்:-

அருள்மிகு நீராகரத்தான் திருக்கோவில் - திருநீரகம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!"

No comments:

Post a Comment