🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 44 🌹🌹🌹
காஞ்சிபுரத்தின் 14 திவ்யதேசங்களில் "பரமபதவாசல்" உள்ள ஒரே திவ்யதேசம்.
108 திவ்யதேசங்களில் வேறு எங்கும் காண முடியாத கோலத்தில் பெருமாள் எட்டு கரங்களுடன் காட்சி தரும் திவ்யதேசம்.
திருஅட்டபபுயக்கரம்.
மூலவர்: ஆதிகேசவப்பெருமாள், கஜேந்திர வரதன், அட்டபுயக்கரத்தோன்.
தாயார்: அலர்மேல் மங்கை, பத்மாசனி, புஷ்பவல்லி
உற்சவர்: ஆதிகேசவப் பெருமாள், கஜேந்திரவரதன், அட்டபுயக்கரத்தோன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: கநாக்ருதி, சக்ராக்ருதி, வயோமாகார விமானம்
தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரணி
மங்களாசாசனம்: பேயாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ அலர்மேல் மங்கை ஸமேத ஸ்ரீ ஆதிகேசவாய நமஹ
ஊர்: காஞ்சிபுரம்.
🌺🌺 தலவரலாறு:-
பிரம்மா காஞ்சியில் தன்னையே படைத்த திருமாலை வணங்கி மிகப்பெரிய அளவில் யாகம் செய்தார். அச்சமயம் அவருடைய பத்தினியாகிய கலைவாணியை விடுத்து யாகம் செய்யத் தொடங்கினார்.
இதனை அறிந்த கலைவாணி மிகவும் கோபம் கொண்டு யாகத்தை பல வகையில் முயற்சி செய்தாள். பிரம்மாவின் வேண்டுகோளின் படி திருமால் யாகம் தொடர அருள் புரிந்தார். அப்போது கலைவாணி யாகத்தை அழிக்க நக்கரர்கள் என்று கூறப்படும் கொடிய அரக்கர்களை அனுப்பி வைத்தாள்.
அப்போது பிரம்மா தனது யாகத்தைக் காக்கும்படி பெருமாளை வேண்ட, பெருமாள் 8 திருக்கரங்களுடன் தோன்றி அரக்கர்களை அழித்து யாகம் சிறப்பாக நடைபெறச் செய்ததாக தலவரலாறு கூறுகிறது.
🌺🌺 ஆதிகேசவர் :-
அக்காலத்தில் இத்தல இறைவனுக்கு ஆதிகேசவர் என்பதே திருநாமம் ஆகும். ஆழ்வார்கள் பாடியதன் விளைவாக அட்டபுயக்கர பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
"அட்ட" என்பதற்கு "எட்டு" என்பது பொருள். இங்கு பெருமாள் வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, தாமரை மலர், அம்பு ஆகியவையும், இடது கரங்களில் சங்கு, வில், கேடயம், கதை ஆகியவையும் கொண்டு அருள்பாலிக்கிறார் என்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
காஞ்சிபுரத்தில் உள்ள 14 திவ்யதேசங்களில் "பரமபதவாசல்" உள்ள ஒரே திருக்கோவில் இதுவாகும்.
சாதாரணமாக பெருமாள் கோவில்களில் ராஜ கோபுர நுழைவுவாயில் ஒரு திசையிலும், சொர்க்கவாசல் ஒரு திசையிலும் இருக்கும். ஆனால், இங்கு சொர்க்கவாசலும், கோவிலின் நுழைவு வாயிலும் வடக்கு நோக்கி இருப்பது கோவிலின் சிறப்பம்சம்.
🌺🌺 வீடு, நிலங்கள் வாங்க :-
பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தல பெருமாள் அழித்து அவளை காப்பாற்றியதால், வீடு கட்ட நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்சினை உள்ளவர்கள் வழிபட்டு பலன் பெரும் தலம் "அட்டபுயக்கரத்தான்" திருத்தலம்.
🌺🌺 கஜேந்திரவரதன் & கஜேந்திரபுஷ்கரணி :-
முன்னொரு காலத்தில் மகாசந்தன் என்னும் யோகிக்கு பூவுலக வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனின் திருவடி சேர விருப்பம் ஏற்பட்டது. இந்திரனுக்கு நிகரான தகுதி பெற்றிருந்த இவர் பெருமாளை நோக்கி நீண்ட காலம் தவமிருந்தார். பயந்துபோன இந்திரன் தவத்தைக் கலைக்க தேவ கன்னிகளை அனுப்பி வைத்தான்.
இதற்கெல்லாம் யோகி அசையவில்லை. பின், இந்திரன் ஆண் யானை வடிவெடுத்து முனிவரின் இருப்பிடம் சேர்ந்தான். இதன் அழகில் மயங்கிய முனிவர் தானும் யானை வடிவெடுத்து யானைகளுடன் கூட்டம் கூட்டமாக காடுகளில் திரியும் போது, சாளக்கிராமத்தில் நீராடியது.
அப்போது அந்த யானைக்கு தன் யோக வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்தது. மிகவும் வருந்திய யானை பல திவ்யதேசங்களுக்கும் சென்று பரிகாரம் தேடியது.
மிருகண்டு முனிவர் இதன் நிலை கண்டு வருந்தி காஞ்சிக்குச் சென்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை வழிபட்டால் உனது பிரார்த்தனை நிறைவேறும் என்றார்.
அதன்படி யானையும் வழிபட்டு வந்தது. ஒருமுறை கோவிலுக்குச் செல்லும் வழியில் அஷ்டபுஜ பெருமாளைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பெருமாளின் அழகில் மயங்கிய யானை அருகிலிருந்த குளத்திலிருந்து 14000 மலர்களை பறித்துக் கொடுத்து இறைவனுக்குச் சேவை செய்து வந்தது.
ஒருநாள் பூ கிடைக்காமல் போகவே பக்கத்திலுள்ள குளக்கரைக்குச் சென்று பூ பறித்தது. அப்போது குளத்திலிருந்த முதலை யானையின் காலை விடாமல் பிடித்தது.
பயந்து போன யானை அஷ்டபுஜ பெருமாள் தன்னைக் காப்பாற்றும்படி "ஆதிமூலமே" என்று அபயக்குரல் கொடுத்தது. முன்பொரு முறை கஜேந்திரனைக் காப்பாற்றிய ஆதிமூலம் இந்த முறையும், கருட வாகனத்தில் ஏறி வந்து தனது சக்கரத்தினால் முதலையின் தலையை வெட்டி யானையை காப்பாற்றினார்.
அதனால் தான் அஷ்டபுஜப் பெருமாளுக்கு "கஜேந்திரவரதன்" என்ற திருநாமமும் உண்டானது. இங்குள்ள புஷ்கரிணிக்கு
கஜேந்திர புஷ்கரணி என்ற பெயரும் ஏற்பட்டது.
🌺🌺 மங்களாசாசனம் :-
இங்குள்ள தாயாரை தனியாக பாடல் பாடி மங்களாசாசனம் செய்த சிறப்பு பெற்ற தலம். இத்தலத்தை திருமங்கையாழ்வார் 11 பாசுரம், பேயாழ்வார் 1 பாசுரம் என 12 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
ஏதுமறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மணமும் நிறைவு மெல்லாம் தம்மனவாயப்
புகுந்து தாமும்
கருங்கடல் பூவை காயா போதவிழ் நீலம் புனைந்த
மேகம் அங்ஙனம் போன்றிவர்
ஆர் கொல்லென அட்ட புயகரத் தேனென்றாரே"
- திருமங்கையாழ்வார்.
🌺🌺 பெருமாளின் சிறப்பு:-
சித்திரை மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்த பெருமாள் இந்த அட்டபுயக்கரத்தான்.
எட்டு கைகளுடன் எங்கும் காண முடியாத தரிசனம் தருபவர் இந்த அட்டபுயக்கர பெருமாள். எட்டு கைகளில் ஏழு கைகளில் ஆயுதம் ஏந்திக் காட்சி தருகிறார். ஒரு கையில் தாமரை மலரேந்திக் காட்சி கொடுக்கிறார்.
ஆயுதம் எதற்குப் பயன்படும்???? - எதிரிகளை அழிப்பதற்கு. அதனால் தான் ஏழு கைகளில் ஆயுதம் ஏந்திக் காட்சி தருகிறார்.
ஒரே கையில் மட்டும் தாமரை அது எதற்கு??? வேண்டியதைக் கொடுக்க.
ஆக இங்குள்ள பெருமாள் எதிரிகளை அழிப்பதோடு மட்டுமல்ல,, வேண்டியதைக் கொடுக்கும் வரம் கொடுத்து நமக்காக அருள்மழை பொழிந்து கொண்டார்.
🌺🌺 வழித்தடம் :-
காஞ்சி நகரின் மத்தியில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ரங்கசாமி குலம் பேருந்து நிறுத்தத்தின் அருகாமையில் உள்ளது இந்த திவ்யதேசம்.
அருள்மிகு பத்மாசனி நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு தீபப்பிரகாசர் திருக்கோவில் - திருத்தண்கா திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம்நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment