Wednesday, November 18, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 54 திருக்கள்வனூர்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 54 🌹🌹🌹

அண்ணன், தங்கைகள் தங்களுக்குள் ஒற்றுமை கூடுவதற்கு வழிபட வேண்டிய சிறப்பு வாய்ந்த திருத்தலம்.

அருள்மிகு கள்வர் பெருமாள் திருக்கோவில்:-

திருக்கள்வனூர்.
மூலவர்: கள்வர், ஆதிவராகப் பெருமாள்
தாயார்: அஞ்சிலை நாச்சியார்
உற்சவர்: ------- இல்லை
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: வாமன விமானம்
தீர்த்தம்: நித்ய புஷ்கரணி

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

நாமாவளி: ஸ்ரீ அஞ்சிலைவல்லீ ஸமேத ஸ்ரீ ஆதிவராகாய ஸ்வாமிநே நமஹ.

ஊர்: காஞ்சிபுரம்

🌺🌺 திருக்கள்வனூர்:-

கார்மேக வண்ணனாக விளங்கும் இறைவன் நாராயணன், திருமகள் லட்சுமியைக் காண கள்ளத்தனமாக வந்ததால் "கள்வர்" என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

கள்வப் பெருமாள் காமாட்சி அம்மன் கோவிலில் கருவறைக்கு வெளியே காயத்ரி மண்டபத்தில் வலப்புறத்தில் உள்ள ஒரு சுவரில் தென்கிழக்கு திசையை நோக்கி காட்சி தருகிறார்.

தர்ம தரிசனத்தில் செல்பவர்கள் சேவிக்க இயலாது. காமாட்சி அம்மன் கருவறையின் பின்புறமாக சிறப்பு தரிசனத்திற்கு வருகிற போது எதிரிலேயே காட்சி தருகிறார்.

இந்த கள்வப் பெருமாளுக்கு சாம்பிராணி தைலத்தால் மட்டும் அபிஷேகம் செய்கிறார்கள். தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் நடத்தும் முன்பே இங்கு வந்து காமாட்சியையும், இப்பெருமாளையும் வணங்கிச் சென்றுள்ளார்.

தனது ராம அவதாரத்திற்கு தன்னிடமே வந்து தசரதரை வேண்டச் செய்த பெருமாள் இவர். சிவபக்தரான "துர்வாசர்" இவரை வணங்கிச் சென்றுள்ளார்.

கருவறைக்கு முன்புள்ள காயத்ரி மண்டபத்தின் அமைப்பு போலவே அதற்கு கீழே ஒரு மண்டபமும், அதன் மத்தியில் காமாட்சி அன்னையும் இருக்கிறாளாம். அதாவது தங்கைக்கான கோயிலே என்றாலும், அண்ணனுக்கு பணிந்து அவருக்கு கீழே அம்பாள் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் இம்மண்டபத்திற்குள் செல்பவர்கள் நிற்காமல் அமர்ந்த நிலையிலேயே தரிசிக்க வேண்டும். அண்ணன், தங்கைகள் இங்கு ஒரே நேரத்தில் காமாட்சியையும், கள்வப்பெருமாளையும் வேண்டிக்கொண்டால் அவர்களுக்குள் ஒற்றுமை கூடும் என்பது நம்பிக்கை.

🌺🌺 தலவரலாறு:-

ஒருமுறை மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் உலக மக்கள் செய்யும் பாவ, புண்ணியங்கள் பற்றியும், அவர்கள் மாயையில் சிக்கி உழல்வது குறித்தும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் அவர்களது பேச்சு அழகு பக்கம் திரும்பியது. அப்போது மகாலட்சுமி தான் மிகவும் அழகாக இருப்பதாகவும், தன்னைக் கண்டாலே மக்கள் செழிப்புற்று வாழ்வர் என்றும் பெருமையாக பேசினாள்.

அதோடு விடாமல் மகாவிஷ்ணு, "கருமை நிறக் கண்ணனாக' இருப்பதையும் சுட்டிக்காட்டினாள். அவரோ "அகத்தில் இருப்பதுதான் உண்மையான அழகு, புறத்தில் இருப்பது மாயையில் சுழல வைப்பது' என்று அமைதியாக சொல்லிப் பார்த்தும் அவள் கேட்பதாக இல்லை.

அழகு மீது கர்வம் கொண்டிருந்த மகாலட்சுமிக்கு பாடம் கற்பிக்க எண்ணினார் விஷ்ணு. பெண்ணுக்கு அழகு இருக்கலாம், ஆனால் அந்த அழகு மீது கர்வம் இருக்கக் கூடாது. எந்த அழகு மீது அளவு கடந்த பற்று வைத்துவிட்டாயோ அந்த அழகானது அரூபமாகப் போகட்டும் என்று சாபம் அளித்தார்.

கலங்கிய மகாலட்சுமி தவறை உணர்ந்து தன்னை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டாள். "பூமியில் எங்கு ஒரு முறை செய்யும் தவத்திற்கு ஒரு கோடி முறை தவம் செய்த பலன் கிடைக்குமோ, அங்கு சென்று தவம் செய்தால் உமது பாவத்திற்கு விமோசனம் கிடைக்கும்'' என்றார் விஷ்ணு.

சிவனின் கண்களை மூடியதால் சாபம் பெற்ற பார்வதிதேவி, தன் சாபம் நீங்க காஞ்சியில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரை வணங்கி விமோசனம் பெற்றாள்.

அவளது பாவத்தை போக்கிய இத்தலத்திற்கு வந்த மகாலட்சுமி அரூபமாக தங்கி விஷ்ணுவை வணங்கி வந்தாள்.

இதை உறுதி செய்யும் விதமாக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு அருகாமையில், அஞ்சன காமாட்சியாக திருமகள் இன்றளவும் வீற்றிருக்கிறாள்.

பக்தர்கள் அவள் மீது குங்கும பிரசாதம் இடுவது வழக்கம். பின்பு திருமால் தனது தவறை உணர்ந்தார். சாப விமோசனம் பெற்றவுடன், அருள்மிகு காமாட்சி அம்மன் அறிந்திடாத வகையில், கள்ளத்தனமாக பெருமாளே திருமகளை அழைத்துச் வெல்ல வந்ததாகவும், காமாட்சி அம்மன் அதனை அறிந்து கொண்டு "கள்வர் பெருமானே" என்று அழைத்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.

அக்காலத்தில் "ஆதிவராகப் பெருமாள்" என்றும், பிற்காலத்தில் "கள்வர் பெருமாள்" என்றும் திருநாமம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

🌺🌺 சிறப்புகள் :-

காமாட்சி அம்மன் சன்னிதியின் பின்புறமாக கள்ளைத்தனமாக மறைந்துள்ள பெருமாள்.

காமாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்.

திருமங்கையாழ்வார் ஒரு பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 மங்களாசாசனம்:-

"நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வாவைவத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுள் திருவடியே பேணினேனே!!!"

- திருமங்கையாழ்வார்.

🌺🌺 வழித்தடம்:-

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளது. நடந்து சென்றே திருக்கோவிலை அடையலாம்.

அருள்மிகு கள்வர் பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு அஞ்சலை நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு பவள வண்ணன் திருக்கோவில் - திருப்பவள வண்ணம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment