Saturday, November 7, 2020

மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 14

 மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 14

(சிவசமுத்ரம்,மத்யரங்கம்)

பீமா நதிக்கரையில் அமைந்துள்ள பண்டரிபுரம், மகாராஷ்டிராவின் ஆன்மிகத் தலைநகரம். 

இந்தப் புனிதத்தலத்தில் பீமா ஆறு சந்திர பிறையைப் போல வளைந்து செல்வதால், அந்த நதி இங்கு சந்திரபாகா ஆறு என அழைக்கப்படுகிறது. சந்திரபாகா என்றால், பிறைச் சந்திரன் என்று பொருள்.

இந்த ஊர் கர்நாடக,மகாராஷ்டிர எல்லையில் இருப்பதால்,சென்னையை விட  பெங்களூரிலிருந்து ட்ரெயினில் இடம் கிடைக்க வாய்ப்பு அதிகம்...மேலும் என் மாமனார்,மைத்துனி,ஷட்டகர் வர விரும்பியதால் பெங்களூரில் உள்ள மைத்துனர் வீட்டில் இருந்து புறப்பட முடிவு   செய்து அருகில் உள்ள ஜங்ஷன் சோலாப்பூருக்கு டிக்கட் ரிசர்வ் செய்தோம்..(2017 பிப்ரவரி )

கிளம்ப இரண்டு நாட்கள் இருந்ததால் பெங்களூரிலிருந்து மறுநாள் மத்யரங்கம்,முகமதியர் படை எடுப்பின் போது தேசிகர் தங்கியிருந்த சத்யாகாலம், தலக்காடு சென்று பெருமாள் சேவிக்க முடிவு செய்து மைத்துனர் ஏற்பாட்டில் எட்டு பேர் ஒரு வேனில் விடிகாலம் 6.00 மணிக்கு  கிளம்பினோம்..

விடியற்காலையின் பெங்களூர் குளிரும் செல்லும் பாதையின் பசுமை வயல்களும்,தேசிகரின் பாதம்பட்ட பூமியை தரிசிக்கப்போகும் ஆன்மீக அனுபவமும் இனிய நினைவுகளாய்...

காலை உணவாய் எடுத்துச்சென்ற பொங்கலையும் இட்லியையும் வழியில் வந்த வாய்க்கால் கரையில் சாப்பிடுகிறோம்..நேரம் 9.00 மணி..ஐந்து மணி நேர பயண முடிவில் முதலில் மத்திய ரங்கம் சேவித்து பின்னர் 1.00 மணிக்கு சத்யாகாலம் தரிசனத்திற்குப்பின் ஏற்கனவே பட்டரிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்த பிரசாதம் மதிய உணவு சாப்பிட்டு முடிந்து தலக்காடு செல்ல ஏற்பாடு...

எப்பவும் நாங்கள் இருவர் மட்டும் பஸ்ஸுக்கு காத்திருந்து ஏறி சுற்றிவரும் அவஸ்தையில்லாமல் குழுவாக செல்வதால் இது போல வேனில் சௌகரியம் என நினைத்துக்கொள்கிறேன்...

வேன் 70 கிமீ வேகத்தில் செல்ல எதிரே வந்த ஒரு ஆட்டோவிற்கு ஒதுங்க, நாங்கள் வந்த திசையிலேயே பின்னால் வந்த வேனும்  ஆட்டோவும் மோதிக்கொள்கிறது.

பெரிய ஆக்சிடெண்ட் இல்லை என்பதாலும், தன் மேல் எந்த தவறும் இல்லாமல் அனாவசியமாக நின்றால் தனக்கும் ப்ரச்னை என டிரைவர் நிறுத்தாமல் செல்கிறார்...

ஆனால்  அடுத்து வந்த ஊரில் ஒரு போலீஸ் வேன் வழி மறித்து வேனை நிறுத்தி, டிரைவரை அழைத்துச்செல்கிறார்கள். 

மணி நண்பகல் இரண்டு வரை டிரைவர் வராமையால்  சத்யாகாலம் பட்டருக்கு ப்ரச்னையை சொல்லி சாப்பாட்டை வைத்திருக்கவும் இரவுக்குள் வந்து விடுவதாகவும் கூறுகிறோம்..

பகல் பசிக்கு கொண்டுவந்த ஸ்நாக்குகள் காலியாகிறது…

கொஞ்ச நேரத்தில் டிரைவர் முதலாளிக்கு போன் செய்து முதலாளி போலீஸை கவனித்து டிரைவரை வேனை எடுக்க சொல்கிறார்கள்..இதனால் பயண நேரம் நான்கு மணி தாமதமாக சௌகரியம் என நினைத்தது சங்கடமாயிற்று…

முதலில் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகில் மத்யரங்கம் போகிறோம்..

ஏற்கனவே நான் மாமனாருடன் சிவசமுத்ரம் சென்றிருக்கிறேன்...

சிவசமுத்திரம்  என்னும் சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி ஆகும். உலகின் பதினாறாவது பெரிய நீர்வீழ்ச்சியும் இதுவே. சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, விழும் இடத்தில் இரண்டாகப் பிரிந்து ககனசுக்கி (Gaganachukki), பரசுக்கி (Bharachukki) என இரண்டு அருவிகளாகப் பிரிந்து விழுகின்றன. இந்த இரண்டு அருவிகளும் இருநூறு அடி ஆழத்தில் பாய்ந்து மீண்டும் ஒன்று சேர்கிறது..

நீர்வீழ்ச்சி கடினமான பாறைகளுக்கு இடையே குதித்து, வழிந்து நுரைகளுடன் குதிரையின் லாடம் போன்று அமைந்த பள்ளத்தில் ஹோவென்ற பெரும் ஒலியுடன் கொட்டிக் கொண்டிருக்கிறது. நீண்ட தூரத்திற்கு நீர்த் திவலைகள் தெரித்து வீழ்கிறது, அடர்த்தியான நீர்திவலைகள் மெல்லிய திரையாக உருவாகி பராசுக்கியை மறைத்து நின்றது போல தோன்றியது. நீர்வீழ்ச்சி இங்கிருந்து தொடர்ந்து சுமார் முப்பதடி ஆழத்தில் மிகுந்த வேகத்துடன் மற்றொரு அருவியாக வீழ்வது கண்கொள்ளாக் காட்சியாகும். பிறகு இரண்டு கிளைகளாகப் பிரிந்து சென்று, உயர்ந்த பாறைகளுக்கிடையே ஊடுருவி, வடக்குத் திசை நோக்கிப் பாய்ந்த பின்னர் சிவசமுத்திரத் தீவின் வடகிழக்குத் திசையில் ஒன்றாக இணைகிறது. இங்கிருந்து இந்த அற்புதமான காட்சியைக் காண்பது இனிமையான அனுபவம்.

இங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால்  அங்கே பொங்கி எழும் குளிர்ந்த ஆற்று நீரில் முங்கிக் குளிக்கலாம். பரிசல் (Coracle) என்னும் வட்டமான படகில் ஏறி படகு சவாரி போகலாம். ஆனால் எச்சரிக்கையை மதித்து இவை அனைத்தையும் செய்யவேண்டும். அருவிகளைச் சுற்றி ஓங்கி உயர்ந்த மலைச் சிகரங்கள், பச்சைப் பசேல் என்று மரம் செடி கொடிகள், செழித்து நுரைத்து ஓடும் வெள்ளம் எல்லாம் பிரம்மிப்பூட்டுகின்றன.

ககன்சுக்கி பரசுக்கியை விட மிகப்பெரிய நீர்வீழ்ச்சி எனலாம். சுமார் 300 அடி உயரத்திலிருந்து ஹோவென்ற காதைப் பிளக்கும் சப்தத்துடன் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ககன்சுக்கியும் இரண்டு கிளைகளாகப் பிரிந்து மீண்டும் இணைகிறது. இரண்டு கிளைகளுமே பாறைகளினூடே பொங்கி வழிந்தவாறு ஒரு பள்ளத்தில் வீழ்கின்றன. இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளால் தோன்றுகின்ற அடர்ந்த திவலைப் படலத்தை வெகுதொலைவிலிருந்தே  பார்த்து ரசிக்கலாம்.

இந்த முறை நேரம் ஆகி விட்டதால் நீர் வீழ்ச்சி செல்லும் பிளானை டிராப் செய்து மத்யரங்கம் பெருமாள் சேவிக்க செல்கிறோம்..

கௌதம ரிஷிக்கு புஜங்க சயனத்தில்  ப்ரத்யக்‌ஷம் ..ஆதி சேஷன்மீது பள்ளிகொண்டு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்..

மறுபடி வேன் சத்யாகாலம் நோக்கி, ....

படங்கள்..சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சிபரசுக்கி,ககன சுக்கி ,சிவசமுத்ரம் ஆகாயப்பார்வையில் யு ட்யூப் அற்புதக்காட்சி,,மத்யரங்கம்…கோயில் ,பெருமாள்...






No comments:

Post a Comment