Saturday, November 7, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 42 திருக்கோவலூர்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 42 🌹🌹🌹

நடுநாட்டின் இரண்டாவது திவ்யதேசம் இரண்டு திருத்தலங்களைக் கொண்டதாக இவ்வூர் மக்களால் கூறப்படுகிறது. திருக்கோவலூர் தனியாகவும், ஆதிதிருவரங்கம் தனியாகவும் 16 கி.மீ தொலைவில் இருந்தாலும் ஒரே திவ்யதேசமாகக் கொள்ளப்படுகிறது.

நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன்முதலில் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலம்.

பஞ்ச கிருஷ்ண தலங்களில் முதல் தலம் என்ற சிறப்பை பெற்ற திவ்யதேசம்.

மூன்று ஆழ்வார்களுக்கு முக்தி கொடுத்த அற்புத திவ்யதேசம்.

திருக்கோவலூர் (முதல் தலம்) :-
மூலவர்: திரிவிக்கிரமன்
தாயார்: பூங்கோவல் நாச்சியார்
உற்சவர்: கோபாலன், ஆயனர், தேஹளிசர்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
தீர்த்தம்: கிருஷ்ண தீர்த்தம், சக்கர தீர்த்தம், பெண்ணையாறு
விமானம்: ஸ்ரீகர விமானம்
மங்களாசாசனம்: பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ பூங்கோவல் நாச்சியார் ஸமேத ஸ்ரீ த்ரிவிக்ரமாய நமஹ.
ஊர்: திருக்கோவலூர்.

🌺🌺 புண்ணிய லோகம் :-

மண்ணுலகத்து உயிர்கள் அனைத்தையும் காக்கும் மாயவனாகிய இறைவன் நாராயணன், மகாபலியின் ஆணவத்தை அடக்க வாமன (குள்ள) ரூபமாக உலகம் முழுவதும் அளந்தார். ஆகவே, இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனின் திருவடி பட்டது என்பதால், எங்கு வாழ்ந்தாலும் புண்ணிய லோகமே என்பதில் மாற்றமில்லை.

🌺🌺 மூலவர் திருமேனி :-

இத்திருத்தலத்தில் விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள். மூலவர் திருமேனி தாருவால் (மரத்தால்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. சாளக்கிரகத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்கள்.

🌺🌺 தலவரலாறு :-

ஒருமுறை மிருகண்டு முனிவர் இறைவனின் திருவிக்கிரம அவதாரத்தைக் காண ஆவல் கொண்டார். இதற்காக ஆவலுடன் அவர் பெண்ணாற்றின் கரையில் ஒரு குடில் அமைத்து, தன் மனைவியுடன் தவம் செய்து வந்தார்.

இவர்களின் தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் மிகப்பெரிய திருமேனியாக காட்சி தந்து அருளினார். அதே திருக்காட்சியில் திருவிக்கிரமன் என்ற திருநாமத்தில் இன்றளவும் காட்சி தந்து அருள்கிறார்.

🌺🌺 முக்தி கண்ட மூவர் :-

இறைவனின் திருவடியை அடைந்த பன்னிரு ஆழ்வார்களில் முதல் மூவரான கச்சி (காஞ்சிபுரம்) மாநகரில் அவதரித்த பொய்கையாழ்வார், மாமல்லபுரத்தில் அவதரித்த பூதத்தாதாழ்வார் மற்றும் சென்னை மயிலாப்பூரில் அவதரித்த பேயாழ்வார் ஆகிய மூவரும் முக்தி கண்ட புண்ணியத்தலம் திருக்கோவிலூர் ஆகும்.

மூன்று ஆழ்வார்களும் இங்கு வந்து ஒன்றாக இணைந்து இறைவனின் அருட்காட்சியைக் கண்டனர்.

முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் நூறு பாடல்களைக் கொண்ட முதல் திருவந்தாதியைப் பாடி முக்தி அடைந்தார்.

பிறகு பூதத்தாழ்வார் நூறு பாடல்களைக் கொண்ட இரண்டாம் திருவந்தாதியைப் பாடி முக்தி அடைந்தார்.

அதன் பின், பேயாழ்வார் நூறு பாடல்களைக் கொண்ட மூன்றாம் திருவந்தாதியும் பாடி முக்தி அடைந்தார்.

🌺🌺 திவ்யபிரபந்தம் துவங்கிய தலம்:-

இறைவன் மீது பாடப்பட்ட அற்புத ஆகமமான நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன்முதலில் நாடப்பெற்ற தலம் இதுவாகும்.

இருப்பினும், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய இருவரும் "பூங்கோவல்" என்று மங்களாசாசனம் செய்துள்ளனர்.

ஆயினும், பேயாழ்வார் இத்தலத்தைப் பற்றி எங்குமே பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

🌺🌺 சிறப்புகள் :-

உலகளந்த திருவிக்கிரமன் மிகப்பெரிய திருமேனியாகக் காட்சி தரும் திவ்யதேசம்.

முதல் மூன்று ஆழ்வார்கள் முக்தி கண்ட திவ்யதேசம்.

திருமகள் நாச்சியார் பூங்கோவல் நாச்சியார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

மூன்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடல் பெற்ற திவ்யதேசம்.

அருள்மிகு திருவிக்கிரமன் சுவாமி திருவடிகளே சரணம்.

அருள்மிகு பூங்கோவல் நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 இரண்டாவது திருக்கோவில் :-

அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில்:-

ஆதிதிருவரங்கம்.

பெருமாளின் பஞ்சரங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்று.

மூலவர்: அரங்கநாதர்
தாயார்: அரங்கநாயகி
உற்சவர்: பெரிய பெருமாள்
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சந்தோமய விமானம்
தீர்த்தம்: தென் பெண்ணையாறு
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ ரங்கநாயகீ ஸமேத ஸ்ரீ ரங்கநாதாய நமஹ.
ஊர்: ஆதிதிருவரங்கம்

🌺🌺 தலவரலாறு :-

இறைவன் நாராயணன் வையகத்தில் எடுத்ததோ பத்து அவதாரங்கள். அவற்றில் முதலாவது அவதாரம் மச்ச அவதாரம்.

அத்தகைய மச்ச அவதாரம் நிகழ்த்தி காட்சி தந்த திருத்தலமே தீந்தரங்கம் என்று போற்றப்படும் "ஆதிதிருவரங்கம்" ஆகும்.

சோமுகன் என்னும் அசுரன் தேவர்களை வெல்வதற்காக வேதங்களை அபகரித்து சமுத்திரத்தில் மறைத்து வைத்தான்.

தேவர்களும், முனிவர்களும் மிகுந்த கவலை அடைந்து திருமாலிடம் முறையிட்டு வேதங்களை மீட்டுத் தருமாறு வேண்டினர்.

இவர்களின் வேண்டுகோளை ஏற்ற நாராயணன், மச்சம் அதாவது மீனாக அவதரித்து சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டிருந்த சோமுகனை அழித்து வேதங்களை மீட்டு கொண்டு வந்து, தேவர்களிடம் கொடுத்தார்.

அத்தகைய பெருமான் பிரம்மாவிற்கு இத்தலத்தில் உபதேசம் செய்ததாக தலவரலாறு கூறுகிறது.

🌺🌺 பிள்ளைச் செல்வம் அருளிய பெருமாள்:-

'சுரதகீர்த்தி' என்னும் தொன்மையான சக்ரவர்த்தி எல்லாச் செல்வங்களைப் பெற்றிருந்தும் பிள்ளைச் செல்வம் இல்லாமல் வருந்திய போது, நாரத முனிவரின் அறிவுரையின்படி "உத்தரரங்கம்" என்னும் இத்தலத்திற்கு வந்து வணங்கினான்.

இத்தல இறைவனின் திருவருளால் குழந்தையையும் பெற்று மகிழ்ந்தான் என்று தலபுராணம் மற்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

🌺🌺 ஆதிதிருவரங்கம் பெயர்க் காரணம் :-

அக்காலத்தில் காஞ்சி மாநகருக்கு தொண்டை நாடு என்பது பெயர். பல்லவர்களின் காலம் மற்றும் சோழர்களுக்கும் முற்பட்ட காலம் என்பதால் இத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலம் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

"உத்தரரங்கம்" என்ற பெயரே மருவி "ஆதிதிருவரங்கம்" என்றானது. மேலும், தமிழ்நாட்டில் எந்த ஆலயத்திலும் காண முடியாத அளவு மிகப்பெரிய தானிய களஞ்சியம் இத்திருக்கோவிலில் அமைந்துள்ளது.

🌺🌺 இலக்கியச் சான்று :-

வடமொழியில் எழுதப்பட்ட கந்தபுராணத்தில் உத்தர காண்டம் என்னும் பகுதியில் உமாமகேசுவர சம்வாதத்தில் முந்நூற்று ஓறாவது அத்தியாயம் முதல் முந்நூற்று ஆறாவது அத்தியாயம் வரை "உத்தரங்க மகாத்மியம்" என்னும் பகுதியில் இத்தலத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.

🌺🌺 மக்கள் கூற்று :-

108 திவ்யதேசத்தில் நடுநாட்டுத் திருத்தலங்கள் இரண்டில் திருக்கோவிலூர் மற்றும் திருவகீந்திபுரம் ஆகிய இரு தலங்களை விடத் தொன்மையான தலம் "ஆதிதிருவரங்கம்" ஆகும்.

ஆகவே இந்த இரு தலங்களையும் பாடியுள்ள "திருமங்கையாழ்வார்" இத்தலத்தின் மீதும் பாடியுள்ளார் என்று மக்கள் கூறும் சொல குறிப்புகள் நம்ப வைக்கிறது.

🌺🌺 ஆழ்வார் கூற்று :-

திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியில் காவிரி சூழ் தென்னரங்கம் என்று சில பாசுரங்களையும், "சேல் உகளும் (மீன்கள் விளையாடும்) வயல் புடை", "சூழ்த்திருவரங்கத்தம்மான்" என்று சில பாசுரங்களையும் பாடியுள்ளார்.

ஆகவே, தென்னரங்கம் என குறிப்பிடப்படுவது 'திருச்சி திருவரங்கம்' என்றும் 'திருவரங்கத்தம்மானே' என்று குறிப்பிடப்படுவது 'ஆதிதிருவரங்கம்' என்றும் இவ்வூர் வைணவ அடியார்களின் கருத்து.

பெரிய திருமொழி, ஐந்தாம் பத்து, எட்டாம் திருமொழியிலுள்ள பத்து பாசுரங்கைளும் இத்தல வரலாற்றையே குறிக்கின்றன.

அதிலும் 9 ஆம் பாசுரத்தில் தென்னை மன்னவன் அருள் பெற்ற வரலாற்றையும் திருமங்கையாழ்வார் பதிவு செய்துள்ளார்.

"துளங்கு நீண்முடி அரசர்தங் குரிசில்
தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்ககு
உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங்
கோடு நாழிகை யேழுட னிருப்ப,
வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச்
செய்த வாறடி யேனறிந்து, உலகம்
அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே!!!"

இப்பாடலில் ஆழ்வார்கள் மற்றவர்க்கு அருள் செய்தவாறு காட்சி தருவதாகக் குறிப்பிடுகிறார். இத்தல இறைவனும் அவ்வாறே கைகளை உயர்த்தி அருளிய நிலையில் காட்சி தருகிறார்.

ஆனால், திருச்சி திருவரங்கப் பெருமான் வேறு விதமாகச் சயனித்துள்ளார். எனவே இந்த பத்து பாடலும் இத்தலத்தைக் குறிப்பதாக இவ்வூர் மக்கள் கூறுவது உறுதியாகிறது.

ஆகவே, ஆழ்வார் கூற்று, கந்த புராணச் சான்று, கல்வெட்டுச் சான்று, தலவரலாற்றுச் சான்று என அனைத்தும் ஒரே வரலாற்றைக் கொண்டுள்ளதால் ஆதிதிருவரங்கம் திருத்தலமும் திவ்யதேசம் என்பதில் மாற்றமில்லை.

அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருவடிகளே சரணம்.

அருள்மிகு அரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 வழித்தடம்:-

விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலுக்கு ஏராளமான பேருந்து வசதி உண்டு. விழுப்புரம் - காட்பாடி இரயில் மார்க்கத்தில் திருக்கோவிலூர் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

🌺🌺 நாளைய பதிவில்:-

தொண்டை நாட்டின் முதல் திவ்யதேசமான அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் - திருக்கச்சி, அத்திகிரி திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment