Thursday, November 19, 2020

காஞ்சிபுரம் இட்லி

 காஞ்சிபுரம் கோவில் இட்லி 🟢

(பாரம்பரிய வரதராஜ பெருமாள் கோவில் செய்முறை)

தேவையானவை : தோல் நீக்கிய உளுந்து - 500 கிராம், பச்சரிசி - 750 கிராம், நெய் - 400 கிராம், வெந்தயம் - 100 கிராம், சீரகம் - 100 கிராம், மிளகு - 100 கிராம், சுக்கு - 50 கிராம், தயிர் - 50மிலி, உப்பு - தேவைக்கு

செய்முறை : பச்சரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை 3 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு அத்துடன் தயிர் சேர்த்து மாவை நறநறவென அரைத்து அந்த மாவில் சுக்கு, மிளகு, சீரகம்,உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு கலக்கி 8 மணி நேரம் புளிக்கவைக்கவும்.

பிறகு மந்தாரை இலை அல்லது வாழையிலையை மூங்கில் குடலையில் இட்டு மாவை ஊற்றிக்கொள்ள வேண்டும். கோவிலில் தயாரிக்கப்படும் இட்லி வேக 2 முதல் 3 மணி நேரங்களாகும் எவ்வளவு வேக வைக்கிறோமோ அவ்வளவு பக்குவமாக இட்லி பிரமாதமாக இருக்கும். ருசியான சத்தான பாரம்பரிய காஞ்சிபுரம் கோவில் இட்லி இது.

“காஞ்சிபுரம் இட்லி வரலாறு”

வரதராஜ பெருமாள் கோயிலில், பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி மிகவும் பிரசித்தி பெற்றது.  இது மட்டுமல்லாமல் தோசையும் வடையும் நைவேத்தியம் செய்யப்படுகின்றன. 

இரண்டு இட்லியும் மிளகாயும் நல்லெண்ணெயும் சேர்க்காமல், மிளகும் நெய்யும் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.பெருமாளுக்கு இரண்டு இட்லிகளையும் நைவேத்தியம் செய்த பிறகு, 

ஓர் இட்லி கோயில் கைங்கர்யம் செய்பவர்களுக்கும், மற்றொரு இட்லி கட்டளைதாரருக்கும் கொடுக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தோசையும் வடையும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன.

15-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு வழிப்பட்ட நிவந்தம் ஒன்று, கோயிலில் தாயார் சந்நிதிக்கு எதிரில் கல்வெட்டாகப் பொறிக்கப் பட்டிருக்கிறது. வரதராஜ பெருமாளுக்கு முதன்முதலில் இட்லி நைவேத்தியம்..

செய்தவர், கிருஷ்ணரின் எட்டு பக்தர்களில் ஒருவரான வல்லபாச்சார்யர் என்று சொல்கிறார்கள். அவர்தான் பெருமாளுக்கு மிளகும் சுக்கும் சேர்த்த இட்லியை மந்தாரை இலையில் நைவேத்தியம் செய்திருக்கிறார். 

அன்று முதல் இந்தப் பழக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இன்று இட்லியை மூங்கில் குடலையில் மந்தாரை இலையை வைத்து இட்லியை வேக வைக்கின்றனர். மந்தாரை இலை கிடைக்காத காலத்தில் வாழையிலை பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment