Sunday, November 8, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 43 திருக்கச்சி, அத்திகிரி (காஞ்சிபுரம்).

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 43 🌹🌹🌹


தொண்டை நாட்டின் 22 திவ்யதேசங்களில் முதல் திவ்யதேசம்.


அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் :-

திருக்கச்சி, அத்திகிரி (காஞ்சிபுரம்).
மூலவர்: பேரருளாளன், வரதராஜர், தேவாதிராஜன், தேவப் பெருமாள், அத்தியூரான்.
தாயார்: பெருந்தேவி தாயார், மஹாதேவி
உற்சவர்: வரதராஜ பெருமாள்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: புண்யக்கோடி விமானம்
தீர்த்தம்: அனந்தசரஸ், பொற்றாமரைக்குளம், ஸ்ரீ பாஸ்கர தீர்த்தம், ஸ்ரீ வராக தீர்த்தம், ஸ்ரீ பிரம்ம தீர்த்தம்
மங்களாசாசனம்: பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ பெருந்தேவியார் ஸமேத ஸ்ரீ பேரருளாள (ஸ்ரீ வரதராஜன்) ஸ்வாமிநே நமஹ.
ஊர்: காஞ்சிபுரம்


🌺🌺 திருக்கச்சி:-

கச்சி என்பது தமிழ்ச்சொல். காஞ்சி என்பது வடசொல். இவ்வூர் அக்காலத்தில் கச்சி மாநகர் என்றும், பிற்காலத்தில் காஞ்சிபுரம் என்றும் பெயர் பெற்று விளங்குயது.

மேலும், தொண்டை நாட்டின் தலைநகராக விளங்கியது கச்சி மாநகர் என்பது குறிப்பிடத்தக்கது. வைணவர்கள் 108 திவ்யதேசங்களில், மூன்று திவ்யதேசங்களை மட்டும் கோவில், பெருமாள் கோவில், மலை என்று சிறப்பித்துக் கூறுவர்.

அதில் கோவில் என்பது பூலோக வைகுண்டமான திருவரங்கத்தையும், மலை என்பது திருவேங்கடம் என்னும் திருமலை திருப்பதியையும், பெருமாள் கோவில் என்பது காஞ்சி வரதராஜர் கோவிலையும் குறிக்கும்.

கச்சி மாநகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருமால் திருத்தலம் என்பதால் "திருக்கச்சி" என்பது பெயர். மேலும், அத்திகிரி என்ற பெயரும் உண்டு. அத்திகிரி என்ற மலை மீது இறைவன் காட்சி தந்து காஞ்சி நகரையே ஆளுகின்றார்.

🌺🌺 வரதராஜ பெருமாள் பெயர்க் காரணம்:-

ஒருமுறை பிரம்மா காஞ்சியில் தன்னையே படைத்த திருமாலை வணங்கி மிகப்பெரிய அளவில் யாகம் நடத்தினார். அச்சமயம் அவருடைய பத்தினியாகிய கலைவாணியை விடுத்து யாகம் செய்யத் தொடங்கினார்.

இதனை அறிந்த கலைவாணி மிகவும் கோபம் கொண்டு யாகத்தைத் தடுக்க பல வகைகளில் முயற்சி செய்தாள். பிரம்மாவின் வேண்டுகோளின் படி, திருமால் யாகம் தொடர அருள் புரிந்தார்.

அச்சமயத்தில் வசிஷ்டர் உள்ளிட்ட முனிவர்கள் அங்கு வந்து கோபம் கொள்ளாது, உலகத்தின் நன்மைக்காக கலைவாணியும் இணைந்துயாகத்தை நன்முறையில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பின்பு கலைவாணியும் யாகத்தில் கலந்து கொள்ள யாகம் பூர்த்தியானது.

உடனே, யாக குண்டத்திலிருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அத்திகிரி என்னும் மலை மீது காட்சி தந்து அருளினார். பிரம்மாவிற்காக வரம் தர வந்த பேரின்பக் பெருங்கடல் என்பதால் இத்தல இறைவனுக்கு "வரதராஜ பெருமாள்" என்பது திருநாமம். பெருமாளுக்கு உகந்த தேவி என்பதால் "பெருந்தேவி தாயார்" என்பது அன்னையின் திருநாமம்.

🌺🌺 யோக நரசிம்மர்:-

அத்திகிரி மலையின் கீழ் முகப்பில் அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமி காட்சி தந்து அருளுகிறார். அதுவும் குடைவரை மூர்த்தியாக காட்சி தருகிறார்.

🌺🌺 அத்திவரதர்:-

கோவிலின் முகப்பு இராஜகோபுரத்தை கடந்ததும், வடக்கு புறமாக உள்ள நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள ஆனந்த புட்கரணி திருக்குளத்தில் இரண்டுநீராழி மண்டபங்கள் உள்ளன.

தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது. அதில் மிகப்பெரிய அத்திமரத்தால் ஆன அத்திவரதராஜ பெருமாள் சயனத் (கிடந்த) திருக்கோலத்தில் குடி கொண்டுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியில் எடுத்து வந்து ஒரு மண்டலம் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

பிறகு, மீண்டும் பெருமாள் நீருக்கடியில் உள்ள மண்டபத்திற்கு திரும்பிவிடுவார். இதற்கு முன் 1979 ஆம் ஆண்டு காட்சி தந்து அருளினார். அடுத்ததாக 2019 ஆம்ஆண்டு தரிசனத்திற்காக ஆவலாக இருக்கிறோம் பக்த கோடிகளான நாம் அனைவரும்.

🌺🌺 பல்லி தரிசனம்:-

சிருங்கி பேரர் என்னும் முனிவருக்கு இரு மகன்கள் இருந்தனர். இருவரும் கௌதம முனிவரிடம் சீடர்களாக மிகவும் அலட்சியமாக இருந்தனர். ஒருநாள் வழிபாட்டிற்காக தீர்த்தம் கொண்டு வந்த போது அதில் பல்லிகள் இறந்து கிடப்பதைக் கண்டு கோபம் கொண்ட முனிவர் பல்லிகளாகும்படி சபித்து விட்டார்.

பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் சாப விமோசனம் பெற்றனர். உங்களை தரிசிக்க வருபவர்கள் எங்களைத் தரிசித்தால் சகல தோசம் நீக்கி அருளும்படி வரம் பெற்றனர்.

அவ்வாறே கோவிலில் உள்ள மூலவர் சன்னிதியின் பின்புறம் உள்ள தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி ஆகியவற்றை தரிசிப்பவர்கள் சகல தோசங்களிலும் இருந்து விடுபடுவர் என்பது ஐதீகம்.

இத்திருக்கோவிலில் வரம் பெற்ற இருவரே சூரியன் மற்றும் சந்திரன் என்பது ஐதீகம். தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லிகளாக இருக்கும் சூரியன் மற்றும் சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோசங்களும் கிரகண தோசங்களும் விலகி நன்மைகள் உண்டாகும்.

நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றி வந்து வழிபடுகிறார்கள்.

🌺🌺 கிணற்றுக்குள் வரதர்:-

சித்ரா பௌர்ணமியன்று சுவாமிக்கு பாலாற்றில் திருமஞ்சனத்துடன் பூஜைகள் நடைபெறும். பிறகு சுவாமி, அருகிலுள்ள நடவாவி கிணற்றுக்குள் எழுந்தருள்வார்.

மண்டபம் போன்ற உள் கட்டமைப்பைக் கொண்ட வித்தியாசமான அக்கிணற்றில் பெருமாள் எழுந்தருள்வார். இந்நாளில் மட்டும் கிணற்று நீர் வெளியேற்றப்படும். கிணற்றுக்குள்ளேயே சுவாமி வலம் வருவார்.

🌺🌺 மங்களாசாசனம்:-

இத்திருக்கோவிலில் மூன்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். பூதத்தாழ்வார் - 2 பாசுரம், பேயாழ்வார் - 1 பாசுரம், திருமங்கையாழ்வார் - 4 பாசுரம் என மொத்தம் 7 பாசுரங்கள் பாடியருளியுள்ளனர்.

அத்தியூரான் புள்ளை யூர்வான் அணிமணியின்
நித்திசேர் நாகத்தின்மேல்
துயில்வான் மூத்திமறையாவான் மாகடல்
நஞ்சுண்டான்தனக்கும்
இறையாவான் எங்கள்பிரான்.

என்று பூதத்தாழ்வார் மங்களாசாசனம் பாடியருளியுள்ளார்.

🌺🌺 சிறப்புகள்:-

தொண்டை நாட்டில் முதன்மை பெற்று விளங்கும் திவ்யதேசம். தேவப்பெருமாள் நின்ற கோலத்திலும், அத்தி வரதர் கிடந்த கோலத்திலும் அருள் புரியும் திவ்யதேசம். நரசிம்மர் குடைவரை மூர்த்தியாக அருள்புரியும் திருத்தலம். தேவப்பெருமால் அத்திகிரி மலையில் காட்சி தருகிறார். தங்கப்பல்லி தரிசனத்தால் தோசங்களை அகற்றும் தலம். அத்தி வரதராஜர் 40ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தருகிறார். திருமகள் தாயார், பெருந்தேவி தாயார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம். மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம்:-

காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்.

அருள்மிகு வரதராஜ பெருமாள் திருவடிகளே சரதம்.
அருள்மிகு பெருந்தேவித் தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில்:-

அருள்மிகு அட்டபுயக்கர பெருமாள் திருக்கோவில் - திருஅட்டபுயக்கரம் திருக்கோவிலைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment