மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 12
(வெங்கடேசன்)
சந்தர்பூரில் கடைசிநாள் ட்ரெய்ன் ஏற திட்டம் போட்டது ,அந்த ஊரில் தங்கி சுற்றிப்பார்க்க..ஆனால் ஜெய்ன் கோயிலில் வசதியாக இடம் கிடைத்திருக்கும் போது அதை விட்டு மீண்டும் லக்கேஜை கொண்டு போய் 20 கிமீ தூரமுள்ள சந்தர்பூரில் இடம் பார்ப்பதை விட அங்கு சுற்றிப்பார்த்து இரவு இங்கேயே திரும்பி விடலாம் என திட்டத்தை மாற்றிக்கொண்டேன்…
கூகுள் பார்த்து காளி கோயில்,மற்றும் சில கோயில்கள்,ஃபாரஸ்ட் போவது என முடிவு செய்து கொண்டேன்.
காளி கோயிலுக்கு மேட்சாக சிகப்பு புடைவையுடன் சுஜாதா ....கிளம்புகிறாள்.
சந்தர்பூர் பஸ்ஸடாண்டிலிருந்து ஆட்டோ பிடித்து மகாகாளி கோயிலில் இறங்குகிறோம்...வாசலில் சிங்கச்சிலையில் போட்டோ எடுத்துக்கொண்டு க்யூவில் நிற்கிறோம்...பின்னால் தமிழ்க்குரல் கேட்டு பேச்சுக்கொடுத்ததில் அங்கு கூட ஒரு தமிழ்க்குடும்பம் இருப்பது அறிய முடிகிறது.
அம்மன் மாகாளி தரிசனத்திற்குப்பின் பாதாள அறையில் படுத்த நிலையில் ஒரு அம்மன்(ஒரு அரசன் அம்மனின் உக்ரகத்தை குறைக்க சிறை வைத்ததாக கதையாம்)....குறுகிய படிகளில் இறங்கி சேவித்தோம். கோயில் அருகில் ஒரு விட்டலரையும் தரிசித்தோம்
அங்கிருந்து அங்கலேஷ்வரர் கோயிலுக்கு போகும் வழியில் ஆற்றில் இறங்கி இயற்கையை ரசித்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்..
அங்கலேஷ்வரர் பழமையான கோயில்..இங்கும் பூமிக்கடியில் ஒரு பூசாரினி பூஜை செய்ய சிவன் அருள் பாலிக்கிறார்...கோயிலின் மேல்தளத்தில் ஏறி அருகிலுள்ள கோட்டையையும் வீடியோ எடுத்துக்கொள்கிறோம்…அருகில் 13 ஆம் நூற்றாண்டின் கோண்டு மன்னரான காண்ட்க்யா பல்லால் சா என்பவரால் நிறுவப்பட்ட ஒரு கோட்டை.
அரண்மனை கோட்டைக்குள்ளும் நுழைந்து இராணி குளிக்கும் இடத்தை (சுஜாதாவுக்கு தெரியாமல்) எட்டிப்பார்க்கிறேன்.
பக்க வழியாக கோட்டையை சுற்றிப்பார்க்கிறோம்..
நேரம் 12 மணி. பின் எதிரில் இருந்த சீக்கிய குருத்வாரா உள்ளே நுழைந்து சப்பாத்தி பிரசாதம் கிடைக்குமா என நோட்டம் விட்டு தரிசனம்(?) செய்து வெளியே வந்து கூகுள் காட்டிய பாலாஜி மந்திர் வழி கேட்கிறோம்…
சந்தர்பூர் ஆற்றின் மறுகரையில் பாலாஜி மந்திர் இருப்பதாகவும் பாலம் கட்டப்பட்டு கொண்டிருப்பதாகவும் 200/- கொடுத்தால் ஆற்றின் ஒருகரை வரை ஆட்டோவில் சென்று தாமே குறுக்கே நடத்தி அழைத்துச்சென்று தரிசனம் செய்வித்து பஸ்ஸ்டாண்டில் கொண்டு விடுவதாக ஒரு ஆட்டோக்காரர் சொல்லவே வேறு வழி இன்றி சம்மதிக்கிறோம்..தரைப்பாலத்தில் முழங்கால் வரை தண்ணீரில் ஆட்டோக்காரர் வழிகாட்ட தற்காலிக மண்பாலத்தில் நடந்து திருப்பதி தேவஸ்தான கோயிலில் பெருமாளை சேவிக்கிறோம்..பக்திக்கும் பசிக்கும் புளியோதரை ப்ரசாதம் .,
அடுத்து 52 கிமீ பஸ்ஸில் சென்றால் தடோபா ...
புலிகள்தான் தடோபாவின் சிறப்பம்சம். சுமார் 75 புலிகள் இருக்கின்றன. வனத்துறையின் ஜீப்பில் காட்டிற்குள் பயணம் செய்து, புலிகளை நேரடியாகப் பார்க்கலாம்.
தடோபா சரணாலயம், தடோபா, மொஹர்லி, கோல்சா என மூன்று சரகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொதுவாகக் காடுகளை 'மையப் பகுதி' (Core zone), அதைச் சுற்றியுள்ள' இடைப் பகுதி' (Buffer zone) என வனத்துறையினர் இரு பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
மீண்டும் ஆற்றைக்கடந்து பஸ்ஸ்டாண்ட் வந்து சந்தர்பூர் வன விலங்கு சரணாலயம் செல்ல எந்த பஸ் என தெரியாது எல்லா பஸ்ஸிலும் கூட்டம் நெரித்துத்தள்ள, பஸ்ஸுக்கு ஒரு மணிநேரம் காத்திருந்து வருவதாக தெரியாமையால் அப்படியே வந்தாலும் 4 மணிக்கு மேல் காட்டில் என்ன பார்ப்பது? புலியோடவே குடித்தனம் செய்யும் நான் புலியை பார்த்து என்ன செய்ய போகிறேன் என கூகுளை யோஜனைக்கேட்டதில் உள்ளூரிலேயே கஜானன் மந்திர் போகச்சொன்னது.
100 ரூபாய் பேசி ஆட்டோ அமர்த்தி எங்கே போவது என அவனுக்கு புரிய வைக்க முடியாமல் (எங்களுக்கே தெரிந்தால்தானே) அனாவசியமாய் ஊரைச்சுற்றி குட்டியான யாருமே இல்லாத ஒரு கோயிலிலில் கன்னத்தில் போட்டுக்கொண்டு (வேண்டுதல் போல என ஆட்டோக்காரன் விசித்திரமாய் பார்க்க)மீண்டும் பஸ்ஸ்டாண்ட் வருவதற்கு முன்னால் நல்ல ஓட்டலில் நிறுத்தச்சொன்னோம்...
அருமையான வட இந்திய தாளி உணவு உண்டு சந்தர்பூரை வெற்றி கொண்ட திருப்தியுடன் பத்ராவதி வந்து சேருகிறோம்...
ரூமில் ரெஸ்ட் எடுத்து மாலை சமணக்கோயிலை மீண்டும் சுற்றி வந்து பார்ஸ்வநாதரை தரிசித்தபின் வழக்கப்படி ஐஸ்க்ரீம் சாபுதானா வடை இரவு உணவாக….கனவில் பார்த்த காளியும் பார்க்காத புலியும்...
படம் சந்தர்பூர் காட்சிகள்
1,2,3)காளி கோயில் முன்,காளிமாதா விக்ரகம்,படுத்த நிலையில்
4)விட்டலன் கோயில்
5,6)ஆங்கலேஷ்வர்ஆற்றங்கரை
7,)பாலாஜி கோயில்
No comments:
Post a Comment