Saturday, November 7, 2020

மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 7

 மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 7

மீண்டும் அடுத்து எங்கு போவது என கூகுளைப்பார்த்து அமராவதி, வார்தா இரண்டில் பூ போட்டுப்பார்த்து வார்தா என முடிவு செய்தோம்..

நேரம் மாலை 4.00 வார்தா பஸ்ஸைக்காணோம்...அரை மணிக்குப்பிறகு எக்கச்சக்க கூட்டம் நெட்டித்தள்ள வெற்றிகரமாக பின்னால் ஒரு சீட் பிடித்தேன்..

கரடு முரடான ரோடில் தூக்கித்தூக்கிப்போட ஒரு வழியாக வார்தா வந்து சேர்ந்தோம். 

வார்தா பஸ் ஸ்டாண்டில் லக்கேஜுடன் இவளை உட்கார வைத்துவிட்டு வழக்கப்படி லாட்ஜ் தேடி நடக்க ஆரம்பித்தேன். சுமார் ஒரு கிமீ நடந்து கிடைத்த சுமார் லாட்ஜில் வேறு வழியின்றி புக் செய்து ஒரு ஆட்டோவில் இவளை அழைத்து வந்து காட்டியதில் (பழைய துணி மூட்டைகளை வழியெல்லாம் வைத்திருந்ததை பார்த்து கடுப்பாகி)முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க எப்படியோ சமாதானப்படுத்தி பக்கத்தில் லஷ்மி நாராயணா பெருமாள் கோயில் அழைத்து சென்றேன். 

பின் ஒரு ஓட்டலை தேடிச்சென்று இட்லி ஆர்டர் செய்தோம். கல்லாக இருந்ததால் சாப்பிட முடியாமல் (தென்னிந்திய உணவுக்கு ஆசைப்படலாகாது என உணர்ந்து)பக்கத்தில் இருந்தவர் சாப்பிட்டுக்கொண்டிருந்த சாபுதானா   வடை என்ற புதிய சிற்றுண்டி சாப்பிட்டோம்.  ஜவ்வரிசியில் செய்த வடை. சூடாக மொறு மொறு வென இருந்தது. 

அதன் செய்முறை கேட்டுக்கொண்டோம். (அடுத்த நான்கு நாட்களுக்கு இதுதான் இரவு உணவு என தெரியாமலேயே)

உருளை சாபுதானா வடை

என்னென்ன தேவை?

  உருளைக்கிழங்கு - 5, 

ஜவ்வரிசி - 1 கப், 

எலுமிச்சைச்சாறு - 1/2 பழம், 

சோம்பு - 1 டீஸ்பூன், 

உப்பு, எண்ணெய் - தேவைக்கு, 

பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 3, 

கொத்தமல்லித்தழை - சிறிது, 

முந்திரிப்பருப்பு - 20.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊறவைக்கவும். முந்திரியை தனியாக ஊறவைத்து, இரண்டையும் ஒன்றாக கலந்து அரைத்துக் கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்கில் அரைத்த ஜவ்வரிசி, முந்திரி கலவை, உப்பு, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய், சோம்பு, எலுமிச்சைச்சாறை சேர்த்து பிசையவும். சிறு உருண்டையாக எடுத்து வடையாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

 மறுபடி லாட்ஜ் சென்று அவள் பெட் மேலே இருந்த போர்வையை சந்தேகமாய் பார்த்ததால் எனது வேஷ்டிகளை அதன் மேல் போர்த்தி ஒரு ராத்திரி சமாளிக்க கேட்டுக்கொண்டேன். 

மறுநாள் 6.30 க்கு குளித்து ரெடியாகி கூகுள் காட்டிய உள்ளூர் ஹனுமான் ,சிவன்,ராம் மந்திர்களுக்கு அங்குமிங்கும் வழி கேட்டு சென்று வழிபட்டு 

ஜென்ம சாபல்யம் அடைந்தோம். 


அடுத்து கீதா மந்திர் 

‘வார்தா ‘காந்தியடிகளுடன் தொடர்புடைய ஊர். அவரது ஆஸ்ரமம் மற்றும் கீதா மந்திர் 

பார்க்க வேண்டும் என்பதாலேயே இந்த ஊரை தேர்ந்தெடுத்தேன். 

எனவே ஒரு ஆட்டோவில் கீதா மந்திரில் கொண்டு விடச்சொன்னேன். 

கீதா மந்திர்

இது விக்ரகமோ கூறையோ இல்லாத கோயில். கீதையின் முக்கிய 18 அத்யாயங்கள் அழகான புல் வெளியைச்சுற்றி கிரானைட் கற்களில் பொறிக்கப்பட்டு கீதையுடன் தொடர்புடைய சிற்பங்களும் அழகான பூங்காவும் கொண்ட அமைப்பு 

ஆசார்ய வினோபா அவர்களால் 1980 ல் திறக்கப்பட்டதாக அறிய முடிகிறது. வினோபாவின் ஆஸ்ரமமும் உள்ளது. 

விஸ்வ சாந்தி ஸ்தூபா...

ஃப்யூஜி என்பவரால் புத்தரின் நினைவாக வெள்ளை மார்பிளில் கட்டப்பட்ட ஓர் அமைப்பு. 

நான்கு புறமும் புத்தர் சிலைகள். 

Peace Pagoda (அமைதிக்கோயில்)என எழுதியதைப்பார்த்தவுடன் காலை டிபன் சாப்பிடாது பசியில் பகோடா நினைவுதான் வந்தது. பையில் கிடந்த நசுங்கிப்போன வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு 

வெளியில் வந்து எதிரே ஒரு வீட்டில் ரெஸ்டாரண்ட் என எழுதியதைப்பார்த்து இட்லி?தோசை?,என ஜாடையில் கேட்டு கேக்தான் என்கிறான். 

எதையோ கொறித்து காபியை குடிக்கிறோம். 

அடுத்து காந்தி ஆஸ்ரமத்துக்கு வழி கேட்கிறோம். ஆட்டோ இங்கு வராது எனவும் ஒரு கிமீ நடந்து சென்றால் முச்சந்தியில் வரும் என்கிறான். 

வாரதாவின் நகர அமைப்பை ரசித்தவாறே நடக்கிறோம். 

பின் ஆட்டோ ஏறி காந்தி ஆஸ்ரமத்துக்கருகில் இறங்குகிறோம்.  

படங்கள். விஸ்வ சாந்தி ஸ்தூபா ,புத்தர் சிலைகள் முன்






No comments:

Post a Comment