Saturday, November 7, 2020

மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 10

 மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 10

மிக பிரமாண்டமான அரண்மனை தோற்றத்தில் சலவைக்கல் அற்புதமாக இருந்த ஜைனர் கோயில் உள்ளே அமைதியான சூழ்நிலையில்,கோயிலின் ப்ரமாண்டத்திற்கு எதிராக ஒரு குருக்களைத்தவிர ஏறக்குறைய யாருமே இல்லை. 

தூரத்து லௌட் ஸ்பீக்கர் எதோ சமண மந்த்ரங்களை உச்சரிக்க  அபூர்வமாக ,தமிழ்நாட்டிலிருந்து அங்கு யாருமே கேள்விப்படாத  இந்த ஊருக்கு வந்து வணங்கிய எங்களை பார்ஸ்வநாதர் யார் இவர்கள் என உற்றுப்பார்க்கிறார்..நாங்களும் தூண்களிலும்,உச்சி மாடங்களிலும் உள்ள சிற்பங்களையும்,சன்னதிகளையும் சுற்றிப்பார்க்கிறோம். 

கிறித்தவ, இஸ்லாமிய மதங்கள் நமக்கு முற்றிலும் அன்னியம்..பௌத்த ,சீக்கிய கோயில்களுக்கும் போயிருக்கிறேன்..அவைகள் கூட வழிபாட்டு முறைகள் முற்றிலும் அன்னியப்பட்டு இருக்கும்..

ஆனால் நான் பார்த்த சமணர் கோயில்கள் நம் இந்துக்கோயில்களின் உணர்வைத்தருகின்றன...

சமணம், கடவுள் பற்றிப் பேசவில்லை. பந்தம் என்கிற கட்டுகளில் இருந்து விடுபட்டு, மோட்ச நிலையை அடைந்த உயிரே, கடவுள் என்பது சமணக் கருத்து. சைவம், வைணவம் போன்ற சமயங்களின் கடவுள்கள், உயிர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிக் கடவுள் எனக் கூறப்படுவதுபோல சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் கூறப்படவில்லை.

சமண சமயத்தில் கொள்கையைப் பரவச் செய்வதன் பொருட்டு, தீர்த்தங்கரர்கள் எனும் பெரியார்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள். இதுவரை 24 தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும், இனியும் தோன்றுவார்கள் என்றும் சமணம் கருதுகிறது. தீர்த்தங்கரர்களையே கடவுளர் என்று சமணம் வழங்குகிறது.

சமண சமயக் கொள்கைகளை விருஷப தேவர் முதன்முதலில் கொண்டு வந்தார். வரலாற்று ஆசிரியர்கள் வேறு மாதிரிச் சொல்கிறார்கள். பார்சுவ நாதர் சமண சமயத்தை உருவாக்கினார் என்றும் வர்த்த மான மகாவீரர் இந்த மதத்தைச் சீர்திருத்தி அமைத்தார் என்றும் கூறுவார்கள். சமணர்களுக்கும் ராமாயணம், மகாபாரதங்கள் இருக்கின்றன. பாண்டவர் காலத்துக் கண்ணபிரான் நேமிநாதரின் உறவினர் மட்டுமல்ல; அடுத்த தீர்த்தங்கரர் கண்ணபிரான் என்றும் சமணர்கள் கருதுகிறார்கள்.

எனவே கோயில்களில் உள்ள சிற்பங்களில் மகாவிஷ்ணு,மகாலஷ்மி இவையெல்லாம்  இந்துக்கோயில்களில் இருப்பதான உணர்வைத்தருகிறது…

தரிசனம் முடித்து கோயிலை சுற்றிப்பார்த்து வருகையில் தங்குவதற்கு நூற்றுக்கணக்கான அறைகள் கட்டிவைக்கப்பட்டிருந்தன..கோயிலின் சூழ்நிலை பார்த்து தங்குவதற்கு இடம் கிடைத்தால் புதிய அனுபவம் கிடைக்குமென ஆபீஸ் ரூம் விஜாரித்து செல்கிறோம்..

அமரச்சொல்லி ஒரு பெரியவர் ஆங்கிலத்தில் விஜாரிக்கிறார்..

சமணர்களுக்கு இலவசம் எனவும் ,இந்துக்கள் என்பதால் நன்கொடை 300/- தந்து தங்கிக்கொள்ளலாம் எனவும் சமண உணவும் முன்னரே சொன்னால் கிடைக்கும் எனவும் கூறுகிறார்...ரூம் சென்று பார்த்து திருப்தியாகி மறுநாள் வருவதாக புக் செய்கிறோம்…

இரவு உணவு பாலாஜி ஓட்டல் அருகே ஒரு மெஸ்ஸில் அன்லிமிடட் தாலி30/-(எப்படி கட்டுப்பிடி ஆகும் ?) சாதத்துடன்  gகட்டி என்னும் மோர்க்குழம்பு போன்ற எதையோ கலந்து விழுங்குகிறோம்..

இரவு நிம்மதியான தூக்கம்...கனவில்,நாக தேவனும்,பவானி அம்மனும் பார்ஸ்வநாதருடன் பவனி வருகிறார்கள். 

படம் சமணக்கோயில் உள்ளே







No comments:

Post a Comment