Friday, November 13, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 48 திருப்பாடகம்.

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 48 🌹🌹🌹

அருள்மிகு பாண்டவதூதர் திருக்கோவில்:-

திருப்பாடகம்.
மூலவர்: பாண்டவதூதர்
தாயார்: ருக்மணி, சத்யபாமா
உற்சவர்: பாண்டவதூதர்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: வேதகோடி விமானம், சக்கர விமானம்
தீர்த்தம்: மத்ஸ்ய தீர்த்தம்
மங்களாசாசனம்: பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்.
நாமாவளி: ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமாதேவீ ஸமேத ஸ்ரீ பாண்டவதூதாய நமஹ.
ஊர்: காஞ்சிபுரம்.

🌺🌺 தலவரலாறு:-

பாண்டவர் வம்சத்தில் வந்த "சனமேசையர்" என்ற மன்னனும், அரித முனிவரும் பாண்டவர்களுக்காக தூது சென்று கௌரவர்களை நடுங்க வைத்த விசுவரூப காட்சியைக் காண விரும்பி, இத்தலம் அமைவிடத்தில் நீண்ட நாட்கள் தவம் இருந்தனர்.


அவர்களின் தவத்திற்கு மனமிறங்கிய பகவான் அந்த விசுவரூப திருக்கோலத்திலேயே காட்சி கொடுத்து அவ்வண்ணமே இங்கு எழுந்தருளினார்.


இதனால் இத்தல இறைவன் "பாண்டவ தூதப் பெருமாள்" என்ற திருநாமம் பெற்றார். முனிவர் அகத்தில் நினைத்துப் பாட அவ்வண்ணமே காட்சி தந்த இடம் என்பதால், இத்தலத்தின் அமைவிடம் "திருப்பாடகம்" எனப் பெயர் பெற்றது.

இத்தல இறைவன் கண்ணன் திருக்கோலம் என்பதால், இத்தல இறைவிக்கும், கண்ணனின் மனைவிகளான ருக்மணி தாயார், சத்யபாமா தாயார் என்பதே திருநாமம்.

தாயார்கள் இருவரும் தனித்தனி சன்னிதியில் அருள்கின்றனர்.

🌺🌺 அவதார நாயகன் :-

கண்ணன் அவதாரமான, ஐந்தாவது வேதமாகிய மகாபாரத்தில் பாண்டவர்களுக்காக ஐந்து கிராமங்களை பெறுவதற்காக பகவான் கண்ணன் "அஸ்தினாபுரம்" நோக்கி தூது சென்றார்.

அஸ்தினாபுர மன்னர் திருதராஷ்டிரன் மகனான வஞ்சக எண்ணம் கொண்ட துரியோதனன், ஊசிமுனை இடமும் தர மறுத்தது மட்டுமில்லாமல் அவரை அழிக்கவும் ஏற்பாடு செய்தான்.

வையகத்தையே காக்கின்ற வாசுதேவனான பரந்தாமனுக்கு வஞ்சகனின் எண்ணம் விளங்காமல் இருக்கப் போவதில்லை.

துரியோதனன், அரண்மனை விசாரணை மண்டபத்தில் ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்கி, அதில் ஆயுதம் ஏந்திய மல்லர்களை இருக்கச் செய்தான்.

பிறகு, அந்த பள்ளத்தை மூங்கில் பரண் கொண்டு மறைத்து, அதில் ஆசனத்தை வைத்து மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்தான்.

பாண்டவர்களுக்காகத் தூது சென்ற கண்ணனை மறைக்கப்பட்ட அந்த பள்ளத்தின் மீது இருந்த ஆசனத்தில் அமருமாறு வேண்டினான் துரியோதனன்.

பகவான் கண்ணன் அமர்ந்த போது, மூங்கில்பரன் முறிந்து ஆசனம் அப்பள்ளத்தில் விழுந்தது. அப்போது கண்ணபிரான் உடலை பெருக்கி இவ்வுலகமே அதிரும் வண்ணம் பிரம்மாண்டமான ரூபம் எடுத்தார்.

இறைவன் காட்டிய அக்கோலத்தால் ஈரேழு பதினான்கு லோகங்களும் நடுநடுங்கிப் போயிற்று.

அன்று அரண்மனையில் ஆசனத்தில் அமர்ந்த நிலையில் பகவான் எடுத்த காட்சியைப் போலவே, இத்தல பெருமாளும் காட்சி தருகிறார்.

🌺🌺 தலச்சிறப்பு :-

அருள்மிகு பாண்டவதூத பெருமாள் 25 அடி உயரத்தில் மிகப்பெரிய திருமேனியாக அமர்ந்த கோலத்தில் மிக அழகாக காட்சி தருகிறார்.

இத்தகைய காட்சி தமிழகத்தில் எங்குமே காண முடியாத சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

🌺🌺 சிறப்புகள் :-

பெருமாள் அமர்ந்த கோலத்தில் மிகப்பெரிய திருமேனியாகக் காட்சி தரும் ஒரே திவ்யதேசம்.

மகாபாரத வரலாற்றை உணர்த்தும் அற்புத திவ்யதேசம்.

கண்ணன் அவதாரத்தில் தோன்றிய ருக்மணி பிராட்டி காட்சி தரும் திவ்யதேசம்.

நான்கு ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்யதேசம்.

🌺🌺 மங்களாசாசனம் :-

பூதத்தாழ்வார் - 1 பாசுரம், பேயாழ்வார் - 1 பாசுரம், திருமழிசை ஆழ்வார் - 2 பாசுரம், திருமங்கையாழ்வார் - 2 பாசுரம் என ஆறு பாசுரங்கள் பாடியருளியுள்ளனர் இத்தல பெருமாளை.

"நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை
பாடகத்து அன்று வெஃகணை
கிடந்தது எண்ணிலாத முண்ணெலாம் அன்று
நான் பிறந்திலேன் பிறந்தபின்
மறந்திலேன் நின்றதும் இருந்ததும்
கிடந்ததும் என் நெஞ்சுள்ளே!!!".

- திருமழிசை ஆழ்வார்.


🌺🌺 வழித்தடம் :-

காஞ்சிபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். காஞ்சிபுர பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் அடையும் வண்ணம் அமைந்துள்ளது.

அருள்மிகு பாண்டவதூத பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு ருக்மணி தாயார் திருவடிகளே சரணம்.
அருள்மிகு சத்யபாமா தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில்:-

அருள்மிகு நிலாத்திங்கள் துண்ட பெருமாள் திருக்கோவில் - திருநிலாத்திங்கள் துண்டம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment