Saturday, November 7, 2020

மூன்று பெண்கள் - சுஜாதா

 மூன்று பெண்கள் - சுஜாதா கட்டுரை

என் வாழ்வில் முக்கியமான மூன்று பெண்களை பற்றி யோசிக்கத் தோன்றுகிறது. 

கோதை பாட்டி:

பள்ளி கல்லூரி நாட்களில் 10 வருடம் ஸ்ரீரங்கத்தில் பாட்டியுடன் கட்டுப்பாடாக வளர்ந்தவன் நான். அப்பாவை பணிநிமித்தம் அடிக்கடி மாற்றுவார்கள் என்று சொல்லி படிப்பின் தொடர்ச்சிக்காக பாட்டியிடம் அனுப்பப்பட்டேன். இது ஒரு லேசான காரணம்தான். 

அப்பாவுக்கு அடிக்கடி மாற்றம் ஏற்படவில்லை. என் தம்பி பெரும்பாலும் அவர்களுடன் தான் இருந்தான். படித்தான்.

பாட்டியின் கவனத்துடன் வளர்ந்தது ஒருவாறு என் பிற்கால மனோ நிலைகளையும், குணநலன்களையும் அமைத்தது என்பதில் சந்தேகம் இல்லை.

கோதையம்மாள் என்கிற ருக்மணி அம்மாள் என்று மணியார்டர் பாரத்தில் கையெழுத்துப் போடத் தெரிந்த பாட்டி, இருபத்தி மூன்றாவது வயதில் கணவனை இழந்தவள். 

நான்கு குழந்தைகளுடன் அப்பா வீட்டில் சரணடைந்து. அவர்களை வளர்த்து ஆளாக்கி ஒரு தலைமுறையை உருவாக்கி அடுத்த தலைமுறையான பேரப் பிள்ளைகளை காலேஜ் போகும் வயது வரை பார்த்தவள். 

வாழ்வில் பல சந்தோஷங்கள் சீக்கிரமே மறுக்கப்பட்டால் நிச்சயம் ஒரு தனிப்பட்ட கோபம் அவரிடம் இருந்தது வெறுப்பு இல்லை. பாசமும் கண்டிப்பும் இருந்தது.

என் சினேகிதர்களில் யார் பாடம் படிக்க வருகிறார்கள், யார் கதை பேச என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடுவாள். அடுத்த அறையில் நான் பாடம் படிக்கிறேனா, கதை படிக்கிறேனா என்பதை கண்டுபிடிக்கும் 'டெலிபதி’ இருந்தது. "பாடம் படித்தால் இரைந்து, சத்தம்போட்டு படி அப்போதுதான் மூளையில் ஏறும்" என்பாள்.

சாயங்காலம் காலேஜிலிருந்து திரும்பி வர லேட் என்றால் என்னதான் பிராக்டிகல் இருந்தது, வாலிபால் ஆடப்போறேன்,  நோட்ஸ் எடுக்க போனேன்  என்று சில சமயம் உண்மையான காரணங்களைச் சொன்னாலும் சினிமாவுக்குத்தான் போயிருக்கிறேன் என்ற தீர்மானமான முடிவுக்கு வருவாள். அதற்காக சில ஒற்றர்களையும் நியமித்திருந்தாள்.

“ கண்ணா, எங்க ரெங்கராஜனை காலேஜில் பார்த்தாயா?”

“ இன்னும் வரவில்லையா?”

“ ஏதாவது ஸ்பெஷல் கிளாஸா?”

“இல்லையே மாமி, அவனையும், தம்புவையும் கெய்ட்டி தியேட்டர் பக்கம் பார்த்த மாதிரி இருந்தது. ஒரு வேளை அங்க பஸ் சுலபமா கிடைக்கும்னு....."

"வரட்டும் அவன்"

வரும்போது பாட்டி பார்க்கும் பார்வையிலிருந்தே தெரிந்துகொண்டு உண்மையைக் கக்கிவிடுவேன். அதுதான் ஒரே வழி. இல்லையென்றால், "உங்கப்பனுக்கு இந்த க்ஷணம் கடுதாசி எழுதிடறேன். உன்னை என்னால வளர்க்க முடியாது. தத்தாரி ஆயிட்டே".....இத்யாதி அர்ச்சனைகள். 

பிரபந்தம் படிப்பாள். அர்த்தம் புரியாத விசிஷ்டாத்வைத காலாட்சேபங்களில் போய் உட்கார்ந்து கொள்வாள். 

இந்த சூழ்நிலையில் எப்படி என்னால் காதல், கண்ணால் பேசுதல் போன்ற மென்மையான சமாச்சாரங்கள் முடியும்?

பாட்டி தன்னுடைய அறுபத்தியிரண்டாவது வயதில் இறந்து போனபோது எத்தனை தூரம் என்னைக் காப்பாற்றியிருக்கிறாள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். 

ஒரு பெரிய சொத்துக்கு என்னை சுவீகாரம் கடுமையாக எதிர்த்துத் தடுத்திருக்கிறாள்.அந்த சுவீகாரம் நடந்திருந்தால் நான் மஹேந்திரமங்கலத்திலோ, குவளைக்குடியிலோ ஒரு பண்ணையாராக வெள்ளிச் சொம்பும், பன்னீர்ப் புகையிலையும், பத்தமடைப் பாயும், இஸ்பேட் ஆட்டமுமாக வளர்ந்திருப்பேன். எழுத்தாளனாகியிருப்பேனா? சந்தேகம்.

*******

என் அம்மா : 

பலபேர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். “உன் அப்பாவைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறாய். உன் அம்மாவைப் பற்றி அதிகம் எழுதவில்லையே?” என்று. 

அம்மா மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்து பரிபூரணமாக தன்னை அப்பாவின் தேவைகளுக்கும் பிடிவாதங்களும் ( இனிமேல் பட்டுப்புடவை கூடாது. கதர் தான்) அட்ஜெஸ்ட் செய்து கொண்டாள். 

அவள் மிக அழகாக இருந்ததும், அதனால் அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளும் எனக்கு அந்தரங்கமானவை. அம்மா மிக நன்றாக சமைப்பாள். எல்லா காரியங்களும் திறமையாக செய்வாள். தையல் ( எனக்கு சட்டை கூட தைத்திருக்கிறாள். லீவு நாட்களில் மட்டும் போட்டுக் கொள்வேன்) 

எம்பிராய்டரி, கூடை பின்னுவது எல்லாம் கொஞ்சம் செய்வாள். ஊட்டியில் எங்கள் வீட்டு எருமையை பால் கறந்து இருக்கிறாள். ‘ நில்லுடா’ என்று சொல்லி என் அருகில் இருந்த பாம்பை அடித்து இருக்கிறாள்  (சாகடித்து சம்ஸ்காரம் பண்ணினாள்) வீணை வாசிப்பாள். ஒரு தடவை அவளிடம் இங்க் பேனா திறக்க கொடுத்தபோது எந்தப் பக்கம் திருகுவது என்று தெரியாமல் நாக்கைக் கடித்துக்கொண்டு அதை டைட் செய்தே திறந்து விட்டாள்.

சின்ன வயசிலேயே கல்யாணம் செய்து கொண்டு விட்டதால் பள்ளிக்கூடப் படிப்பு அதிகம் இல்லை. தமிழில் கவிதை கலந்த ர, ற தப்புகளுடன் கடிதம் எழுதுவாள். 

ஆங்கிலம் கற்றுக்கொள்ள ரொம்ப ஆசைப்பட்டாள். என்னை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தாள். லிப்கோ ஆசானை வைத்துக்கொண்டு அப்பாவிடமும், தம்பியிடம், என்னிடமும் சொல்லித் தா என்று கெஞ்சி இருக்கிறாள். “ போம்மா…. உனக்கு வராது” என்று வெத்து அவசரங்களில் அந்த இன்பத்தை இழந்து விட்டோம். 

சொல்லித் தரலாம் என்று தீர்மானித்த போது இறந்து விட்டாள். இப்போதும் சில நாள் கனவுகளில் சொல்லித் தருகிறேன்.

*******

சுஜாதா : 

எங்கள் கல்யாணம் நிகழ்ந்து 37 வருடங்கள் ஆகின்றன. இன்னும் அவளை முழுமையாக புரிந்து கொண்டதாக சொல்ல முடியாது. அவ்வப்போது வியப்பாக ஏதாவது செய்வாள். இந்த கணந்தோறும் வியப்புதான் 

திருமண வாழ்க்கையில் எங்களுடன் வளர்ந்தது. டெல்லியில் கல்யாணமான புதிதில் அவளை எதிர் கடைக்குப் போய் ஒரு பல்பு வாங்கி வரச் சொன்னேன். 

நான் என் ரூமில் உட்கார்ந்து கொண்டு க்ராஸ்வேர்டு போட்டுக் கொண்டிருந்தேன். அவள் மாடிப்படி ஏறி வரும் போது கால் தடுக்கி அதை உடைத்து விட்டாள். உடைத்துவிட்டு ஓடிவந்து என்னிடம் மூச்சிரைக்க சொன்னாள், “ பல்பை உடைச்சுட்டேன். கொடுத்த காசு வேஸ்ட்”

நான் “ போனால் போகிறது, வேறு பல்பு வாங்கிக் கொள்ளலாம்” என்றேன்

இந்த பதில் அவளை பாதித்திருக்க வேண்டும். கண்களில் கண்ணீருடன், “ அதெப்படி உங்களுக்கு இப்படி ஒரு அலட்சியம்?” என்றாள்

“ ஏன்?”

"பல்பை நான் உடைச்சதுக்கு ஏன் என்னைத் திட்டலை?"

இப்படி ஒரு கோபமா?

========================

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.

(நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே கண்ணீருடன்  இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர்  என்று கேட்டு கோபித்து அழுதாள் - 

== சுஜாதா எழுதிய திருக்குறள் உரை) == 

என்கிற திருக்குறள்தான் ஞாபகத்துக்கு வந்தது.

No comments:

Post a Comment