Sunday, November 8, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 45 திருத்தண்கா (தூப்புல், காஞ்சி)

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 45 🌹🌹🌹


வைணவ ஆச்சார்யரான வேதாந்த தேசிகர் அவதரித்த திருத்தலம்.

பெருமாள் "தீபப்பிரகாசர்" என்ற திருநாமத்தில் காட்சி தரும் அற்புத திவ்யதேசம்.

அருள்மிகு தீபப்பிரகாசர் திருக்கோவில் :-

திருத்தண்கா (தூப்புல், காஞ்சி).
மூலவர்: தீபப்பிரகாசர், விளக்கொளிப் பெருமாள்
தாயார்: மரகதவல்லி
உற்சவர்: திவ்யபிரகாசர்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: ஸ்ரீகர விமானம்
தீர்த்தம்: சரஸ்வதி தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீமரகதவல்லீ ஸமேத ஸ்ரீ தீபப்பிரகாசய நமஹ.
ஊர்: தூப்புல்

🌺🌺 திருத்தண்கா:-

தண் என்றால் "குளிர்ச்சி" என்றும், கா என்றால் "சோலை" என்றும் பொருள். குளிர்ச்சி பொருந்திய சோலையில் அமைந்துள்ள தலம் என்பதால் இவ்விடம் "திருத்தண்கா" எனப் பெயர் பெற்றது.

இன்றளவும் நகரத்தின் நடுவே தலம் அமைந்து இருந்தாலும், அமைதியான சூழலில் விளங்குவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.

🌺🌺 தூப்புல்:-

சரஸ்வதி தேவிக்கு பெருமாள் இத்தலத்தில் காட்சி கொடுத்துள்ளார். தர்ப்பைப்புல் வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் காட்சி தந்ததால் இப்பகுதி "தூப்புல்" என்றும் "திருத்தண்கா" என்றும் அழைக்கப்படுகிறது.

ஆச்சாரியரான வேதாந்த தேசிகன் இங்கு அவதாரம் செய்ததால் அவர் "தூப்புல் வேதாந்த தேசிகன்" என அழைக்கப்பட்டார்.

🌺🌺 தலவரலாறு:-

ஒருமுறை பிரம்மா தனது தேவி சரஸ்வதி துணையின்றி இவ்விடத்தில் ஒரு யாகத்தைத் துவங்கினார். அதனால் கோபமடைந்த கலைவாணி யாகத்தைத் தகர்க்க பல வகைகளில் முயற்சி செய்தும் பலனில்லாமல் போனது.

உடனே கடும் கோபமுற்று சூரிய, சந்திர ஒளியை இழக்கச் செய்து பூவுலகை இருளில் ஆழ்த்தினாள்.

அத்தோடு நில்லாமல் அக்கினி ரூபமாக "மாய நலன்" என்ற அரக்கனையும், யாகத்தைத் தடுக்க அனுப்பினாள்.

அப்போது காக்கும் கடவுளான திருமால் அக்கினி ரூபமாக வந்த அசுரனை தீபமாக மாற்றி பிரம்மாவிற்கும் யாகசாலைக்கும் ஒளியைத் தந்தார்.

இவ்வாறு திருமால் அக்கினியைத் தீபம் போல் கையில் ஏற்றி நின்றதால் "தீபப்பிரகாசர்" என்றும் "விளக்கொளிப் பெருமாள்" என்றும் திருநாமம் பெற்றார்.

தீபப்பிரகாசர் என்ற பெயருக்கு ஏற்றாற் போல் ஒளி வடிவமாக அழகாக காட்சி தருகிறார் எம்பெருமான்.

கார்த்திகை தினத்தில் இந்த தீபப்பிரகாசர் பெருமாள் சன்னதியில் தீபம் ஏற்றி வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

🌺🌺 தூப்புல் வேதாந்த தேசிகர் :-

வைணவ குலத்தில் "பாஷ்யக்கார சித்தாந்தம்" என்பதை போதித்த சுவாமி "தூப்புல் வேதாந்த தேசிகர்" சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு திரு அவதாரம் செய்த தலம் இத்தலமாகும்.

பெருமாள் சன்னிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியே தெற்கு முகமாக சுவாமி தேசிகர் சன்னிதி அமைந்துள்ளது.

வேதாந்த தேசிகன் வணங்கிய லட்சுமி - ஹயக்ரீவர் விக்ரகம் இத்திருக்கோவிலில் இன்றும் உள்ளது. சித்திரை ரேவதி நட்சத்திரத்தில் இவருக்கு அவதார உற்சவம் சிறப்பாக நடக்கிறது.

🌺🌺 இவரின் பிறப்பு :-

வைணவ ஆச்சார்யாரான இவரது தாய் தனக்கு குழந்தை வரம் வேண்டி பெருமாளை வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற திருப்பதி பெருமாள் தனது கையிலிருக்கும் மணியையே இவருக்கு குழந்தையாக பிறக்கும் படி அருள்பாலித்தார்.

பெருமாளின் கையிலுள்ள மணியே "வேதாந்த தேசிகர்" ஆக அவதரித்தது. வேதாந்த தேசிகர் 1268 ஆம் ஆண்டு முதல் 1369 ஆண்டு வரை நூற்றாண்டுகளுக்கு மேல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்.

பல நூல்களை வடமொழியிலிருந்து மொழி பெயர்த்தார். அத்துடன் காஞ்சி வரதராஜ பெருமாள் மீது "அடைக்கலப்பத்து" என்ற பாமாலையைப் பாடியுள்ளார்.

இவரது புதல்வர் நயின வரதாச்சாரியார் என்பவர் இந்த "தீபப்பிரகாசராகிய பெருமாள்" கோவிலை முழுவதுமாகக் கட்டி முடித்தார் என்றும் கூறுவர்.

🌺🌺 மங்களாசாசனம் :-

திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்தை 2 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

""முளைக்கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
அந்தணனை அந்தணர்தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தை திருத்தண்காவில்
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்தனால் பயன்பெற்றேன் வருக என்று
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே!!!"".

என்று இத்திருத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

🌺🌺 வழித்தடம் :-

காஞ்சி நகரின் மத்தியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ரங்கசாமி குளம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

அருள்மிகு தீபப்பிரகாசர் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு மரகதவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு அழகிய சிங்கர் திருக்கோவில் - திருவேளுக்கை திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment