Sunday, November 15, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 49 திருநிலாத்திங்கள் துண்டம்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 49 🌹🌹🌹


சைவ அடியார்களாலும் இத்தல பெருமாள் மீது பாடல் பெற்ற பெருமை உடைய திருத்தலம். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திவ்யதேசம்.

அருள்மிகு நிலாத்திங்கள் துண்ட பெருமாள் திருக்கோவில்:- திருநிலாத்திங்கள் துண்டம்.

மூலவர்: நிலாத்திங்கள்துண்டகத்தான், சந்திர சூடப் பெருமாள்
தாயார்: நிலாத்திங்கள்துண்ட தாயார், நேர் ஒருவரில்லா வல்லி
உற்சவர்: -------- இல்லை
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: புருஷசுக்த விமானம்
தீர்த்தம்: சந்திர புஷ்கரணி
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

நாமாவளி: ஸ்ரீ நேரொருவரில்லா வல்லீ ஸமேத ஸ்ரீ நிலா திங்கள்துண்டத்தான் ஸ்வாமிநே நமஹ.

ஊர்: காஞ்சிபுரம்

🌺🌺 தலவரலாறு:-

ஒளி வடிவான இறைவன் நாராயணன், இறைவியான அம்பிகைக்கே ஒளி கொடுத்து அருளிய அற்புத திருத்தலம்.

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில், மூலவர் சன்னிதிக்கு நேர் ஈசான்ய மூலையில் மேற்கு நோக்கியவாறு காட்சி தந்து அருள்கிறார்.

சகல லோகமும் நிறைந்துள்ள ஆதினாதனாகிய இறைவன் சிவபெருமானின் இரு கண்களையும், பார்வதி தேவியான அன்னை விளையாட்டாகப் பொத்தினார்.

அப்போது சகல லோகமும் இருண்டது. தனது தவற்றை உணர்ந்த அன்னை, மீண்டும் இறைவனை சாந்தப்படுத்த இத்தலத்தில் வந்து மணலால் ஒரு லிங்கத் திருமேனியை உருவாக்கி தவமியற்றினார்.

அப்போது அவளை சோதித்த இறைவன் சூரியனைக் கொண்டு வெப்பத்தை உண்டாக்கினார். அப்போது அன்னை பார்வதி பிரம்மாவின் யாகத்தைக் காத்து அருளியது போல தன் தவத்தையும் காக்கும் படி தன் தமையனான ஸ்ரீமந் நாராயணரான திருமாலிடம் வேண்டினார்.

அப்போது திருமால் தனது சகோதரியின் வேண்டுகோளை ஏற்கும் வண்ணம் சந்திரனைக் கொண்டு நிலாவாகிய திங்களைக் கொண்டு குளிர்ச்சியை ஏற்படுத்திக் காத்ததாகவும், அதனால் இத்தல பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற திருநாமம் ஏறற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

🌺🌺 வரலாற்றுக் குறிப்பு :-

வரலாற்றின் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கையில், இத்தல பெருமாளுக்கு புருச சுக்த விமானமும், சந்திர புட்கரணி தீர்த்தமும் இருந்ததாக அறியப்படுகிறது.

ஆனால், இன்றைய நிலையில் இவ்விரண்டும் காணப்படவில்லை. மேலும், இத்தல பிராட்டி "நேர் ஒருவரில்லா வல்லி" என்ற திருநாமத்தில் அருளியதாகவும் அறியப்படுகிறது.

ஆனால், இன்றோ பெருமாள் மட்டும் சேவை சாதிக்கிறார். அருள்மிகு ஏகாம்பரநாதர் குருக்களே இவருக்கும் அர்ச்சனை செய்கிறார்.

ஆனால், ஏகாம்பரநாதர் மீது தேவாரம் பாடிய திருநாவுக்கரசர் பெருமாளையும் குறிப்பிட்டு பாடியுள்ளமையால் சைவ அடியார்களாலும், பாடல் பெற்ற பெருமை இவருக்குண்டு.

"நீரூரும் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணா
நிலாத்திங்கள் துண்டத்தாய்!!!"

- என்று திருநாவுக்கரசர் பெருமாளைப் பற்றி பாடியுள்ளார்.

எனவே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பெருமாளின் திருக்கோவில் அழிந்து போயிருக்கலாம் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

🌺🌺 மங்களாசாசனம்:-

"நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வாவைவத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுள் திருவடியே பேணினேனே!!!"

என்று திருமங்கையாழ்வார் நீரகத்தான், நிலாத்துண்டப்பெருமாள், திருஊரகப் பெருமாள், திருகாரகப் பெருமாள் என நான்கு பெருமாளைப் பற்றி ஒரே பாசுரத்தில் பாடியுள்ளார்.

🌺🌺 சிறப்புகள் :-

பஞ்சபூதங்களில் ஒன்றாகவும், திவ்யதேசங்களில் ஒன்றாகவும் விளங்கும் திருத்தலம்.

ஏகாம்பரநாதர் பிரகாரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்.

திருமங்கையாழ்வார் ஒரு பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம்:-

காஞ்சிபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த திருத்தலம். பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் அடையும் வண்ணம் அமைந்துள்ளது இந்த திருத்தலம்.

அருள்மிகு நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு ஒருவரில்லாவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில்:-

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில் - திருஊரகம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment