🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 51 🌹🌹🌹
ஸ்ரீமந்நாராயணரின் காலடியில் சரஸ்வதி தேவி அமர்ந்திருக்கும் சிறப்பு பெற்ற திருத்தலம்.
திருமங்கையாழ்வார் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் நமக்காக அருளும் சிறப்பு வாய்ந்த திருத்தலம்.
திருவெஃகா.
மூலவர்: சொன்ன வண்ணம் செய்த பெருமாள், யதோத்காரி, வேகாசேது
தாயார்: கோமளவல்லி நாச்சியார்
உற்சவர்: சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: வேதசார விமானம்
தீர்த்தம்: பொய்கை புஷ்கரணி
மங்களாசாசனம்: பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ கோமளவல்லீ ஸமேத ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த ஸ்வாமிநே நமஹ.
ஊர்: காஞ்சிபுரம்
🌺🌺 முதன்மையான தலம்:-
காஞ்சிபுரத்தில் மொத்தமாக 14 திவ்யதேசங்கள் மிக அருகருகே அமைந்துள்ளன. இருப்பினும் பன்னிரு ஆழ்வார்களுள் முதல் ஆழ்வாரும், இத்தலத்தில் அவதரித்தவருமான பொய்கை ஆழ்வார் இத்தலத்தை மட்டுமே மங்களாசாசனம் செய்துள்ளார்.
வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்களை வரிசைப்படுத்தும் போது அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கொண்டே வரிசைப்படுத்தினார்கள்.
ஆழ்வார்களில் நீண்ட காலத்திற்கு முன் வாழ்ந்த பொய்கை ஆழ்வார் பாசுரங்களின் அமைப்பை வைத்து பார்க்கும் போது ஆழ்வார்களில் முதலாமானவர் இவரே என்பதில் மாற்றமில்லை.
எனவே, காஞ்சியில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோவிலை விட இத்திருக்கோவில் தொய்மை வாய்ந்தது என்பது உறுதியாகிறது.
🌺🌺 தலவரலாறு:-
ஒரு முறை பிரம்மாதனது தேவி கலைவாணி துணையின்றி கச்சி மாநகரில் ஒரு யாகத்தைத் துவக்கினார்.
அதனால் கோபமடைந்த கலைவாணி பிரம்மனின் யாகத்தைத் தகர்க்க "வேகவதி" என்ற ஆற்றின் வடிவில் வெள்ளப் பெருக்குடன் வந்தார்.
அந்த யாகத்தைக் காப்பாற்றுமாறு இறைவன் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணரான திருமாலிடம் பிரம்மா வேண்டினார். அப்போது பாற்கடல் பரந்தாமனான திருமால், வேகவதி ஆற்றின் குறுக்கே படுத்துக் கொண்டார்.
ஆற்றின் வடிவில் இருந்த கலைவாணியால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில், இங்கே தான் வைகுண்ட வாசன், பரமபதநாதன், பாற்கடல் பரந்தாமன் பள்ளி கொண்டுள்ளரோ அல்லவா????
அதனால் வேகவதியான சரஸ்வதி வெள்ள ரூபத்தில் இருந்தாலும் எம்பெருமானைக் கடந்து மேற்கொண்டு செல்ல இயலவில்லை.
இவ்வாறு பிரம்மாவின் யாகத்தை பெருமாள் காத்தார்.
அரணாகப் படுத்து பெருமாள் தடுத்த காரணத்தால், இத்தலம் அமைவிடம் வடமொழியில் "வேகாஸலம்" என்றும் தமிழில் "வேகவணை" என்றும் பெயர் பெற்றது.
பிற்காலத்தில் வேகவணை என்ற சொல் மாறி "வேகணை" என்றும், பின்பு "வெஃகணை" என்றும் மாற்றம் பெற்று காலப்போக்கில் "வெஃகா" என்றும் வழங்கப்பட்டு வருகிறது.
பிரம்மா யாகத்தைக் காக்கும்படி பெருமாளிடம் வேண்ட பெருமாளும் யாகத்தைக் காத்து அருளிய பெருமை பெற்றது இத்தலம்.
இறைவன் பிரம்மாவிற்கும், இறைவி சரஸ்வதி தேவியான கலைவாணிக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளை "வசிட்டர்" என்ற முனிவர் அகற்றினர்.
அப்போது மகரிசி வேகவதியில் படுத்த அக்கோலத்தையே என்றென்றும் காட்சி தந்து அருள்புரியும் படி வேண்டிக் கொண்டார்.
அப்போது இறைவி கலைவாணி இத்தல பெருமாளின் காலடியில் அமர்ந்து தன்னை மன்னித்தருள வேண்டினார். இன்றளவும் பெருமாளின் காலடியில், இறைவி கலைவாணி அமர்ந்திருப்பதைக் காணலாம்.
🌺🌺 பெருமாளின் திருநாமம் :-
இத்தல இறைவனுக்கு "வேகாசேது" என்பது திருநாமம். இதை உறுதி செய்யும் விதமாக கி.பி.14 ம் நூற்றாண்டில் காஞ்சியின் திருத்தண்கா என்னும் தலத்தில் அவதரித்த தூப்புல் வேதாந்த தேசிகர், திருவெஃகாவில் உறையும் பெருமானை "வேகாசேது" என்ற திருநாமத்திலும், மற்றொரு இடத்தில் "யதோத்தகாரி" என்றும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
பிற்காலத்தில் தான் வேகாசேது என்ற திருநாமம் மறைந்து "யதோத்தகாரி" என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.
இன்றைக்கும் இத்தலத்தில் மூலவரின் பல நாமங்களில் ஒரு நாமமாக "வேகாசேது" திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
🌺🌺 திருமழிசை ஆழ்வார்:-
தொண்டை நாடான கச்சி மாநகருக்கு கிழக்கில் "திருமழிசை" என்னும் தலம் ஒன்று தனிச்சிறப்புடன் திகழ்கிறது. இத்தலத்தில் திருமாலின் திருச்சக்கரத்தின் அம்சமாக அவதரித்தவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான "திருமழிசை ஆழ்வார்" .
அவர் பலகாலம் கச்சி மாநகரிலேயே வாழ்ந்து திருவெஃகா தல இறைவனை மனமார சேவித்து வந்தார். அச்சமயத்தில் திருமழிசை ஆழ்வாருடைய சீடனாக கணிகண்ணன் என்பவர் இருந்தார்.
இக்கோவிலில் உள்ள பெருமாளை தினமும் இவர் வழிபட்டு, இத்தல இறைவன் மீது பாடல்களைப் பாடிவந்தார். அச்சமயத்தில் ஒரு மூதாட்டி தினமும் இத்தலத்தில் தொண்டு செய்து வந்தாள்.
இதைக்கண்டு மகிழ்ந்த திருமழிசை ஆழ்வார், இத்தல இறைவனின் அருளால் அவள் முதுமையை நீக்கி இளமையாக்கினார். அவளையே பின்னாளில் மன்னன் பல்லவராயன் மணந்தான். திருமணம் ஆகி சில ஆண்டுகள் கடந்தும் அவள் இளமையோடு இருந்தாள்.
ஒருநாள் மன்னன், திருமழிசை ஆழ்வாரின் அருளால் முதுமை நீங்கி இளமை பெற்ற இரகசியத்தை அறிந்தான். உடனே பல்லவ மன்னன் பல்லவராயனும் இளமை பெற விரும்பினான்.
ஆகவே கணிகண்ணனை அழைத்து கணிகண்ணன் மூலமாக திருமழிசை ஆழ்வாரின் உதவியை நாட எண்ணிணான்.
ஆனால், கணிகண்ணன் தன்னுடைய குருநாதராகிய திருமழிசை ஆழ்வார், அந்த மன்னனைக் காண வரமாட்டார் என்றும், இது குறித்து அந்த மன்னனுக்கு உதவி செய்ய மாட்டார் என்றும் பதில் கூறினார்.
பிறகு கணிகண்ணன் ஒரு வரகவி என்பதை அறிந்த மன்னன், தன் மீது கவி பாடுமாறு கணிகண்ணனிடம் கூறினான். ஆனால், இறைவன் பெருமாளைத் தவிர மற்றவர்கள் மீது கவி பாடுவதில்லை என்று கணிகண்ணன் பதில் கூறினான்.
கோபம் கொண்ட அந்த மன்னன், கச்சி மாநகரத்தை விட்டு வெளியேறுமாறு கணிகண்ணனுக்கு கட்டளையிட்டான்.
இச்செய்தியை அறிந்த திருமழிசை ஆழ்வார், இத்தல பெருமாளிடம் "கணிகண்ணனுடன் நானும் கச்சி மாநகரத்தை விட்டு போகிறேன். நீயும் உன்னுடைய பாம்பு படுக்கையை சுறிட்டுக் கொண்டு எங்களுடன் புறப்படு" என்று பாடினார்.
காமருபூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா -
துணிவுடைய
செந்நாப் புலவனும்
போகின்றேன், நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்!!!"
- திருமழிசை ஆழ்வார்.
இவ்வாறு திருமழிசை ஆழ்வார் பாட பெருமாளும் அவ்வாறே செய்தார்.
திருமழிசை ஆழ்வார் மற்றும் கணிகண்ணனுடன் சேர்ந்து பெருமாள் கச்சிமாநகரத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றவுடன் நகரம் இருளில் மூழ்கியது.
பல்லவ மன்னன் பல்லவராயன், தன்னுடைய தவறை உணர்ந்து, ஓரிக்கை கிராமத்திற்குச் சென்று, திருமழிசை ஆழ்வாரைச் சந்தித்து, தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். திருமழிசை ஆழ்வாரும் அந்த மன்னனை மன்னித்தார்.
அந்த மன்னன் காஞ்சிபுரத்திற்குத் திரும்பியவுடன் திருமழிசை ஆழ்வார், பெருமாளிடம், "கணிகண்ணனுடன் சேர்ந்து நானும் கச்சி மாநகருக்குத் திரும்புகிறேன். நீயும் கச்சி மாநகருக்கு திரும்பி வந்து முன்பு போலவே அக்கோவிலிலேயே பாம்பு படுக்கையை விரித்துக் படுத்துக்கொள்" என்று கூறினார்.
காமருபூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் -
துணிவுடைய
செந்நாப் புலவனும்
போக்கொழிந்தான், நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் விரித்துக்கொள்!!"
- திருமழிசை ஆழ்வார்.
பெருமாளும் அவ்வாறே செய்தார். திருமழிசை ஆழ்வார் சொன்ன வண்ணம் பெருமாள் செய்ததால், இத்தல பெருமாள் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்ற திருநாமம் பெற்றார்.
சொன்ன வண்ணம் என்பதற்கு "யதோத்தகாரி" என்று வடமொழியில் குறிப்பிடப்படுகிறது. இதனால் இவ்வூர் மக்கள் "யதோத்தகரி பெருமாள்" என்ற திருநாமத்தில் வழிபடுகின்றனர்.
சொன்ன வண்ணம் செய்த பெருமாள், ஓரிக்கை கிராமத்திலிருந்து கச்சி மாநகருக்குத் திரும்பியவுடன், கச்சி மாநகரத்தை சூழ்ந்திருந்த இருள் விலகியது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
🌺🌺 மூலவர் :-
பெருமாள் ஆழ்வாரின் பெருமையையும் மன்னவனின் தவறையும் இவ்வுலகிற்கு உணர்த்த, முன்பு கிடந்த நிலையிலிருந்து மாறி கிடந்தார். பொதுவாக பெருமாள் கிடந்த கோலத்தில் காட்சி தரும் எல்லா கோவில்களிலும் (இடமிருந்து வலமாக) பக்தர்களின் பார்வைக்கு இடது புறமாக தலை வைத்தும், வலதுபுறமாக கால் வைத்தும் காட்சி தருவார். ஆனால், இத்திருத்தலத்தில் திசை மாறி (வலமிருந்து இடமாக) காட்சி தருவது மிகச் சிறப்பான ஒன்றாகும்.
பொய்கை ஆழ்வார் - 1, பேயாழ்வார் - 4, நம்மாழ்வார் - 1, திருமழிசை ஆழ்வார் - 3, திருமங்கையாழ்வார் - 6 என 15 பாசுரங்கள் இந்த பெருமாள் மீது பாடியருளியுள்ளனர்.
🌺🌺 வழித்தடம் :-
காஞ்சிபுரம் நகரின் மத்தியில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ரங்கசாமி குலம் பேருந்து நிறுத்தத்தின் அருகாமையில் உள்ளது இந்த திவ்யதேசம்.
அருள்மிகு கோமளவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில்:-
அருள்மிகு கருணாகரப் பெருமாள் திருக்கோவில் - திருகாரகம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment