Tuesday, November 17, 2020

திருப்பாவை

 12. திருப்பாவை (சிறுகதை சீசன் 5) #ganeshamarkalam

முன்னுரை: இத்துனூண்டு சிறுகதைக்கு முன்னுரையான்னு கேப்பேள். இந்தத் தலைப்பை பாத்துட்டு இது ஒரு ஐயங்கார் கதையோன்னு நினைச்சுடப் பிடாதுன்னு கேட்டுக்கரேன். அவ்ளோதான்.

பரீக்ஷை முடிஞ்சதோ இல்லையோ வாசுகி, என் பேத்தி வந்துடுவள். பொண்ணும் மாப்பிள்ளையும்தான். இவளுக்காக 10நா லீவெடுத்துண்டு. தாத்தா பாட்டியோட குழந்தைகள் குவாலிடி டயம் ஸ்பெண்ட் செய்யணும்னு நினைப்பார். நாங்க பாளயங்கோட்டையில். அவா பெங்களூரில். இப்படி சந்திச்சிண்டாத்தான். கூட்டுக் குடும்பமா இருக்க ஆசைதான். எங்காத்து மாமா “பொண்ணை தாரவாத்துத் தந்தாச்சு, வேற ஒண்ணும் நிர்பந்திக்கப் பிடாது. அவாளா வந்து போயிண்டிருக்கா. இந்த அன்பும் பாசமும் நிலைச்சு நின்னாப் போதும்”.

வாசுகிக்கு இப்ப 12 வயசு. கிளாஸ் ஃப்ர்ஸ்ட். வீடியோ காலில் மார்க் ஷீட் காமிச்சா. பரிக்ஷை முடிஞ்சு, நேத்து ட்ரெயின் ஏறி இன்னைக்கு கார்த்தாலே 630க்கு ஸ்டேஷனில் இறங்கியிருக்கணும். இவர்தான் அழைச்சிண்டு வர காரெடுத்துண்டு போயிருக்கர். நான் காபீக்கு டிகாக்ஷன் போட்டு வச்சிண்டு வாசலையே பாத்துண்டிருக்கேன்.

எங்காம் பாளயங்கோட்டை சிறைக்குப் பின்னாடி பெருமாள்புரம். ஸ்டேஷன்லேந்து தாமிரபரணி ஆத்துப் பாலம் கடந்து நேர வந்து மாநகராட்சி போர ரைட் திரும்பினா ஜெயில் வரும். அதை அப்பிரதக்ஷிணமா சுத்திண்டு பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனைத் தாண்டினதும் 4த் லெஃப்ட். சித்தி விநாயகர் கோவில் தெரியும். அதுக்கு எதுத்தாப்போல் எங்காம். இடம் வாங்கி கட்டினது. சின்னதா கட்டீட்டு இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம்னு பெரிசாக்கினதில் சீரா இல்லாம பெரீசா இருக்கும். பத்மா, மாப்பிள்ளைக்கு பெரீய பெட்ரூம் கொடுத்துடுவம். வாசுகி எங்களோட தூங்குவள்.

கார் சத்தம் கேக்க முழங்காலைப் பிடிச்சிண்டே முடிஞ்சவரை வேகமா வாசலுக்குப் போரேன். அதுக்குள்ளே பேத்தி இறங்கி ஓடிவந்து கட்டிக்கரா. “பாட்டீ! உனக்கு நான் பாடிக் காமிப்பேன்!’ வந்ததுமே அனவுன்ஸ்மென்ட். “என்ன பாட்டுடா செல்லம்?” “திருப்பாவை.” ஸ்பஷ்டமா சொன்னது குழந்தை. சரிதான், மார்கழி பொறந்து 10நாதான் ஆச்சு, குழந்தை குரலில் திருப்பாவை கேக்க அதிர்ஷ்டம் வேணும்! சந்தோஷப்பட்டேன். “வா செல்லம்! முதல்லே குளிச்சு சாப்டூட்டு அப்புரமா பாட்டிக்கு பாடிக் காட்டு”. “வாங்கோ மாப்பிள்ளை!” முன்னே போய் அவரை வரவேற்கிரேன். பத்மா என்னை கட்டிப் பிடிச்சு கன்னத்தில் உரசி காத்தில் ஒரு இச் வைக்கரா. யூஎஸ் போய் 4 வருஷம் இருந்தாளோன்னோ!

“கன்னத்திலேயே வச்சா என்ன?” முதத் தடவை இப்படி பண்ணினப்போ கேட்டேன். “ஆண்களையும் இப்படித்தான் கட்டிப் பிடிப்பம். கன்னத்தில் எப்படி? ‘இப்படி இறுக்கிக் கட்டிண்டப்புரம் இச் மட்டும் கூடாதா’ன்னு என் வெகுளி மூளை கேட்டுது. நல்ல சம்பிரதாயம்தான். நம்மூரில் இதெல்லாம் ஏன் இல்லை?

ரயில் அசதி போக வெநீரில் குளிச்சா. “இன்னைக்கு பத்தியமா சமைச்சாப் போதும்மா”ன்னு மாப்பிள்ளை. அவர் குளிக்கப் போனதும் எங்காத்து மாமா வந்து, “அவர் அப்படித்தான் சொல்லுவர். நன்னா சமை. ஏதாவது கூட மாட ஒத்தாசைன்னா சொல்லு செய்யரேன்.” “பின்னே! முருங்கை சாம்பார், பீன்ஸ் பருப்புசிலி, ரசம், பூஷணிகூட்டு, வெத்தல் குழம்பு, அப்பளம் ப்ளான் செஞ்சாச்சு. குழந்தைக்கு இளநீர் பாயசம் பிடிக்கும், ஆளைக் கூப்பீட்டு 10இளநீர் பரிச்சுப் போடச் சொல்லுங்கோ!” எல்லாம் நடந்தது. ஆசையா சாப்டூட்டு ரூமில் போய் படுத்துண்டுட்டா. மணி 2 இருக்கும் வாசுகி மட்டும் எழுந்து வரா. வந்தவள் பேசாம பாட்டி மடீலே தலை வச்சு படுத்துண்டு தூக்கம் கன்டின்யூட்.

எங்காத்து மாமா வாசலில் மர நிழலில் ஈஸிசேரைப் போட்டுண்டு கண் அசந்துட்டர். திருப்பாவை என்னாச்சு? எழுந்துண்டதும் பாடிக் காமிப்பளோ?

ஞாபகம் இருக்கு. இவருக்கு வாக்கப்பட்டு குடுத்தனம் வைக்கரத்துக்கு மின்னாடி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு மார்கழி முப்பது நாளும் 5 மணிக்கு எங்கம்மா அழைச்சிண்டு போனது. திருப்பாவை போட்டியில் சேர்த்துட்டு மனனம் செய்யச் சொல்லுவள். எல்லாப் பாடல்களும் அத்துப்படி. போட்டியில் விதவிதமா கேள்வி கேப்பா. 3 ஜட்ஜ். மார்கழி 12ஆம் தேதி வாக்கில் பகலில் நடக்கும். ஒரு 30 குழந்தைகள் கலந்துக்கும். ரெண்டு தப்பு பண்ணினா எலிமினேடட். தப்பே செய்யாம எவ்வளவு முன்னேறரோமோ அவாளுக்கு பரிசு. ஸ்லோகப் புஸ்தகம், சாமி படம், நோட்புக், கலர் பென்சில் செட்.

என்ன கேப்பா? பாட்டு நம்பரைச் சொல்லி பாடும்பா. கடைசீ வரி சொல்வா ஆரம்ப வரி சொல்லணும். சில வரிகளை சொல்லி அர்த்தம் சொல்லச் சொல்வா. ஏதாவது ஒண்ணை ராகத்தோட. இப்படி. ஒருக்கா எனக்கு ரெண்டாம் பரிசு கிடெச்சது. 18 வயசில் இங்கே வந்தாச்சு.

பத்மாவுக்கு நன்னா பாடுவள். ஆனா பலருக்கு ஆராப்போல், கல்யாணம், குடும்பப் பொறுப்பு வந்ததும் எல்லாம் பின்தங்கிப் போச்சு. விசேஷம், பூஜைன்னா பாடுவள். கத்துண்டதை மறக்கலை. குழந்தைக்கும் திருப்பாவை சொல்லித் தந்திருக்கா. வாசுகி டெட்ராயிட்லே பொறந்தா. ஒரு யூஎஸ் சிடிஜென் இப்போ என் மடீலே! ஆஹா!

என்ன சொப்பனமோ, டக்குன்னு எழுந்து உக்காந்துண்டா என் செல்லம். “பாட்டீ, இப்ப பாடிக் காட்டட்டுமா?” “பேஷா செய்டா கண்ணே!” மாமாவும் எழுந்து நிமிந்து உக்காந்துக்கரர். கணீர்னு “மார்கழித் திங்கள் மதி நிறைந்த” ஆரம்பிச்சு “ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேளோ ரெம்பாவாய்” வரை ரெண்டு பாட்டும் முடிக்கச்சே மாப்பிள்ளையும் வந்துட்டர். பத்மா தூங்கட்டும்னு சத்தம் எழுப்பாம. இவள் அப்பா மடீலே தாவிட்டா..

“ஊரில் அத்தனை சந்தேகம் கேட்டியே தாத்தா பாட்டிகிட்டே கேட்டுக்கோ.” கைகாட்டிட்டர். குழந்தை என்ன கேக்குமோன்னு பட்டது. “தில்லி போயிருந்தப்போ பெரிய பாட்டி கிருஷ்ணர் ராதா கதை சொன்னா. ராதாவும் கிருஷ்ணர் மேல் காதலோட பாடினா, ஆண்டாளும் பாடினாளா? இப்படி செஞ்சா கிருஷ்ணர் கடைசீலே யாரை கல்யாணம் பண்ணிப்பர்?” குழந்தையின் சந்தேகம். எங்காத்து மாமா சாஞ்சுண்டு சட்டுன்னு கண்ணை மூடிண்டர். நான் சாதூர்யமா “மாப்பிள்ளை, இதுக்கு நீங்க என்ன பதில் சொன்னேள்?” “லீவுக்கு ஊருக்குப் போரமோன்னோ, உங்க பாட்டிகிட்டே கேட்டுச் சொல்ரேன்னு.” “சரியான பதில்”னு சொல்லிண்டே பத்மாவும் வரா. “அம்மா நீ மாட்டிண்டாய்”.

மாப்பிள்ளை சும்மா இல்லாம, “ராதா கிருஷ்ணர் மேல் வச்சிருந்த பிரேமைக்கும், ஆண்டாள் பெருமாள் மேல் வச்ச காதலுக்கும் என்ன வித்யாசம்?” மாமாவே பதில் சொல்ல ஆரம்பிக்கரர். “ஆண்டாள் 7 அ 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்களில் ஒருவர். ராதா பகவானின் பெண் ரூபம்னே சொல்ரா. அவளைப் பத்தி பாகவத புராணத்தில் சொல்லப் படலைன்னு ஒரு கருத்து இருக்கு. ஆனா நமக்குத் தெரிஞ்சதை வச்சு ராதா கிருஷ்ணர் வாழ்ந்த காலத்துலேயே இருந்ததாக நம்பறோம். ஆனா ரெண்டு பேர் வாழ்க்கையிலும் அத்தனை ஒத்துமை”.

“கோகுலத்தில் கோபிகா ஸ்த்ரீக்கள் என்ன செஞ்சாளோ அதுபோல் வில்லிபுத்தூரில். கோபிகா ஸ்த்ரீக்கள் என்ன செஞ்சா? பகவானே உயர்த்திச் சொன்ன மார்கஷீரிஷ மாசத்தில் காத்யாயினி விரதம் வச்சு அவன் ஸ்துதி பாடிண்டே அவனையே ஸ்மரணை செஞ்சிண்டு, மத்தவாளையும் செய்யச் சொல்லி. ஆண்டாளும் நம்ப மார்கழி மாசத்தில் 30நாளும் ஒரு பாட்டு வீதம். இப்படி செய்வதின் தாத்பர்யம் விரதம் நல்ல படியா நிறைவேறினா கிருஷ்ணரை கணவரா அடைய முடியும்னு. ஒரே ஒரு வித்யாசம் என்னன்னா ஆண்டாள் கண்ணனையே தன் கணவனா வரிச்சிண்டு இதெல்லாம் செய்யரா. மின்னே நந்தன்கிராமத்தில் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிண்டு, தானும் கோபிகான்னு வச்சிண்டு ஸ்ரீவில்லிபுத்தூரே கோகுலமாவும் ஆத்துப் பக்கத்தில் இருந்த கோவிலே நந்தகோபன் அரண்மனையாவும்.”

“தன் தோழிகள் எல்லாரையும் இந்த 30நாளும் கூட அழைச்சிண்டு அதிகாலை கோவிலுக்கு போகணும்னு அவாளுக்கு சொல்லப் பட்டதாகத்தான் இந்த திருப்பாவை.” பத்மா கேக்கரா, “இப்போ 2019இல் திருப்பாவை பாடுவதால் என்ன ஆகும்?” அதுக்கு மாமா சொல்ரர்: “திருப்பாவை பாடரச்சே ஆண்டாளை ஞாபகப் படுத்திக்கரோம்னு படும். ஆனா இது கிருஷ்ணரை தியானிச்சுக்க. இப்படி தினம் பண்ணி 30ஆம் நாள் ஆண்டாள் திருக்கல்யான மஹோத்சவம் தரிசனம் கிட்டித்துன்னா அத்தனை புண்யம்.”

மாப்பிள்ளை கேக்கரர்: “ராதாவுக்கும், ஆண்டாளுக்கும் கிருஷ்ணரோட கல்யாணமே ஆச்சா?” பக்தியோட ஸ்மரனை செய்யும் எந்த ஜீவாத்மாவையும் அந்த பரமாத்மா ஸ்வீகரிச்சு அணைச்சு தங்கிட்டேயே வச்சுக்கும்னு அர்த்தம் பண்ணிக்கணும் மாப்பிள்ளை. இது கல்யாண மேட்டர்னு அர்த்தம் புரிஞ்சிக்கப் பிடாது. திருப்பாவை பாசுரங்களை மேலோட்டமா படிச்சா ஒரு அர்த்தம் தொனிக்கும். ஆழமா சிந்திச்சுப் படிச்சு விஷயம் தெரிஞ்சவாளைக் கேட்டா சொல்லுவா, ஒவ்வொரு பாடல் மூலமாவும் ஆண்டாள் தன் தோழிகளை, அதாவது சக ஆத்மாக்களை பகவத் ஸ்மரணை பண்ணுவோம் முக்தி கிடைக்கும்னு ஊக்குவிப்பது புரியும். திருப்பாவை வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் வீஷயங்களுக்கு ஒரு கோடு போட்டு காமிப்பது போலத்தான். அதனால்தான் ஒரு மாசத்தை பூரா இதுக்காக ஏற்படுத்தி வச்சிருக்கா நம் முன்னோர்கள்.”

வாசுகி எழுந்து நின்னுண்டு, இடுப்பில் கையை வச்சிண்டு “நான் கேட்டதுக்கு யாரும் பதில் சொல்லலை. ஆனா இப்போ இன்னொரு கொஸ்ச்சீன் வந்துடுத்து. நான் 30 பாட்டையும் பாடினா கிருஷ்ணர் என்னையும் கல்யாணம் செஞ்சுப்பரா?” மாமா என்னைப் பாக்கரர். இதுக்கு இவளே பதில் சொல்லட்டும்! என்னத்தைன்னு சொல்ல? இழுத்து மடீலே உக்காரவச்சிண்டு சொல்ரேன்.

“செல்லம். நீயே ராதா, நீயே ஆண்டாளும். கிருஷ்ணர் இவாளில் யாரை கல்யாணம் செஞ்சிண்டாலும் உன்னையே பண்ணிண்டாப்போல். புரிஞ்சதா? இப்போ பாட்டிக்கு இன்னொரு பாட்டுப் பாடிக் காட்டு! அவளும் சளைக்காம “மாயனை மன்னு வடமதுரை மைந்தனை”ன்னு 5ஆவது பாசுரத்தை எடுக்க, ஆச்சர்யமா எங்காத்து மாப்பிள்ளையும் கோரஸா சேர்ந்துக்கரர்.

“பேஷா நீங்களும் பாடுங்கோ மாப்பிள்ளை, ஆண்டாள் விடுத்த அழைப்பு பெண்களுக்கானாலும் அவள் ஆண்களையும் அதில் உள்ளடக்கித்தான் சொல்லியிருக்கணும். நமக்கும் இல்வாழ்க்கையிலேந்து முக்தி வேணுமோன்னோ!” சொன்னவர் விஷமமாய் என்னைப் பாத்து கண்ணடிக்க இந்த மனுஷரை என்ன செஞ்சா சரீன்னு யோசிக்கரேன்.

No comments:

Post a Comment