மராட்டிய மண்ணில்...பண்டரிபுரம் பகுதி 17
இனி இவர் பார்வையில்…
நதிக்கரையில் நிற்கும் போதே கோயிலின் சிகரங்கள் தெரியும் அதைக்குறியாக iவைத்துக் கொண்டே தெருக்களில் வளைந்து வளைந்து சென்றால் கோயில் வாசல்போய்ச் சேரலாம். கோயிலை அடுத்த தெருக்கள் எல்லாம் குறுகிய தெருக்கள். பல கடைகள் இருக்கும். அதில் பலகாரக் கடைகளே அதிகம்.
. ‘‘விட்டல, விட்டல!’’ என்று பாடிக் குதித்துக் குதித்தே தங்கள் வாழ்நாள் முழுவதையும் பண்டரிபுரத்தில் கழித்தவர்கள் அநேகம் பேர். அவர்களுடைய ஏராளமான அதிஷ்டானங்களே சந்திரபாகா நதியை அடைத்துக் கொண்டிருக்கின்றன.
மாமனார் அடாவடி எங்களுக்கு ஒத்துவராமல் நானும் ஷட்டகருடன் தனியே வந்து விட்டோம்.. வயதானவராயிற்றே வீட்டில் அடைந்து கிடக்கறாரே என வெளியே அழைத்து வந்தால் இப்படித்தான் ராவடி செய்வார். இப்ப இந்த கூட்டத்தில் பெண்களை என்ன படுத்தி எடுக்கிறாரோ? அவர்களை மறந்து சற்று நேரம் இந்த ஆன்மீக பூமியை கவனிப்போம்.
அழகானநதிக்கரையில் இறங்கிப் போனால் அடுத்தடுத்து சின்னச் சின்ன கட்டிடங்களாக இந்த அதிஷ்டானங்கள் உட்கார்ந்திருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் ‘விட்டல, விட்டல’ என்று ஆடிப்பாடி குதித்த அத்தனைபேரும் கடைசியில் இங்கே மண்ணோடு மண்ணாகத்தான் மறைந்திருக்கிறார்கள்.
பூலோக வைகுண்டம்’ என்று அழைக்கப்படும் பண்டரிபுரத்தை தமது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று சந்த்ரபாகா நதியில் நீராடி, ஸ்ரீ விட்டலைத் தரிசனம், பிரதஷிணம், நாம சங்கீர்த்தனம் செய்வதால் நமது பிறவிப் பயன் அடைகிறது என்று பக்த துக்காராம் கூறுகிறார் என்றாலும், தற்போது சந்த்ரபாகா நதி (கங்கைக்கும் பழையது – மிகவும் புராதனமானது என்று சொல்லப்படுகிறது.) நீராடும் நிலையில் இல்லை என்பதால், மிகவும் கவனமாக ஆற்றின் நடுப்பகுதி வரை நடந்து சென்று சிறிதளவு தீர்த்தம் எடுத்து வந்தோம்.
பக்தர்கள் புனித சந்திரபாகா நதியில் நீராடிவிட்டு ‘மகாதுவார்’ வழியாக ஊருக்குள் நுழைவது வழக்கம். தீர்த்தக் கட்டங்களிலிருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில் இருபக்கங்களிலும் ஏராளமான கடைகள் உள்ளன. விட்டலன் கோயிலின் சிகரம் ஐந்து அடுக்குகள் கொண்டது. மொத்தம் எட்டு வாயில்கள் உள்ளன. வடக்கில் மூன்றும், கிழக்கில் மூன்றும், தெற்கில் ஒன்றும், மேற்கில் ஒன்றுமாக அமைந்துள்ளன. கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கு வாயில் வழியாக வெளியே வரவேண்டும். கீழ் நுழைவாயில் மராட்டிய மக்களின் குருவான நாமதேவர் பெயரால் அழைக்கப்படுகிறது. அதை அடைய பன்னிரண்டு படிகள் உள்ளன.
முதல் படியின் அருகே நாமதேவரின் பித்தளை கவசமிட்ட மார்பளவு திருவுருவம் காணப்படுகிறது. இவருக்கு எதிரேயுள்ள மற்றொரு கல் சமாதி, மற்றொரு விட்டல் பக்தரும், தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவருமான ‘சோகா மேளா’வுடையது. இவ்விரண்டையும் பக்தர்கள் வழிபடுகிறார்கள். உள்ளே சென்றால் மகா கணபதி, இடதுபுறம் எழுந்தருளியிருக்கிறார். பெரிய விசாலமான பரப்பளவு உள்ள நாற்கட்ட முற்றம் உள்ளது. அங்கு மூன்று தீப ஸ்தம்பங்களும், இரண்டு பெரியோர்களின் சமாதிகளும் இருக்கின்றன. அங்கேயே கருடபகவானும், ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருக்கின்றனர். அங்குள்ள பின்புறச் சுவரில் உள்ள மூன்று வாயில்களில் நடுவாயில் பித்தளைத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அதன் இருபக்கங்களிலும் ஜெயன், விஜயன் எனும் துவார பாலகர்கள் உள்ளனர். வாயிலின் இரண்டாவது பக்க மண்டபத்தில் செந்தூர வண்ணத்தில் கணபதியும் தாமரை, அட்சமாலை, புத்தகம் தாங்கிய கருங்கல்லினாலான சரஸ்வதி தேவியும் எழுந்தருளியுள்ளனர். நடுவாயிலிலிருந்து பதினாறு தூண்கள் கொண்ட ‘சோலா கம்பா’ என்ற மண்டபத்தின் கூரை முகடுகளில் தசாவதாரம் மற்றும் கிருஷ்ண லீலைகள் பற்றிய காட்சிகள் எழிலுற சித்திரிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் சின்னப் பிறைகளில் காசி விஸ்வநாதர், ராமலட்சுமணர், கால பைரவர், தத்தாத்ரேயர் ஆகியோர் உள்ளனர்.
பதினாறு தூண்களில் இரண்டாவது வரிசையில் உள்ள இரண்டாவது தூண் தங்கம், வெள்ளிக்கவசங்களால் மின்னுகிறது. பக்தர்கள் அதைத் தழுவி காசுகளை காணிக்கையாக்குகின்றனர். அதில் காணப்படும் விஷ்ணுவின் உருவம் இந்த மண்டபம் உருவாக்குவதற்கு முன்பு கருட ஸ்தம்பத்தில் விட்டலின் முன்னால் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மண்டபத்தின் அருகே ‘செளகம்பா’ என்ற நாலுகால் மண்டபம் உள்ளது. தெற்கில் உள்ள இந்த யானை வாசல் வழியாகத்தான் அர்ச்சகர்கள் அதிக எண்ணிக்கையில் செல்கிறார்கள். அதன் வடபுறம் வெள்ளிக் கட்டில் உள்ள சயன அறை உள்ளது.
கர்ப்பகிருகத்தில் நான்கடி உயரமுள்ள கல்பீடத்தின் மேல் கருங்கல்லினாலான சுமார் மூன்றரை அடி உயரமுள்ள பாண்டு ரங்கவிட்டலன் அருள்பாலிக்கிறார். தலையில் சிவலிங்கமும், கழுத்தில் கெளஸ்துப மாலையும், பட்டுப் பீதாம்பரமும் தரித்துள்ளார். தலையில் உள்ள சிவலிங்கம் ஒரு தலைப்பாகை போலவும், கிரீடம் போலவும் அமைந்திருக்கின்றது. காதுகளில் பெரிய மகர குண்டலங்கள் பளிச்சிடுகின்றன. இடதுகையில் சங்கும், வலது கையில் தாமரைத் தண்டும், ஏந்தி இரு கரங்களையும் இடுப்பில் ஊன்றி கல்லின் மேல் நிற்கிறார்.
பண்டரிபுரம் கோவிலின் உள்ளே செல்லச் செல்ல அழகான சிற்பங்கள் நிறைந்த கருங்கல் தூண்கள் காட்சியளிக்கின்றன. ஆண்டுகள் பல கடந்த கையெழுத்துப் படியில் எழுதப்பட்ட மஹாபாரதக் காவியத்தை கண்ணாடிப் பெட்டியில் பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள். ஸ்ரீ விட்டலின் அருகில் சென்று அவரது திருப்பாதங்களில் நமது சிரசை வைத்து வணங்க அனுமதிக்கிறார்கள்.
சாளக்கிராமத்தில் அமைந்த, அழகாக இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கம்பீரமாகச் சிரிக்கும் விட்டலன் நம்மைப் பார்த்து ”வந்துவிட்டாயா?” என்று கேட்பது போலவே இருப்பது வியப்பு. துளசியும், சந்தனமும் மணக்க மணக்கத் தெய்வீகம் நிறைந்த கோவில் இது. தரிசனம் கண்டபின்பு ஏற்படும் பரவசத்திற்கு அளவேயில்லை....(எங்கே உன் மாமனார்,மனைவி,இவ்வளவு தூரம் அழைத்து வந்த உனக்கு என் சந்நிதிக்கு அழைத்து வர பொறுமையில்லையா என்கிறார் விட்டலர். மன்னிப்பு கேட்டு விட்டு கூட்டமில்லாத ருக்மணி சன்னதி அருகில் அவர்களுக்காக காத்திருக்கிறேன்)
படங்கள் கோயில் வெளிப்பறம் ,மூலவர்,
No comments:
Post a Comment