Sunday, November 15, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 15

 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺16🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

மராட்டிய மண்ணின் ஆன்மீக  நினைவுகள்  பகுதி 15

தலக்காடு

தேசிகர்சேவை முடிந்தபின் அருகில் உள்ள தலக்காடு செல்கிறோம். 

ஊரே மண் மேடாக காட்சி அளிக்கிறது. சிவன்,விஷ்ணு இருவருக்கும் தனித்தனி கோயில்கள். இருட்ட ஆரம்பித்த தருணம். நைசான மணலில் கோயிலின் பல்வேறு பகுதிகள் புதைந்துஇருந்தாலும் டூரிஸ்ட் கும்பல்….  இதுவும் ஆர்க்கியாலாஜிகல் கோவில்தான்...ஏன் இவ்வளவு மணல்?

 ஒரு கைடு வந்து கதை சொல்ல துவங்குகிறார்...

திருமலை ராஜா நோய்வாய் பட்டிருந்த தருணம் அது. திருமலைராஜா தன் இரண்டாவது மனைவியை (அலமேலம்மா) சிம்மாசனத்தில் அமர்த்தி விட்டு முதல் மனைவியுடன் தலக்காட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் நோக்கி செல்கிறார். வைத்தியர்களால் குணப்படுத்த முடியாத நோயாக இருந்ததால் வைத்தீஸ்வரனே துணை என்று இறைவனை நாடி சென்றார். நாட்கள் உருண்டோடின. அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக கவலைக்கிடமான நிலைமைக்கு வந்தது. அலமேலம்மாவிற்கு தகவல் சொல்லபடுகிறது. அலமேலம்மா தலக்காடு சென்றடையும் போது கணவரின் உயிர் பிரிந்தது. பருந்து பார்வையுடன் காத்திருந்த மைசூர் ராஜ உடையார் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது படை பரிவாரங்களுடன் சென்று ஸ்ரீ ரங்கபட்டினத்தை கைப்பற்றினார். மீண்டும் தன் ராஜ்ஜியத்திற்கு திரும்ப முடியாத அலமேலம்மா காவிரியின் மற்றொரு கரையில் அமைந்துள்ள ஊரான மலாங்கியில் தங்கி விடுகிறார். மைசூர் மன்னர்களின் ராஜ்ஜியம் அன்றிலிருந்து தொடங்கியது.

அலமேலம்மா செல்லும்பொழுது தன்னுடன் அரச குடும்பத்தின் நகைகளையும் எடுத்து செல்கிறார். ஸ்ரீ ரங்கபட்டினத்தின் ராணியான அலமேலம்மா எப்பொழுதும் வாரத்தின் ஓரிரு நாட்கள் ஸ்ரீ ரங்கபட்டின ரங்கநாயகி அம்மனுக்கு நகைகளை சாத்தி வழிபடுவது வழக்கம். ராஜ்ஜியத்தில் நகைகள் இல்லாததை கண்ட மைசூர் ராஜ உடையார் ஒரு சில வீரர்களை அனுப்பி நகைகளை பெற்று வருமாறு கட்டளையிட்டார். அலமேலம்மா அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ராஜ உடையார் மீண்டும் வீரர்களை அனுப்பி கட்டாயமாக நகைகளோடு வர ஆனையிடுகிறார். இம்முறை அலமேலம்மா நகைகளுடன் ஓட மன்னரின் கட்டளைக்கு அடிபணித்து அவரை வீரர்கள் துரத்துகின்றனர். அவர் காவரியில் விழுந்து உயிரை மாய்த்து கொள்கிறார். அலமேலம்மா ஆற்றில் விழுகும் முன் இந்த தலக்காடு மணல் மேடாகட்டும். ராஜ உடையார் வம்சம் வாரிசே இல்லாமல் போகட்டும் என்று சாபம் கொடுத்து மறைந்து விடுகிறார். அவர் கூறியது போலவே பல கோவில்களுடன் அழகிய நகரமாக விளங்கிய தலக்காடு மணல் மேடானது. ஆண்டாண்டு ஆற்றங்கரையின் மண் சில அடி உயர்ந்து தலக்காடு பாலைவனம் போல் ஆனது. கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. அதுமட்டுமல்லாமல் உடையார் குடும்பத்தையும் அலமேலம்மா சாபம் தொடர்ந்து வந்தது. இதுவரை பட்டத்து இளவரசர்களுக்கு ஆண் வாரிசுகள் பிறக்கவே இல்லை. தங்கள் உறவுகளுக்குள் தத்தெடுத்து பட்டத்து இளவரசர்களாக முடிசூட்டிக்கொண்டு பின்னர் மன்னர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.

மூலவர்..கீர்த்தி நாராயணப்பெருமாள்

தரிசனம் முடிந்து பெங்களூர் திரும்புகிறோம்…

மறுநாள் இரவு பண்டரிபுரம் செல்ல  பெங்களூர் ஸடேஷன் செல்கிறோம். சோலாப்பூர் வரை (621 கிமீ)ட்ரெய்ன். மாமனார்(85 வயதிலும்)உற்சாகமான பேர்வழி..வீட்டில் அடைந்து இருந்தவர் வெளி உலகை பார்த்தால் மேலும் உற்சாகமாகிறார். அவரை கிளப்பி அழைத்து வருவதற்குள் லேட்டாகி விடுகிறது. அனைவரும் டென்ஷனில் இருக்க பெங்களூர் ஸ்டேஷன் வாசலில் தத்ரூபமான ஒரு சிலை முன் கூலிங் க்ளாஸ் அணிந்து போட்டோ எடுத்துக்கொள்கிறார். 

பத்தாவது பிளாட்பாரத்தில் ட்ரெயின் வருவதறிந்து பராக்கு பார்த்தபடி வரும் அவரை அவசரமாக பாட்டரி வண்டியில் ஏற்றி பிளாட்பாரத்திற்கு கொண்டு வருகையில் ட்ரெய்ன் நின்று கொண்டிருக்க அவசரமாக அவரையும் லக்கேஜ்களையும் ஏற்ற,அவரது ஒரு செருப்பு ட்ரெயினுக்கு அடியில் விழ அதை எடுக்கச்சொல்லி அடம் பிடிக்க ட்ரெய்ன் கிளம்ப, அவரை சமாதான படுத்தி உள்ளே கொண்டு போனதில் ஒரு லக்கேஜ் (சாப்பாட்டுப்பை)மிஸ்ஸிங்…

இவரது அடாவடியை சமாளிக்க பாண்டுரங்கனை த்யானித்து இரவுச்சாப்பாட்டை தவிர்க்கிறோம்.

 படங்கள் தலக்காடு கோயில்,மாமனார் ஸ்டைல் போஸ்...




No comments:

Post a Comment