🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 55 🌹🌹🌹
பவள வண்ணப் பெருமாளின் கருவறையில் பவள வண்ணரை வணங்கிய நிலையில் காட்சி தருகிறார் பிருகு மகரிஷி.
அருள்மிகு பவள வண்ணன் திருக்கோவில் :-
மூலவர்: பச்சைவண்ணன்
தாயார்: மரகதவல்லி
உற்சவர்: ஸ்ரீநிவாசர்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: ப்ரவாள விமானம்
தீர்த்தம்: சக்ர தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ பவளவல்லீ ஸமேத ஸ்ரீ பவளவண்ண ஸ்வாமிநே நமஹ
ஊர்: காஞ்சிபுரம்
🌺🌺 இரு தலங்கள்:-
வையகத்தை வாழ்விக்கும் வைகுண்ட வாசனான இறைவன் நாராயணன் குடிகொண்டுள்ள திவ்யதேசங்களில், இத்தலமானது பச்சை வண்ணர், பவளவண்ணர் ஆகிய இரு திருக்கோவில்களைக் கொண்டதாகும்.
ஆழ்வார் பவளவண்ணப் பெருமாளை மட்டுமே மங்களாசாசனம் செய்திருந்தாலும் எதிர் எதிரே அமைந்துள்ள இரு தலங்களும் ஒரு திவ்யதேசமாகக் கருதுகின்றனர்.
ஆனால், இரண்டிற்கும் ஒரே தலவரலாறு கூறப்படுகிறது.
தாயார்: பவளவல்லி
உற்சவர்: பவளவண்ணன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: பிரவாள விமானம்
தீர்த்தம்: சக்ர தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ பவளவல்லீ ஸமேத ஸ்ரீ பவளவண்ண ஸ்வாமிநே நமஹ.
ஊர்: காஞ்சிபுரம்
🌺🌺 தலவரலாறு:-
விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் தங்களில் யார் பெரியவர்கள் என்ற சண்டை ஏற்பட்ட போது, அவர்களில் யார் தனது திருவடியையும், திருமுடியையும் முதலில் கண்டு கொள்கிறார்களோ அவர்களே பெரியவர் என தீர்ப்பளிப்பதாகச் சொன்னார் சிவபெருமான்.
விஷ்ணுவால் கண்டுபிடிக்க முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மாவாலும் திருமுடியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், பிரம்மா பொய் சாட்சி சொல்ல தாழம்பூவை அழைத்தார். தாழம்பூவும் பிரம்மா தங்களின் திருமுடியைக் கண்டார் என சிவ பெருமானிடம் பொய் சாட்சி கூறியது.
இதனால் தாழம்பூ வழிபாட்டிற்கு பயன்படாது என சிவபெருமான் சாபம் கொடுத்தார். பிரம்மா சிவ சாபம் பெற்று பூலோகத்தில் வழிபாடுகளோ, கோவிலோ இல்லாமல் ஆனார்.
எனவே, சிவனை மகிழ்ச்சிப்படுத்தி சாப விமோசனம் பெற யாகம் ஒன்றை நடத்தினார். கணவன், மனைவி சேர்ந்து நடத்தினால் தான் யாகம் பரிபூரணம் ஆகும் என்பது நியதி.
அப்போது பிரம்மா காஞ்சியில் தன்னையே படைத்த திருமாலை வணங்கி மிகப்பெரிய அளவில் யாகம் செய்தார். அச்சமயம் அவருடைய பத்தினியாகிய கலைவாணியை விடுத்து யாகம் செய்யத் தொடங்கினார்.
இதனை அறிந்த கலைவாணி மிகவும் கோபம் கொண்டு யாகத்தைத் தடுக்க பல வகைகளில் முயற்சி செய்தாள்.
பிரம்மாவின் வேண்டுகோளின் படி திருமால் யாகம் தொடர அருள் புரிந்தார். அப்போது கலைவாணி யாகத்தைத் தடுக்க மேலும் பல முயற்சிகளை செய்தாள்.அதில் ஒன்று அசுரர்களை அனுப்பி யாகத்தை தடை செய்வது.
அப்போது திருமால் கோபம் கொண்டு அசுரர்களை அழித்து, சிதறிய இரத்தத்துடன் பவளம் போல் சிவந்த திருமேனியாகக் காட்சி தந்து அருளியதால் "பவளவண்ணர்" என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
🌺🌺 மூலவர் திருமேனி:-
108 திவ்யதேசங்களில் இங்குள்ள பெருமாள் சிவந்த நிறத்துடன் ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
மகாவிஷ்ணு கிருதயுகத்தில் பால் நிறமாகவும், திரேதாயுகத்தில் பவள நிறமாகவும், துவாபரயுகத்தில் பசுமை நிறமாகவும், கலியுகத்தில் நீல நிறமாகவும் காட்சி தந்தாராம் அப்படிப் பார்த்தால் இங்குள்ள பெருமாள் திரேதாயுகத்தில் அருள் செய்தவராக இருக்கிறார்.
🌺🌺 சத்யஷேத்ரம்:-
ஒருமுறை மகாவிஷ்ணு, மகாலட்சுமியுடன் இருக்கும் போது பிருகு மகிரிஷி விஷ்ணுவைக் காண வைகுண்டத்திற்குச் சென்றார். பிருகு வந்ததும் மகாவிஷ்ணு பிருகுவைக் கவனித்தும், கவனிக்காதது போல மகாலட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
தன்னை விஷ்ணு அவமதிப்பதாகக் கூறி மகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். விஷ்ணுவோ தன்னை மிதித்த பாதம் புண்பட்டதோ என அவரது காலை வருடிக் கொடுத்தார்.
தவறை உணர்ந்த பிருகு, பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று விமோசனம் தேடிச் சென்றார். இதனிடையே காஞ்சியில் உள்ள சத்யசேத்ரத்திற்குச் சென்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றார் நாரதர்.
அதன்படி பிருகு மகிரிஷி இத்தலத்திற்கு வந்து சக்ர தீர்த்தத்தில் நீராடி தவம் செய்து விஷ்ணுவை வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த விஷ்ணு விமோசனம் அளித்தார்.
எனவே, பிருகு முனிவர் கருவறையில் விஷ்ணுவை வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
🌺🌺 எண்திசை அதிபர்கள்:-
இங்குள்ள பிரவாளவல்லித் தாயார் சன்னிதியின் முன்மண்டப மேற்கூரையில் எட்டு திசை அதிபர்களின் சிற்பங்கள் உள்ளன. இவர்களை வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். வீடு, மனையில் உள்ள தோசங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
வீடு கட்டுவதில் தடை, தாமதம் உள்ளவர்கள் இந்த சன்னிதியின் கீழ் நின்று வணங்கினாலே தங்கள் குறை தீரும் என்று நம்புகின்றனர்.
கோவிலுக்கு முன்பகுதியில் சக்கரதீர்த்தம் உள்ளது. வட்ட வடிவில் சக்கரம் போலவே உள்ள இந்த தீர்த்தத்தின் மத்தியில் தான் சுவாமி சக்கராயுதம் கொண்டு அசுரர்களை வதம் செய்தார் என்கிறார்கள்.
🌺🌺 மங்களாசாசனம்:-
இத்தலத்தை திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
மதிள் கச்சியூராய் பேராய்
கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல்
மார்வன் குலவரையான் மடப்பாவை
யிடப்பால் கொண்டான் பங்கத்தாய் பாற்கடலாய்
பாரின் மேலாய் பணி
வரையினுச்சியாய் பவள வண்ணா எங்குற்றா
யெம்பெருமான் உன்னை நாடி
யேழையே னிங்ஙணமே யுழிதருகேனே!!!"
🌺🌺 வழித்தடம்:-
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளது. நடந்து சென்றே திருக்கோவிலை அடையலாம்
அருள்மிகு மரகதவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.
அருள்மிகு பவளவண்ணப் பெருமாள் பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு பவளவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோவில் - திருப்பரமேச்சுர விண்ணகரம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment