வசந்த காலம் வருமோ?- 92
By N Krishnamurthy
பின்பு வசுமதி மைதிலியின் அருகில் அமர்ந்து, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு "மாமி உங்களுக்கு ஏன் இந்த சம்பந்தத்தில் இஷ்டமில்லைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா" என்று கேட்டாள். அதற்கு மைதிலி "தாராளமாக சொல்றேன்" என்று சொல்லி "என் பொண்ண விட்டு என்னால பிரிஞ்சு இருக்க முடியாது. அவளை மெட்ராஸ்லயோ அல்லது தமிழ்நாட்டில் வேறு இடத்திலும் இருக்கும் ஒரு பையனுக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுப்பேன். அப்பதான் அவளை நான் நெனச்சபோது பாக்கலாம். ஃபாரின்ல இருக்க பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து, கண் காணாத சீமைக்கு அவள அனுப்றதக்கு நேக்கு இஷ்டம் இல்ல. இந்த விஷயத்துல நான் ரொம்ப தீர்மானமா இருக்கேன். எதுக்கோசரமும், யாருக்கோரமும் நான் என் முடிவ நான் மாத்திகறதா இல்லை " என்று கூறினாள். இதைக் கேட்டதும் ரங்கநாயகி மனதுக்குள் மிகவும் மகிழ்ந்தாள். பின்பு வசுமதி மைதிலியிடம் "சரி,மாமி, நீங்க சொன்ன பாயிண்ட் உங்கள பொறுத்த வரைக்கும் கரெக்ட். இதுக்கு முன்னாடி ரெண்டு பேர் ஜாதகத்தையும் பாக்கலாம். ஜாதகம் பொருந்தலைன்னா அதையே காரணமா காட்டி இந்த சம்பந்தத்தை வேணாம்ன்னு சொல்லிடலாம் .அப்படி ஜாதகம் பொருந்தி இருந்தா நம்ப ராஜேஸ்வரி மாமி கிட்ட, நீங்க சொல்ற பாயிண்ட சொல்லலாம். ஒருவேளை அவ ஒத்துண்டூட்டா அப்புறம் உங்களுக்கு என்ன பிராப்ளம் இருக்க முடியும் இதுல" என்று கேட்டாள்.
அதற்கு மைதிலி " நீ சொல்றதெல்லாம் சரிதான். ஆனா அவா திரும்பி இந்தியாக்கு வருவான்னு நேக்கு தோணல . பொதுவா அமெரிக்காவில் போய் செட்டிலானவா எல்லாம் திரும்பி இந்தியா வந்ததா சரித்திரமே இல்லைனு எல்லாரும் சொல்றா" என்றாள்.
" சரி.மாமி.அதுக்கு என்ன இப்போ. அது நாளைக்கு தெரிஞ்சிட போறது" என்று கூறிய வசுமதி சாரங்கனிடம் " மாமா நீங்க சத்தரத்தை காலி பண்ணதுக்கப்புறம் ஜோசியர் கிட்ட போய் இரண்டு ஜாதகத்தையும் காமிச்சுண்டு வாங்கோ. அவர் என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்கலாம்" என்றாள்.
அடுத்த அரை மணி நேரம் அவர்கள் அனைவரும் சத்திரத்தை காலி செய்யும் முனைப்பில் இருந்தார்கள்.
பின்பு வீட்டுக்கு போய் சேர்ந்தார்கள். அரைமணியில் எல்லோருக்கும் காபி கொடுக்கப்பட்டது. சாரங்கன் இரண்டு ஜாதகங்களையும் எடுத்துக்கொண்டு ஜோசியர் வீட்டுக்கு புறப்பட்டார். வசுமதி அவரிடம்" நானும் வரேன் மாமா" என்று கூறினாள். அதற்குள் பத்மநாமன் " நீ எதுக்கம்மா அந்யாயத்துக்கு அலயற. நான் சாரங்கன் கூட போயிட்டு வந்துடறேன்" என்று கூறி புறப்பட்டார்.
இருவரும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்தார்கள். வந்ததும் அவர்கள் ஜோசியர் இரண்டு ஜாதகமும் மிக நன்றாக பொருந்துகிறது என்று கூறியதாக சொன்னார்கள். இரண்டு ஜாதகக்காரர்களுக்கும் குரு பலன் வந்து விட்டதாம்.வெகு சீக்கிரத்தில் கல்யாணம் நடக்கலாம் என்றும் கூறுகிறார் என்று கூறினார்கள். இதை கேட்டதும் ரங்கநாயகி முகம் காற்றினால் உப்பியிருந்த பலூன் காற்றிழந்து போனது போல வாடிவிட்டது. வசுமதிக்கு இந்த செய்தி ஒன்றும் புதிதாக புதிதாக இல்லை. ஏற்கனவே அன்று காலை ராஜேஸ்வரி "தான் இரண்டு ஜாதகங்களையும் தன் ஜோசியர் கிட்ட காட்டியதில் இரண்டும் மிக நன்றாக பொருந்துவதாக கூறினார்" என்று கூறியிருந்தாள். இதன் பிறகு வசுமதி மைதிலியிடம்" சரி மாமி. அவா நாளைக்கு வரட்டும்.வந்ததுக்கப்புறம் நீங்க உங்க பாயிண்ட சொல்லலாம். அவா எப்படி ரியாக்ட் பண்றான்னு பாத்துட்டு அதுக்கப்புறம் நம்ம ஒரு தீர்மானத்துக்கு வரலாம்" என்று கூறினாள். ம்ருதுளாவிற்கு போன உயிர் திரும்பி வந்தமாதிரி இருந்தது.
No comments:
Post a Comment