வசந்த காலம் வருமோ?-104
By N Krishnamurthy
பஸ் வடக்கஞ்சேரியை அடைந்ததும் ட்ரைவர் பாலு, ரோடை விட்டு விலகி பஸ்ஸை நிறுத்தினார் . " ஒரு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு விட்டு பின்பு கிளம்பலாம்" என்று கூறினார். அனைவரும் கீழே இறங்கினர் . பக்கத்தில் இருந்த கடையில் பாத்ரூம் வசதி இருந்தால் பாத்ரூம் செல்ல வேண்டியவர்கள் அங்கு சென்று வந்தனர். அருகில் இருந்த கடையில் நேந்திரங்காயை வெட்டி, ஒரு பெரிய பாணலியில் கொதித்து கொண்டிருந்த தேங்காய் எண்ணையில் போட்டுக் கொண்டிருந்தார்கள். நேந்திரம் சிப்ஸ் வாங்க வந்தவர்களுக்கு, ஒரு கையளவு, சூடான சிப்ஸ் எடுத்து சாம்பிளாக கொடுத்தார்கள். சாரங்கன் மொத்தமாக ஐந்து கிலோ சிப்ஸ் வாங்கினார்.
சிலர் எதிர்புறமிருந்த டீக்கடையில் டீ குடித்தனர்.
வடக்கஞ்சேரியை விட்ட பஸ் திருச்சூரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. சாரங்கன் நேந்திரம் சிப்சை எல்லோருக்கும் வினியோகித்தார்.
"சுஸ்வாத்லேந்து வாங்கிண்டு வந்த பக்ஷணத்த எங்க வெச்சேள்" என்று ராஜேஸ்வரி மார்கபந்துவிடம் கேட்க அவர் பின் சீட்டிலிருந்த கட்ட பையை காட்டினார். சங்கர க்ருஷ்ணன் அதை எடுத்து வந்தான். அதிலிருந்த கைமுறுக்கை எடுத்து
எல்லோருக்கும் வினியோகித்தாள் ராஜேஸ்வரி. இதையெல்லாம் பார்த்த சிதம்பரம் "ராத்திரி மாக்கிச்சோர்தான் போல இருக்கே" என்று கூறி சிரித்தார். இதைக்கேட்ட ராஜேஸ்வரி"இல்லை. இல்லை.
சுடான ரவா கேசரி, அரிசி உப்புமா,கத்திரிக்காய் கொத்சு தான் ராத்திரி மெனு "என்றாள்.
ஒரு மூவர் சீட்டில் முதலில் பத்மநாபனும், இடையில் சிதம்பரமும், கடைசி சீட்டில் ரகுவும் உட்கார்ந்து கொண்டிருந்தனர்.
பத்மநாபன் சிதம்பரத்தை பார்த்து " என்ன சார், நீங்க பயங்கரமா ஜோக் அடிப்பேங்கன்னு ராஜேஸ்வரி மாமி சொன்னா.இது வரை ஒரு ஜோக்கும் அடிக்கலயே.சும்மா இருக்கேளே" என்றார். அதைக் கேட்டு சிதம்பரம்" அடிச்சா தாங்குவேளான்னு தெரியல.சரி, அடிச்சூட்டா போச்சு" என்றவர் பத்மநாபனிடம் " நீங்கள் எங்கே வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்" என்று கேட்டார். அதற்கு பத்மநாபன்" நான் ஒரு பிரைவேட் இன்டஸ்ட்ரீல அக்கவுண்ட்ஸ் மேனேஜராக இருந்து ரிட்டயர் ஆகி விட்டேன்" என்று கூறினார்.
"சரி, அப்போ அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ட பத்தி ஒரு ஜோக் சொல்லிடறேன்" என்றார்.
பின்னர் சிதம்பரம் சொல்ல ஆரம்பித்தார்."நேக்கு தெரிஞ்ச ஒரு பையன் ஒரு கம்பெனிக்கு அக்கவுண்ட்ஸ் அசிஸ்டன்ட் வேலைக்கு அப்ளை பண்ணி இருந்தான். அந்த கம்பெனியில அப்படி அப்ளை பண்ணுவாளுக்கு ஒரு ரிட்டன் டெஸ்ட் வெச்சிருந்தா. அக்கவுண்ட்ஸ்ல வேல செய்யறவா,நம்பரை பத்தி நல்லா தெரிஞ்சிண்டிருக்கணம் என்பதற்காக, எயிட்(8) என்ற நம்பரோட ஸ்கொயர் என்ன அப்படின்னு கேட்டிருந்தா. நம்ம பையன் அதுக்கு 63 ன்னு பதில் எழுதி இருந்தானாம். நம்ப பையனுக்கு வெளியில வந்த உடனே தான் புரிஞ்சுது " நம்ம தப்பா எழுதிட்டோம்"னு. 64 தான் சரியான விடைன்னு அவனுக்கு தெரிஞ்சுதாம். சரி,அந்த வேலை நிச்சயம் கெடைக்காதூன்னு அவனுக்கு தீர்மனமா தெரிஞ்சுது. ஒரு மாசம் கழிச்சு அந்த கம்பெனியில் இருந்து அவனுக்கு வேலையில சேர சொல்லி ஆர்டர் வந்தது . அவனுக்கு குழப்பமாக இருந்தது. "ஏதாவது தவறிப் போய் ஆர்டர் அனுப்பி இருப்பாளோ "ன்னு எண்ணினான். அந்த கம்பெனியில் வேலைக்கு போய் சேர்ந்தான். மேல் அதிகாரியிடம் தான் ரிட்டன் டெஸ்டில் தவறான விடை எழுதியிருந்ததை சொல்லிவிடலாம் என்று நினைத்தான். அப்படி சொன்னால் ஒருவேளை தன்னை வேலையிலிருந்து தூக்கி விடுவார்களோ என்று பயந்து சொல்லாமல் இருந்தான். அந்த கம்பெனியில் ஒரு வருடம் வேலை செய்து முடிந்ததும், அவனது வேலையை நிரந்தரமாக்கி ஆர்டர் கொடுத்தார்கள். "சரி இனிமே நம்மள வேலையிலிருந்து யாரும் தூக்க முடியாது" என்று தைரியத்தில், மனத்துக்குள் ஒரு வருடமாக குடைந்து கொண்டிருந்த தன்னுடைய குழப்பத்தை தன் மேல் அதிகாரியிடம் சொன்னான். அதைக் கேட்ட அவன் மேல் அதிகாரி "நீ தவறாக எழுதி இருந்தது தெரியும்" என்றார். "அப்படி இருந்தும் எனக்கு வேலை கொடுத்தீர்களே"என்று கேட்டான் அவன்.
"என்ன செய்வது ரிட்டன் டெஸ்ட் எழுதிய 74 பேரில் உன்னுடைய ஆன்சர் தான் நியரஸ்ட் ஃபிகராக இருந்தது. மீதி எல்லோரும் அறுபத்தி நாலு என்ற சரியான விடைக்கு பதில் 230, 78,36 போன்ற தவறான விடைகளையே கொடுத்திருந்தார்கள்.வேறு வழியில்லாமல் உன்னை செலக்ட் செய்தோம்" என்று கூறினார். இதை கேட்ட பத்மநாபனுக்கும், ரகுவிற்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. வாய் விட்டு, உரக்க சிரிக்க ஆரம்பித்தனர். மற்றவர்கள் இவர்கள் சிரிப்பதை பார்த்து ,விஷயத்தை கேட்டறிந்ததும் பஸ்ஸில் இருந்த நிறைய பேர் இந்த ஜோக்கை கேட்டு சிரிக்க ஆரம்பித்தார்கள்.
No comments:
Post a Comment