Sunday, February 25, 2024

முற்பகல் செயின்..47

 முற்பகல் செயின்..47

By N Krishnamurthy 

ஆதித்யா காசிநாதன் வீட்டிலிருந்து திரும்பியவுடன் நமச்சிவாயம் அவனை பார்த்து " உங்க தாத்தா, பாட்டி என்ன சொல்கிறார்கள்" என்று கேட்டார். " என்ன சொல்றாங்க தாத்தா, சுரைக்காய்க்கு  உப்பு இல்லை என்று பழைய பல்லவியையே பாடறாங்க" என்று கூறிய ஆதித்யா, "சில சமயம் கண்ணதாசன் பாடிய மாதிரி "திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்" என்று கூட எனக்கு தோன்றுகிறது" என்றான். "அப்படியெல்லாம் சொல்லாதப்பா.  அவர்கள் வந்த வழிப்படி . அவர்கள் பேசுகிறார்கள்

இதெயெல்லாம் ஒரு காதில் வாங்கிக் கொண்டு இன்னொரு காது வழியாக விட்டு விட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் நாம் முன்னேற முடியும்" என்று கூறினார். "சரியாக சொன்னீர்கள் தாத்தா" என்றான் ஆதித்யா. பின்னர் அனைவரும் அமர்ந்து டீ குடித்தார்கள்.

இரவு ஏழு மணிக்கு தேன்மொழி பூரியும், உருளைக்கிழங்கு மசாலாவும் பண்ணி இருந்தாள். சாப்பிட்ட உடன் ஆதித்யா அவளை அழைத்துக்கொண்டு போய் அவளுடைய ஹாஸ்டலில்  விட்டு விட்டு திரும்பி வந்தான்.

இது நடந்த மூன்று நாட்களுக்கு பிறகு, திரு ஆதித்யாவிற்கு போன் செய்தார். இன்னும் ஒரு வாரத்தில் அங்கு வருவதாகவும், 45 நாள் லீவில் வரப்போவதாகவும் கூறினார். வந்த உடனேயே கடையநல்லூருக்கு சென்று அவர்களுடன் பேசி திருமண தேதியை முடிவு செய்து கொள்ள வேண்டும். முடிந்தால் திருமணத்தை இந்த 45 நாளுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும்" என்றும் கூறினார். இதற்குள் அவர் நித்யாவை ஓரளவுக்கு சமாதானப்படுத்தி இருப்பார் போல இருக்கிறது. ஏன் என்றால் நித்யா பேசும் பொழுது முதலில் பேசிய மாதிரி அவ்வளவு காட்டமாக பேசவில்லை.

சொன்னது போலவே திருவும்,நித்யாவும் வந்து சேர்ந்தார்கள். ஆதித்யாவிற்கும், நமச்சிவாயத்திற்கும், கோமதிக்கும் நிறைய பரிசு பொருட்களை வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள்.

ஆதித்யா இங்கிருந்து கொண்டு தன்னுடைய பெற்றோர்களுக்கு அனுசரணையாக இருப்பதால், திரு நமச்சிவாயத்தையும் கோமதியையும், தைரியமாக முகத்தைப் பார்த்து பேச முடிந்தது.

அவர்கள் வியாழன் அன்று சென்னைக்கு  வந்தார்கள். "வெள்ளி கிளம்பி சனி அன்று கடையநல்லூர் சென்று விட்டு வரலாமா" என்று ஆதித்யா கேட்டதற்கு "சரி,அப்படியே  ஏற்பாடு செய்"என்றார் திரு. "டாக்ஸி எடுத்துக் கொள்ளலாமா அல்லது  ட்ரெயினில் புக் செய்து விடலாமா"என்று கேட்டான் ஆதித்யா. "நாம் ஐந்து பேர் தானே போகப் போகிறோம். நீயே முடிவு செய்யேன்" என்றார் திரு. இதற்குள் நமச்சிவாயம் " நீங்களெல்லாம்  போய்விட்டு வாங்கப்பா. நாங்க ஏற்கனவே போய்விட்டு வந்து விட்டோம் " என்று கூறினார் .ஆதித்யா திருவிடம் " ஏற்கனவே காசி தாத்தாவையும், காந்திமதி பாட்டியையும் அழைத்துக் கொண்டு போவதாக நான் வாக்கு கொடுத்திருக்கிறேன். அவர்களையும்  கூட்டிக்கொண்டு போய் விடுவோம்" என்றான். பின்பு ஆதித்யா காசிநாதனுக்கு போன் செய்து "வெள்ளிக்கிழமை இரவு ட்ரெயின் பரவாயில்லையா"என்று கேட்க, அவர் சரி என்று சம்மதம் கூறியவுடன் வெள்ளி இரவு பொதிகை எக்ஸ்பிரஸில்  ரம்யாவுக்கும் சேர்த்து ஆறு டிக்கெட்டுகளையும், திரும்பி வர ஞாயிற்றுக்கிழமை பொதிகை எக்ஸ்பிரஸில் ஆறு  டிக்கெட்டுகளையும் ஆதித்யா புக் செய்தான்.

வெள்ளிக்கிழமை திருவும், நித்யாவும் காசிநாதன் வீட்டிற்கு போனார்கள். மாலை 4 மணிக்கு அவர்கள் மீண்டும் நமச்சிவாயம் வீட்டுக்கு திரும்பி வந்தார்கள். காசிநாதன், காந்திமதி, ரம்யா மூவரும் நேராக எக்மோர் ஸ்டேஷன் வருவதாக சொல்லிவிட்டார்கள். ஆதித்யாவும், திருவும், நித்யாவும் எக்மோருக்கு, ட்ரெயின் கிளம்ப அரை  மணி முன்பாக போய் சேர்ந்தார்கள். இவர்கள் போய்ச்சேர்ந்த பத்து நிமிடங்களில் காசிநாதன் குடும்பமும் வந்து சேர்ந்தது.

வெள்ளிக்கிழமை ஒரு நாள் லீவு போட்டுவிட்டு, வியாழக்கிழமை இரவே தேன்மொழி கடையநல்லூர் சென்று விட்டிருந்தாள்.

இரவு சாப்பாட்டிற்காக எக்மோர் வி.எல்.ஆரில் ஆதித்யா சப்பாத்தி, குர்மாவை பார்சல்  வாங்கிக் கொண்டான். வண்டியில் ஏறி அனைவரும் அமர்ந்தனர்.

வண்டி செங்கல்பட்டை தாண்டியுடன் இரவு சாப்பாட்டை  முடித்துக்கொண்டு, அனைவரும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்கள். காலை சரியான சமயத்திற்கு ட்ரெயின் கடையநல்லூரை போய் சேர்ந்தது. பிளாட்பாரத்தில் சந்திரசேகர் மற்றும் சுப்பிரமணிய பிள்ளை நின்று கொண்டு இருந்தார்கள். ரயிலில் இருந்து எல்லோரும் இறங்கியதும், ஆதித்யா எல்லோரையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான். வள்ளிநாயகம் வேனுடன் ஸ்டேஷனுக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தான். ஆதித்யா எல்லோரையும் வள்ளி நாயகத்திற்கு அறிமுகப்படுத்தினான்.

அவர்கள் அனைவரும் வேனில் ஏறி சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டை அடைந்தார்கள்.

No comments:

Post a Comment