வசந்தகாலம் வருமோ?-93
By N Krishnamurthy
அன்று இரவு 8:00 மணி சுமாருக்கு வசுமதி ராஜேஸ்வரிக்கு போன் செய்தாள். போனை எடுத்த ராஜேஸ்வரி படபடப்புடன் "என்ன காயா, பழமா " என்றாள். அதற்கு வசுமதி "அது உங்க கையில தான் மாமி இருக்கு" என்று சொன்னாள்.
" என்ன சொல்ற நீ. புரியலயே" என்றாள் ராஜேஸ்வரி.நாளைக்கு காலைல ஷார்ப்பா எட்டு மணிக்கு வந்துடுங்கோ. எல்லா விஷயத்தையும் சொல்றேன். நீங்க மனசு வெச்சா,அனேகமா, ஒண்ணும் பிராப்ளம் இருக்காதுன்னு நெனைக்கிறேன்" என்று கூறி போனை வைத்தாள்.
மறுநாள் காலை 8 மணிக்கு ராஜேஸ்வரி, மார்க்கபந்து இருவரும் சாரங்கன் வீட்டுக்கு வந்தார்கள். வழக்கம்போல "வாங்க மாமி" என்று கூப்பிடும் மைதிலி சமையல் அறையில் உள்ளே இருந்தாள். முடிந்தவரை வெளியில் வராமல் தன்னை பார்த்துக் கொண்டாள். ராஜேஸ்வரியை பார்ப்பது அவளுக்கு தர்மசங்கடமாக இருந்தது. வசுமதி அவர்கள் இருவரையும் பார்த்து 'வாங்கோ' என்று வரவேற்றாள். அவர்கள் சோபாவில் அமர்ந்தார்கள். அவர்களுக்கு எதிர்ப்புறம் சாரங்கனும், பத்மபநாபனும் அமர்ந்தார்கள். மார்க்கபந்து அவர்களைப் பார்த்து "என்ன முடிவு பண்ணி இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா" என்று கேட்டார்.
பத்மநாபன் " எங்கள பொறுத்த வரைக்கும் உங்க கூட சம்பந்தம் வைத்துக் கொள்ள எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்ல. ஆனா...." என்ற இழுத்தார் . இதை கேட்ட மார்கபந்து "எதுக்கு ஆனான்னு இழுக்குறீங்க" என்று கேட்டார். அதற்கு பத்மநாபன் " மைதிலி தன் பொண்ண விட்டூட்டு பிரிஞ்சு இருக்க விருப்பம் இல்லை.மாப்பிள்ளை பையன் அட்லீஸ்ட் தமிழ்நாட்டிலேயோ அல்லது மெட்ராஸ்லேயோ இருக்கணம்னு எதிர்பார்க்கிறா. நீங்க அமெரிக்காவுல
எல்லாத்தையும் விட்டூட்டு இங்க வந்து செட்டில் ஆக முடியுமான்னு எங்களுக்கு தெரியல. அதுக்கு நீங்க ஒத்துகற பட்சத்தில் நம்ம சம்பந்தம் வச்சுக்கலாம்ன்றது எல்லோருடைய அவிப்ராயம்" என்று கூறினார்.
ரங்கநாயகி "ஆஹா இது எப்பேர்பட்ட தருணம்.ராஜேஸ்வரி வாயால சந்தோஷ சமாஜரத்த கேக்க போறோம். ராஜேஸ்வரியாவது அமெரிக்காவை விட்டு விட்டு வருவதாவது?
ஒரு பொண்ணுக்காக நல்ல வாழ்க்கை தரத்தை தொலைச்சூட்டு,இந்தியா வந்து லோல் பட அவளுக்கென்ன பைத்தியமா" என மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.
இதைக் கேட்ட மார்கபந்து ராஜேஸ்வரியை திரும்பிப் பார்த்தார். ராஜேஸ்வரி ஓரளவுக்கு இதை எதிர்பார்த்து இருந்ததால் அவள் பேச ஆரம்பித்தாள்.
" மைதிலி மாமி இப்படி சொன்னது முதல்ல நேக்கு ஆச்சர்யமா இருந்தது.
இங்க இருக்கற பல பேர் இவா அமெரிக்கா வாழ்க்கையை தொலச்சூட்டு இந்தியா வந்து செட்டில் ஆக மாட்டான்னு நெனச்சிண்டிருப்பேள்.
ம்ருதுளான்ற சொர்கத்தை விடவா அமெரிக்க வாழ்க்கைல சொகம் கெடச்சூடும். அன்னிக்கு தியாக ப்ரம்மம் "நிதி சால சுகமா"ன்னு பாடலயா? நானோ,இவரோ என் பையனோ என்னிக்கும் பணந்தான் பிரதானம்னு இருந்தது இல்லை. செல்வம்னு நம்ப சொல்லச்சே அது பணத்தையும் , நக நட்டையும் மட்டும்தான் குறிக்கறதூன்னு நெறய பேர் தப்பர்த்தம் பண்ணிண்டிருக்கா.
அதை தாண்டி செல்வம்னறது நல்லா சொந்தத்தையும், வ்யாதி ,வெக்க இல்லா வாழ்க்கையையும் , அதனால கெடைக்க கூடிய மன சந்துஷ்டியையும் குறிக்கும்னறது என் அவிப்ராயம்." என்று சொல்லி தொண்டையை கனைத்துக்கொண்டு,சிறிது தண்ணீரை குடித்த பிறகு, தன் பேச்சை தொடர்ந்தாள் .
" இவர் இன்னும் நாலு மாசத்துல ரிடையராக போறார். இன்னும் அஞ்சு வருஷம் வேலை செய்யணும்னு இவர் ஆபிஸ்ல கேட்டிண்டிருக்கா. ஆனா இவர் ஒண்ணும் அவா கிட்ட கமிட் பண்ணல. எனக்கும் இந்தியாவுக்கே திரும்பி வந்துடனும்னு தான் இருக்கு. சங்கர க்ருஷ்ணனுக்கும் வர மே மாசம் படிப்பு முடிஞ்சிடும். மெட்ராஸ்ல ஒரு வேலைய பாத்துண்டு தன்னுடைய சங்கீத இம்ப்ரூவ் பண்ணிக்கணும்னு அவன் நெனக்கறான். கிட்டத்தட்ட அடுத்த மே, ஜூனுக்குள்ள நாங்க எல்லாமே மெட்ராஸ் வந்து செட்டிலாயிடுவோம். உங்களுக்கெல்லாம் தெரியுமா, தெரியாதான்னு தெரியல. சுப்புலக்ஷ்மி மாமி ஏற்பாடு பண்ணி கொடுத்த வாடகை வீட்ட நாங்க வெலைக்கு வாங்கின காரணமே மெட்ராசுக்கு பர்மனன்ட்டா குடி வந்துடலாம்ற நோக்கத்தில் தான்" என்று சொன்னாள். இதைக் கேட்ட பத்மநாபனும், சாரங்கனும் ஒரே சமயத்தில் " மைதிலி,மாமி பேசினதெல்லாம் காதல உழுந்துதா" என்று கேட்டார்கள். சமையலறையை விட்டு வெளியே வந்த மைதிலி, ராஜேஸ்வரியின் கைகளைப் பிடித்துக் கொண்டு " நீங்க என்ன தப்பா நெனைச்சுக்கப்படாது. என் பொண்ணு மேல எனக்கு இருக்கிற பாசம் தான் என்ன அப்படி கண்டிஷன் போட வெச்சுது. நீங்க பை சான்ஸ் இந்தியாவுக்கு வரமாட்டேங்கேன்னு சொல்லி இருந்தீங்கன்னா என் நெலைமை ரொம்ப தர்ம சங்கடமா போயிருக்கும்"என்றாள். இதைக்கேட்ட ராஜேஸ்வரி " நீங்க இப்படி ஒரு கண்டிஷன் போடுவேள்னு நான் நெனக்கல. ஆனா அந்த Flat வெலைக்கு வந்தபோது அத வாங்க சொல்லி என் உள் மனசு நேக்கு சொல்லித்து.காரணம் அப்போ என்னான்னு நேக்குபுரியல.
அன்னிக்கி தேதிக்கு இவர்கிட்ட கூட அதுக்குண்டான காரணத்தை நான் சொல்ல முடியல. ஆனா வாங்க சொல்லி வற்புறுத்தினேன் " என்றாள்.
வேர்ல்டு கப் கிரிகட் மேட்ச்சில் முதல் விக்கட் விழுந்த மாதிரி இதனால் விழுந்த
முதலும் கடைசியுமான விக்கட் ரங்கநாயகிதான்.
No comments:
Post a Comment