முற்பகல் செயின்..48
By N Krishnamurthy
அரைமணியில் வேன் சுப்பிரமணிய பிள்ளை வீட்டை அடைந்தது. வாசலிலேயே பரமகல்யாணி, தேன்மொழி மற்றும் குழந்தைகள் நின்று கொண்டிருந்தார்கள். வேனில் இருந்து அனைவரும் இறங்கி உள்ளே சென்ற உள்ளே செல்ல முயற்சிக்கும் பொழுது பரமகல்யாணி அனைவரையும் பார்த்து "வாங்க, வாங்க" என்று வரவேற்றாள். உள்ளே கூடத்தில் ஐந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தன அதில் காந்திமதி, நித்யா,காசிநாதன்,திரு ஆகியோர் அமர்ந்தார்கள். ஆதித்யாவும், ரம்யாவும் கீழே விரித்திருந்த ஜமக்காளத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். ஒரு பெரிய எவர் சில்வர் தாம்பாளத்தில் நீர் நிரப்பிய டம்ளர்களை கொண்டு வந்து எல்லோருக்கும் நீட்டினாள் பொற்கொடி. தண்ணீரைக் குடித்த திரு " தண்ணி ரொம்ப டேஸ்டா இருக்கு" என்றார். இதைக் கேட்ட சுப்ரமண்ய பிள்ளை "ஆமாங்க, இது தாமிரபரணி தண்ணி. அப்படித்தான் இருக்கும்" என்றார்.
"எல்லோருக்கும் காபி கலந்து விடுகிறேன்" என்றாள் பரமகல்யாணி. காசிநாதன் " எனக்கும், காந்திமதிக்கும் சர்க்கரை போட வேண்டாங்க"என்று கூறினார் .ஐந்து நிமிடங்களில் எல்லோரும் கொல்லை புறம் சென்று பல் துலக்கிக் கொண்டு வந்த பிறகு சூடான காபி தரப்பட்டது. அதன்பிறகு சுப்பிரமணிய பிள்ளை காசிநாதனை பார்த்து "பிரயாண அலுப்பு தீர சிறிது நேரம் தூங்க வேண்டும் என்றால் நீங்கள் அறையில் போய் தூங்கலாம் " என்று கூறினார். "வேண்டாம். கொஞ்ச நேரம் கழித்து வெந்நீரில் குளித்தால் அசதி போய்விடும்" என்றார் காசிநாதன்.
"காலையில் இட்லி பண்ணி விடலாமா இல்ல நேராக 12 மணிக்கு சாப்பிடலாமா" என்று கேட்டாள் பரம கல்யாணி.
" மார்னிங் பிரேக் பாஸ்ட் வேணும்னு அவசியம் இல்ல .நேரடியாக சாப்பிட்டு விடலாம்" என்றாள் நித்யா.
பின்புறம் இருந்த மண்ணடுப்பில் வெந்நீர் போடப்பட்டது. கிட்டத்தட்ட 11 மணிக்கு எல்லோரும் குளித்து முடித்தார்கள். சரியாக பன்னிரண்டு மணிக்கு ஹாலில் வாழை இலை போடப்பட்டது. காசிநாதனுக்கும் காந்திமதிக்கும் டைனிங் டேபிள்மேல் வாழை இலை போட்டார்கள். இலையில் முதலில் சிறிது பால் பாயாசம் பரிமாறினாள் தேன்மொழி. பூப்போன்று மலர்ந்திருந்த சாதமும், வெண்டைக்காய் சாம்பார், அவரைக்காய் பொறியலும் பரிமாறப்பட்டன.
சாம்பார் முடிந்ததும், தக்காளி ரசம்,அதனை அடுத்து வீட்டிலே தோய்த்த பசுந்தயிரும் பரிமாறினார்கள். வழக்கத்தை விட சிறிது அதிகமாகவே எல்லோரும் உண்டனர்.
சாப்பிட்டு முடித்தவுடன் சுப்ரமண்ய பிள்ளை அவர்களிடம் "வெத்தலை, பாக்கு போடும்பழம் உண்டா பழக்கம் உண்டா" என்று கேட்டார். "இல்லைங்க பாக்கு,வெற்றிலை போடும் பழக்கம் கிடையாது" என்று கூறிவிட்டார் காசிநாதன்.
சாப்பிட உடன் மீண்டும் எல்லோரும் ஹாலில் அமர்ந்தார்கள். ஒருபுறம் சுப்பிரமணிய பிள்ளை, சந்திரசேகரன், தேன்மொழி, பொற்கொடி,வெண்ணிலா, அருள்மொழி, பரம கல்யாணி அமற எதிர்புறம் ஆதித்யாவும், ரம்யாவும் ஜமக்காளத்தில் அமர்ந்திருக்க, மீதி நால்வரும் நாற்காலியில் அமர்ந்து இருந்தார்கள். சுப்ரமணிய பிள்ளை தான் முதலில் பேச்சை துவக்கினார்.அவர் திருவைப் பார்த்து" நீங்க ரொம்ப நாளா அமெரிக்காவில் இருந்துட்டீங்க போல" என்று கேட்டார். அதற்கு திரு "ஆமாம் நான் படித்து முடித்தவுடன் அமெரிக்கா சென்றேன். அங்கேயே தங்கிவிட்டேன். இந்தியாவுக்கு எப்பொழுதாவது வந்து போவேன். அவ்வளவுதான்" என்று கூறினார்.
பின்னர் சுப்பிரமணிய பிள்ளை காசிநாதனைப் பார்த்து " நீங்க கவர்மெண்ட் சர்வீஸ்ல இருந்தேங்க போல இருக்கு" என்று கேட்டார். "ஆமாம். தமிழ்நாடு கவர்மெண்ட்ல செக்ரட்ரியா இருந்து ரிட்டயர் ஆயிருக்கிறேன் "என்று கூறினார் காசிநாதன் .பின்பு சுப்ரமணிய பிள்ளை "மேல் கொண்டு கல்யாண விஷயமாக பேசி முடித்து விடலாமா" என்று கேட்டார்.
அதற்குத் திரு "ஆமாம். அதற்கு தானே நாங்கள் வந்திருக்கிறோம்" என்று கூறினார். சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம்" எனக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள்.மூத்தவன் சந்திர சேகர் திருநெல்வேலியில் வேலை பார்க்கிறான். பெண்களில் மூத்தவள் தேன்மொழி சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். மீதி மூவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் வாத்தியாராக தான் இருந்தேன். சொந்த வீடு இருக்கிறது. முடிந்தவரை செட் ஆக இருந்த காரணத்தால் ஓரளவுக்கு எனது பெண்களையும் பையன்களையும் நன்றாக படிக்க வைக்க முடிந்தது. தேன்மொழியை நீங்கள் மருமகளாக ஏற்க போவது பற்றி எங்களுக்கு மிகவும் சந்தோஷம். உங்களுடைய எதிர்பார்ப்பு என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. உங்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தால் அதை எங்களால் நிறைவேற்ற முடியுமா என்றும் தெரியவில்லை" என்று கூறினார். நித்யா ஏதோ பேச வாய் திறக்க, நித்யாவின் கையை தன் கையால் பற்றி அவளைப் பேசாதிருக்குமாறு உணர்த்திய திரு "நாங்கள் எல்லோரும் ஓரளவுக்கு வசதியாகவே இருக்கிறோம். ஆதித்யாவும் நல்ல நிலையில் தான் இருக்கிறான். அதே கம்பெனியில் தான் தேன்மொழியும் வேலை செய்கிறாள் என்று அறிகிறோம். எங்களது எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லை. உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். அதே போல உங்கள் மகளுக்கு உங்களால் என்ன நகைகள் வாங்கிக் கொடுக்க முடியும் அதை நீங்கள் வாங்கி கொடுத்தால் போதும். திருமணம் மட்டும் நன்றாக நடத்தி வைத்து விடுங்கள்" என்று கூறு, இதைக் கேட்ட பரமகல்யாணி நாங்கள் " இது குறித்து நாங்கள் ஏற்கனவே ஒரு முடிவு செய்து இருக்கிறோம். அதை இந்த பேப்பரில் ஒரு லிஸ்ட் மாதிரி எழுதி வைத்திருக்கிறோம். அதை நீங்கள் பார்த்துவிட்டு உங்களுடைய அபிப்பிராயத்தை சொல்லுங்கள்" என்று கூறி அந்த லிஸ்டை காந்திமதியிடம் கொடுத்தாள்.
திரு "கல்யாணத்தை எங்கு வைத்துக் கொள்வதாக உத்தேசம்" என்று கேட்டார். அதற்கு சுப்பிரமணிய பிள்ளை " கல்யாணத்தை சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்று உங்களுக்கு ஒரு அபிப்பிராயம் இருந்தால் அது எங்களுக்கு சிரமமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
அதே சமயத்தில் கடையநல்லூர் போன்ற சிறிய இடங்களிலும் கல்யாணம் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தென்காசி, அம்பாசமுத்திரம்,செங்கோட்டை அல்லது திருநெல்வேலி போன்ற ஊர்களில் ஏதோ ஒன்றில் வைத்துக் கொள்ளலாம் என்றால் அப்படியே செய்து விட முடியும்" என்று கூறினார். இதைக் கேட்ட காசிநாதன் "சென்னையில் திருமணம் இல்லை என்று ஆகிவிட்டால் எங்களை பொறுத்தவரையில் மீதி எல்லா இடமும் ஒன்றுதான். அப்படி என்றால் உங்களுக்கு சௌகரியமான இடத்தை நீங்கள் தீர்மானிக்கலாம்" என்று கூறினார். இதன் பிறகு சுப்பிரமணிய பிள்ளை " மாலை 4 மணிக்கு எனது நண்பர் ஜெகன்னாதையரை இங்கு வரச் சொல்லி இருக்கிறேன். அவர் நன்றாக ஜாதகம் பார்க்கக் கூடியவர். அவரிடம் பேசி திருமணத்திற்கு உண்டான நாளை குறிக்க சொல்லலாம். என்ன சொல்கிறீர்கள்" என்று கேட்டார்.
" சரி, அப்படியே செய்வோம்" என்று சொன்னார் திரு. இதன்பிறகு அனைவரும் ஓய்வு எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
நித்யாவும், காந்திமதியும் வெளித்திண்ணையில் உட்கார்ந்து பரமகல்யாணி கொடுத்த லிஸ்ட்டை பார்த்துக் கொண்டிருந்தார்கள். காந்திமதி மெல்லிய குரலில் நித்யாவிடம் " என்னடி, இந்த லிஸ்ட்ல ஒண்ணும் பெரிசா இல்ல.பொண்ண பையனுக்கு பிடிச்சி போச்சுன்னு தெரிஞ்ச உடனே செய்ய வேண்டியத ரொம்ப குறைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்" என்றாள். இதைக் கேட்ட நித்யா "அம்மா, கொஞ்சம் மெல்ல பேசு. செவுத்துக்கு கூட காது உண்டு என்று சொல்கிறார்கள். நீ சொல்றபடி கூட இருக்கலாம் .ஆனா இனிமே இதுல ஒண்ணும் பெருசா செஞ்சு விட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. நீ ஒரு ஒண்ணு பண்ணு. ரெண்டு பவுன், மூணு பவுன் என்று இந்த லிஸ்ட்டில் போட்ட இடத்திற்கு பதிலாக நால பவுன், ஐந்து போட வேண்டும் என்று கேள். என்ன சொல்கிறார்கள் பார்க்கலாம்" என்றாள். இதைக் கேட்ட காந்திமதி " அதை கூட நீ சொல்ல மாட்டியாக்கும். நான் சொல்லி கெட்ட பேர் வாங்கிக்கணும்னு சொல்ற இல்லையா" என்றாள். இதற்கு நித்யா சிரித்துக் கொண்டே " இப்ப இருக்கறதல நீ தானே பெரியவோ. அதனால் நீ தான் சொல்லணும்" என்றாள். இதன் பிறகு காந்திமதி, பரமகல்யாணியை தனியாக அழைத்துப்போய் நகை லிஸ்டில் சில மாற்றங்களை சொன்னாள். இதைக் கேட்ட பரம கல்யாணி " நான் தேன்மொழி அப்பாகிட்ட கேட்டுட்டு உங்களுக்கு முடிவை சொல்றேன்" என்று கூறினாள். அதற்கு அடுத்து அரைமணியில் பரமகல்யாணி காந்திமதியிடம் " உங்களுக்கு அவசியம் அப்படித்தான் செய்ய வேண்டும் என்று இஷ்டப்பட்டால் அதே மாதிரி செய்துவிடலாம் என்று அவர் சொல்லிவிட்டார்" என்று கூறினாள்.
No comments:
Post a Comment