வசந்த காலம் வருமோ?- 101
By N Krishnamurthy
ஏற்கனவே ராஜேஸ்வரி ஒரு டிராவல் ஏஜென்ட் துணை கொண்டு, மே மாதம் 25 ஆம் தேதி காலை 6:30 மணிக்கு கிளம்பும் கோயம்புத்தூர் டே எக்ஸ்பிரஸ் ஏசி சேர் காரில் 48 டிக்கெட்டுகளை புக் பண்ணி இருந்தாள். அவள் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் ஒரே கோச்சில் இடம் கிடைத்தது.
மே 25 அன்று காலை ஆறு மணிக்குள் எல்லோரும் சென்ட்ரலை அடைந்தார்கள். அவரவருடைய சீட் நம்பர் ஏற்கனவே ராஜேஸ்வரி குறித்துக் கொடுத்திருந்ததால் அவரவர் சீட்டில் அவரவர் அமர்ந்தனர்.
கம்பார்ட்மெண்ட் மையத்தில் ஒரு டேபிள் போட்டு இருக்கும். அதற்கு எதிரும் புதிரும் மூன்று சீட்டுகளில் இருக்கும். ஒரு புறம் உள்ள மூன்று சீட்டுக்களில் பத்மநாபன், ரகு, சாரங்கன் அமர்ந்து கொண்டிருந்தார்கள். எதிர்புறம் இருந்த மூன்று சீட்டுக்களில், இரண்டில் ராஜேஸ்வரி, மார்க்கபந்து அமர்ந்து கொண்டிருக்க அருகில் இருந்த மூன்றாவது சீட்டில், சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெரியவர் அமர்ந்திருந்தார். வண்டி சரியாக 6:35 க்கு சென்னையை விட்டு கிளம்பியது . வண்டி சிறிது தூரம் சென்றவுடன் பத்மநாபனுக்கு எதிர்புறம் இருந்தவரை எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது. ஆனால் அவர் யார் என்று சரியாக நினைவுக்கு வரவில்லை. அவர் கருப்பு வெள்ளை, தாடி வைத்திருந்தார். தலையில் சிறிய குடுமி. தீக்ஷண்யம் மிக்க கண்கள்.பத்மநாபன் அவரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.
" நமஸ்காரம். நீங்க எது வரைக்கும் போறேள்" என்றார் பத்மநாபன். அதற்கு அவர் " நமஸ்காரம். நான் கோயம்புத்தூர் வரைக்கும் போயிட்டு அங்கே இருந்து ஒரு கல்யாணத்துக்கு குருவாயூர் போறேன்" என்று கூறினார் .
" ரொம்ப சந்தோஷம்."கல்யாணம் என்னிக்கி" என்று பத்மநாபன் கேட்க, " நாளனிக்கி ,அதாவது மே 27ஆம் தேதி" என்றார் அவர். இதைக் கேட்ட பத்மநாபன். " ஒருவேளை அன்று வேறொரு முகூர்த்தமும் குருவாயூரில் இருக்கிறது போல" என்று நினைத்துக் கொண்டு " நீங்க கல்யாண பையனுக்கு ஒறவா இல்ல, பொண்ணுக்கு ஒறவா" என்று கேட்டார். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே " இல்லை. நான் யாருக்கும் ஒறவு இல்லை. ஆனால் பையனாத்துக்கு வேண்டியவன்" என்று கூறினார். பிறகு கேட்டுத் தான் பார்க்கலாமே என்று "கல்யாண பையன் பேர் என்னவோ" என்று கேட்டார். அந்த பெரியவர் மீண்டும் சிரித்துக்கொண்டே "மாப்பிள்ளை பேர் சங்கர க்ருஷ்ணன். பெண் பேர் ம்ருதுளா" என்று கூறினார். இதை கேட்டதும் பத்மநாபன் ஆச்சரியத்தின் உச்சிக்கே போய்விட்டார். " அது எங்காத்து கல்யாணம் ஆச்சே" என்று சொன்னார் பத்மநாபன்.
அதற்கு அவர் "நான் இல்லைன்னு சொன்னேனா" என்றார். பத்மநாபனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்குள் ராஜேஸ்வரி" இனிமே சஸ்பென்ஸ் தாங்காதுன்னு நெனைக்கிறேன் "என்று கூறிவிட்டு பத்மநாபனிடம் " சார் ஒரு பௌராணிகர். பேர் சிதம்பரம். கும்பகோணத்துக்கு பக்கத்ல இருக்கற ராஜ ராஜபுரம்ன்ற கிராமத்ல வாசம். இவர் நேக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை.
இவர் ஒரு சிவில் என்ஜினீயர். கிண்டி என்ஜினியரிங் காலேஜ்ல படச்சவர். முதல் முதலா இவரோட க்ளோஸ் ப்ரண்டும், கிளாஸ் மேட்டுமான ஜெகதீசன் சாரையும், அவர் ஒய்ப் சீதாவையும், நாங்க பர்மிங்ஹாம்ல ஒரு விசேஷத்ல பாத்து ப்ரண்ட் ஆனோம். அப்புறம் ஜெகதீசன் சார் குடும்பத்துடன் ராஜ ராஜபுரத்தில் செட்டில் ஆய்ட்டார்.
நாங்க ஒரு முறை இந்தியா வந்தபோது ஜெகதீசன் சார் அழைப்பின் பேரில் ராஜராஜபுரம் போய் ரெண்டு நாள் தங்கி இருந்தோம். அப்போதுதான் சிதம்பரம் சார் மற்றும் அவர் மனைவி சாரதாவின் அறிமுகம் கிடைத்தது. இரண்டு குடும்பமும் மிக அருமையான குடும்பம். இந்தியாவிற்கே திரும்பி வந்து செட்டிலானால் கூட, ராஜ ராஜபுரத்தில் செட்டில் ஆகிவிடுவோம் என்ற நினைப்பில் அங்கு இரண்டு கிரவுண்டுகள் கூட வாங்கி இருந்தோம். அப்போதெல்லாம் சிதம்பரம் சார், நொடிக்கு நொடி ஜோக் அடிப்பவர் என்று தான் எங்களுக்கு தெரியும். பின்னர் அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றிக் கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டோம். ஒரு முறை அமெரிக்காவில் 10 நாட்கள் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு ஆற்ற அவரை நான் கூப்பிட்டு இருந்தேன். அவரும் அப்பொழுது வந்திருந்தார்"என்று கூற,சிதம்பரம் அவளைத்தொடர்ந்து"நான் அமெரிக்காவுக்கு பிரசங்கம் பண்ண போயிருந்த போது, இந்த ராஜேஸ்வரி மாமி பண்ண உபகாரம் இருக்கே அது கொஞ்சம் நெஞ்சம் அல்ல. நான் இருந்த பத்து நாளும் எனக்கு சொர்க்க போகம் தான். இவாத்ல தங்க வசதியான இடமும், அருமையான சாப்பாடும் நேக்கு கிடச்சுது. இந்தியாவுக்கு வந்ததுக்கப்புறம் இந்த மாமி, தன் பையன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க எங்காத்துக்கு வந்தா. அப்ப நான் மாமி கிட்ட " கல்யாணத்துக்கு ஏதாவது பாட்டு கச்சேரி வைக்கறேங்காளா"ன்னுகேட்டேன். அதுக்கு இந்த மாமி " வேற கல்யாணமாம்னா என் மாட்டு பொண்ணயே பாட சொல்லி இருப்பேன். அவளே கல்யாண பொண்ணா இருக்கறதால அது எப்படி சாத்தியம்?" என்று கூறினள். இந்த மாமி நேக்கு பண்ணதுக்கு நான் பிரதியுபகாரமா ஏதாவது செய்யணும்னு தோணித்து. நான் உடனே அந்த மாமி கிட்ட நீங்க சரின்னு சொன்னா நான் உங்க கூட வந்து கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி ஞானந்தரை பத்தி ஒரு மூணு மணி நேரம் பிரசங்கம் பண்றேன்னு சொன்னேன் . மாமி இத கேட்டூட்டு ரொம்ப சந்தோஷப்பட்டா. எனக்கு சேர்த்து டிக்கெட் போட்டுட்டா. இது ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லியிருந்தா. அதனால்தான் முதல்ல இதை நான் உங்களுக்கு தெரிவிக்கவிலை" என்றார்.
இதை கேட்டதும் பத்மநாபன் சிதம்பரத்திடம்"நீங்க யாருன்னு கேக்காம இருந்தூட்டேன். என்ன மன்னிச்சுக்கோங்க" என்றார். அதற்கு சிதம்பரம் " எம்மேலயும் தவறு இருக்கு.நானே உங்ககிட்ட நான் முதல்லே யாருன்னு சொல்லி இருக்கணும். ராஜேஸ்வரி மாமி தான் சஸ்பென்ஸா இருக்கட்டும். அப்புறம் சொல்லிக்கலாமே என்று சொன்னாள். அதுவும் ஒரு விதத்ல இன்ட்ரஸ்டிங்கா போச்சு" என்று கூறி சிரித்தார். பின்னர் பத்மநாபன் " உங்க ப்ரண்ட் ஜெகதீசன் பேமலியும்,உங்க ஒய்ப் சாரதா மாமியும் இந்த கல்யாணத்துக்கு வரலயோ"என்று வினவ அதற்கு சிதம்பரம் "அதை தேதில ஜெகதீசன் பையன் ஆதித்யா தஞ்சாவூர்ல தன்னோட ரெண்டாவது ஹார்ட் கிளிக்கை ஒபன் பண்றான்.
அதனால ஜெகதீசனும்,சீதாவும் வர முடியல. சாரதாவுக்கு இப்போதான் ரெண்டாவது கண் கேடராக்ட் ஆபரேஷன் முடிஞ்சுது. அவ எங்க பேமலி ப்ரண்ட், ஐ டாக்டர் சுகவனம் க்ளினிக்ல இருந்திண்டிருக்கா"என்றவர் "சாரதாவ மறந்தூட்டு நிம்மதியா இருக்கலாம்னு பாத்தா உட மாட்டேள் போல இருக்கே "என்று சொல்லி சிரித்தார். ராஜேஸ்வரி உடனேயே" பாத்தேளா. ஜோக் சொல்றது இவர் பிறவி சுபாவம். இவரும்,சாரதவும் அப்படி ஒரு அன்யோன்னம்.வெளில எலியும்,பூனை மாறி சண்டை போட்டுப்பா. உள்ளுக்குள்ள அப்படிஒரு வாத்சல்யம் " என்றாள் ராஜேஸ்வரி. சிதம்பரம் "எலியும்,பூனையும் மாறி சண்டை போட்டுப்பமே தவிர பூன மாதிரி நான் பிறாண்ட மாட்டேன் "என்றதும் எல்லோரும் சிரித்தனர்.
இதற்குள் மெல்ல எல்லோருக்கும் இந்த விஷயம் சென்றடைந்தது .ஒருவர்பின் ஒருவராக வந்து சிதம்பரத்திடம் பேச ஆரம்பித்தார்கள். வண்டி காட்பாடியை தாண்டியதும், ஸ்ரீவத்சனும், ரகுவும் அலுமினியம் பாயலில் பேக் செய்யப்பட்டிருந்த இட்லி பாக்கட்டை எல்லோருக்கும் வினியோகித்தார்கள். ஒவ்வொரு பாக்கெட்டிலும் நான்கு இட்லியும், கொத்தமல்லி சட்னியும் அடைக்கப்பட்டிருந்தது. பின்னர் ட்ரெயினில் வந்த காபியை வேண்டியவர்கள் குடிக்க ஆரம்பித்தார்கள்.
No comments:
Post a Comment