Saturday, February 10, 2024

முற்பகல் செயின்..33

 முற்பகல் செயின்..33

By N Krishnamurthy 

அனைவரும் இயற்கை காட்சிகளை பார்வையிட்டுக்கொண்டே, குற்றால நாதர் கோவிலை அடைந்தனர்.

சுப்ரமணிய பிள்ளை "இந்த குற்றாலநாதர் உருவான கதை சுவாரஸ்யமாக  இருக்கும். திருப்பதியில் ஆதியில் இருந்த முருகன் கோவிலை பெருமாள் கோவிலாக மாற்றி விட்டார்கள் என சிலர் சொல்கிறார்கள். இது எந்த அளவு உண்மை என தெரியாது. ஆனால் அகத்தியர் இங்கிருந்த பெருமாளை ஈசனாக மாற்றி உள்ளார். அகத்தியர் இறைவன் கட்டளைப்படி தென்னாடு வருகிறார். வடமொழியில் மிக தேர்ந்தவர் ஆன அவர் தமிழ் மொழியின் பால் பற்று உள்ளவர். அம்மொழியைச் சிறப்பித்தவர். இவர் வரும் போது இக்குற்றால மலையில் மஹாவிஷ்ணுவே கோயில் கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். இறைவனின் கட்டளைப்படி வடக்கே இருந்து தெற்கே வந்த அகத்தியர் கோயிலில் தரிசனம் செய்யப் போக, சிவனடியாரான அவரை கோயிலின் உள்ளே விட அர்ச்சகர் மறுக்கிறார். மனவருத்தத்தோடு நடந்த அகத்தியர் அங்கிருந்து பக்கத்தில் உள்ள இலஞ்சியை அடைகிறார். அங்கே தமிழ்க்கடவுளாம் முருகனின் தாள் பணிகிறார். முருகன் விளையாட்டுப் பிள்ளை.அர்ச்சகர்களை ஏமாற்றி விட்டு உள்ளே போகுமாறு அகத்தியருக்கு அறிவுரை கூறி மறைய, அகத்தியரும் துவாதச நாமம் தரித்து பரம வைஷ்ணவராய் மாறி வருகிறார். அவருக்கு அனுமதி கிடைக்கிறது. உள்ளே சென்ற அகத்தியர் தாமே தனியாகப் பூஜை செய்ய வேண்டும்என்று வேண்டிக் கொண்டு கருவறைக்கதவைச் சார்த்திக் கொண்டு, "நின்ற சீர் நெடுமாலாய்க்" காட்சி அளித்த திருமாலைக் கையால் தலையில் அழுத்திக் "குறுகிக் குறுகுக" என்று கைலாச நாதனை வேண்டி நினைக்க குறுகிப் போன திருமால் சிவலிங்க வடிவில் குற்றால நாதன் ஆகிறார்.

இப்படி மாறிய இறைவனைக் குறித்து அகத்தியரே பாடியது:

"முத்தனே முளரிக் கண்ணா!
மூலம் என்று அழைத்த வேழப்பத்தியின் எல்லை காக்கும்பகவனே!
திகிரியாளா!சுத்தனே! அருள் சூல் கொண்டசுந்தரக் கதுப்பினானே!
நத்தணி செவிய கோலநாடுதற்கரிய நம்பி!" 
என்று இருவருக்கும் பொருத்தமாகப் பாடித் துதிக்கிறார்"என்று முடித்தார்.

குற்றால நாதரை தரிசித்த பின்னர் குற்றால நாதரின் வலப்பக்கத்தில் கோயில் கொண்டிருக்கும் "குழல்வாய் மொழி அம்மை"யை தரிசித்தார்காள். 

சுப்ரமணிய பிள்ளை மேலும் கூறுகையில்.  " தலவிருட்சமான குறும்பலா நான்கு வேதங்களும் தவம் செய்து பலா மரரூபமாய் அங்கே இருப்பாதாய் ஐதீகம். இம்மரத்துப் பழத்தை வானரங்கள் தவிர வேறு யாரும் பறித்து உண்ணுவது இல்லை. இறைவன் "குற்றாலம், சமருகம்" என்ற பெயருடைய மர நிழலிலே குடிகொண்டதால் குற்றாலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் சொல்கிறார்கள். மலை அதிக உயரம் இல்லை. 3,000 அடியில்இருந்து 5,000 அடிக்குள் தான் இருக்கும்.

மூன்று சிகரங்கள் உள்ளதால் "திரிகூடம்"என்ற பெயரும் உண்டு.

மலைக்காடுகளுக்குச் செண்பகக்காடு எனப்பெயர் உண்டு. நிறைய மூலிகைகள் அடங்கிய மலை என்றும் சொல்கிறார்கள். இம்மலையின் உச்சியில் இருந்து குதித்துவருவது தான் சிற்றாறு. மிக்க உயரத்தில் தேனருவி இருக்கிறதாய்ச் சொல்கிறார்கள்.அதற்கு அடுத்து செண்பக தேவி அருவி. இங்கே செல்லவும் காடுகளின் வழியாய்த்தான் போக வேண்டி இருக்கிறது. குற்றாலத்தில் சாரல் காலம் மக்கள் கூட்டம் கூடுவதால் அப்போது போய் வருவது சற்றுப் பாதுகாப்பு என்று கூறுகிறார்கள்" என்று சொல்லி முடித்தார்.

கோயிலில் இருந்து சற்றுத் தூரத்தில் மேலே கொஞ்சம் ஏறிப்போக  பிரசித்தி பெற்ற "சித்திர சபை" கண்ணில் பட்டது. கோயிலின் வடக்கே உள்ள இந்தச் சித்திர சபை அழியும்நிலையில் இருந்தது. இந்தக் கோயிலின் எதிரே உள்ள குளமும் சரி, அதன் நடுவில் உள்ள வசந்த மண்டபமும் சரி பாழடைந்த நிலையில் உள்ளது. முழுதும் சித்திரங்களால் நிறைந்த இந்தக் கோயிலில் "நடராஜர்" சித்திர உருவில் காட்சி அளிதத்தார். மூலிகைகளைக் குழைத்துத் தீட்டிய வண்ணங்கள் பராமரிப்பு இல்லாமல் இருந்ததை பார்த்து எல்லோரும் வருத்தப்பட்டார்கள்.

No comments:

Post a Comment