முற்பகல் செயின்..30
By N Krishnamurthy
இரவு உணவிற்கு மல்லிகை பூ இட்டிலியும், தேங்காய் சட்னியும் தாயாரித்திருந்தார்கள்.
இட்டிலியை சாப்பிட்ட ஆதித்யா இட்லியின் சுவை மிக நன்றாக இருப்பதாக கூறி இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று கேட்டான். அதற்கு சுப்ரமணிய பிள்ளை "முக்கிய காரணம் நம்ம பயன்படுத்தும் தண்ணீர். இங்க தாமிரபரணியிலிருந்து தண்ணீர் வருகிறது. இதே போல கோயம்புத்தூரில் சிறுவாணி தண்ணீர் செய்யப்படும் சமையல் வகைகள் மிகவும் பிரபலமாக இருக்கும் என்கிறார்கள்" என்றார்
இரவு சாப்பாட்டுக்கடை முடிந்ததும் வாசலில் இரண்டு கயிற்று கட்டில்களை போட்டு அதில் எல்லோரும் அமர்ந்து கொண்டார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் குளிர் காற்று அவர்களை வருடிக் கொடுத்தது. *ஏகாந்தம்* என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை அப்போதுதான் புரிந்து கொண்டான் ஆதித்யா. ஜிலுஜிலுவென அடித்த காற்றிற்கு எந்த ஏசியும் இணை ஆகாது என்று அவனுக்கு புரிந்தது. சிறிது நேரம் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். "நாளைக்கு என்ன ப்ரோக்ராம்" என்று கேட்டார் நமச்சிவாயம். உடனே சந்திரசேகரன் "நாளைக்கு குற்றாலம் போயிட்டு வந்து விடலாமா" என்று கேட்க அதற்கு சுப்ரமணிய பிள்ளை "என்னப்பா, இப்படி திடீர் திடுதிப்புன்னு சொல்ற.இம்புட்டு பேரும் எப்படி போறது" என்று கேட்டார் . அப்போது சந்திரசேகர் " என் பிரண்டு வள்ளிநாயகம் ஒரு டிராவல்ஸ் நடத்தி கொண்டிருக்கான். அவன்கிட்ட ஒரு 12 சீட்டர் வேன் இருக்கு. காலைல கிளம்பி குத்தாலம் போயிட்டு,சுத்திபாத்தூட்டு ராவைக்கு திரும்பி விடலாம்" என்று கூறினான். இதுவரை குற்றாலத்தை போட்டோவிலும், வீடியோவிலும் மட்டும் பார்த்திருந்த ஆதித்யா "நாளைக்கு அவசியம் குற்றாலம் போய்ட்டு வரலாம்" என்று கூறினான். சுப்ரமணிய பிள்ளை சந்திரசேகரனிடம் " உன் பிரண்டு கிட்ட சொல்லி நாளைக்கு வண்டி கிடைக்குமான்னு பார்க்க வேண்டாமா?" என்று கேட்டார." நான் மத்தியானமே அவன் கிட்ட, தேவைப்பட்டால் டிரைவரரோட வேண்டி வேணும்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கேன் பா.அவனும் சரின்னு சொல்லி இருக்கான்" என்று கூறினான்.
சுப்ரமணிய பிள்ளை பரமகல்யாணியிடம் " உனக்குதான் வேல கூடுது. கால பலகாரத்துக்கும், மதியம் கைக்கும் உணவு தயார் பண்ணணும்"என்றார்.
"அதுக்கென்னங்க.பண்ணிணா போச்சு"என்றாள் அவள்.
இது தான் பெண்களுக்குரிய, போற்றுதற்குரிய குணம். இது போல வெளியில் போவதாக இருந்தாலோ அல்லது யாரேனும் நண்பர்கள் வந்தாலோ ஆண்கள் வீட்டு நிலையை அறியாமலும், பெண்களுக்கு கஷ்டம் கொடுக்கிறோமே என்று எண்ணாமலும் இப்படித்தான்,உணவு தயாரிக்க சொல்லிவிடுவார்கள்.
தீடிரென்று நினைத்துக்கொண்டு சொன்னால் என்ன செய்வது என்று எண்ணாமல், எல்லா சந்தர்பங்களிலும் ஈடு கொடுத்து தாங்கும் தூண்கள்தான் பெண்கள். அதனால்தான் மனைவியை Better half என்று சொல்கிறார்களோ?
வாசலில் ஒரு கயிற்று கட்டிலில் சந்திரசேகரன், அவனுடைய தம்பி அருள்மொழியும், மற்றொரு கட்டிலில் ஆதித்யாவும் படுத்தார்கள். படுத்த ஐந்தே நிமிடத்தில் ஆதித்யாவை நித்திராதேவி ஆட்கொண்டாள்.
அடித்து துவைத்த காற்றால் ஆதித்யாவிற்கு அப்படி ஒரு சுகமான தூக்கமும், தூக்கத்தில் கனவும் வந்தது.
குற்றாலத்தில் அருவி ஒரம் , முழு நிலவு பட்டொளி வீச அவன் அமர்ந்திருக்கிறான்.
அருகில் தேன்மொழி தேவதையென அமர்ந்திருக்கிறாள்.
தீடிரென்று அவனை ஒரு நான்கு வயது பையனும், இரண்டரை வயது பெண்ணும் கட்டிக்கொண்டு "அப்பா" என்றழைக்கிறார்கள்.
கனவுதான் எவ்வவு விசித்திரமானது. சில கணங்களிலேயே திருமணம் முடிந்து, குழந்தைகளும் பிறந்து ,அவர்கள் வளர்ந்தும் விடுகிறார்கள்.
கனவிலும், சினிமாவிலும்தான் இது சாத்தியம்.
No comments:
Post a Comment