Tuesday, February 27, 2024

நவ பிருந்தாவனம் பாகம் 1

நவ பிருந்தாவனம் 1

By Ramesh 

 நினைப்பது நடக்கும்

கர்நாடக மாநிலம், ஆனேகுந்திக்கு அருகில் உள்ள துங்க பத்ரா நதிக்கரையில், ‘நவபிருந்தாவனம்’ என்று போற்றப் படும் ஒன்பது மாத்வ ஆச்சார்யர்களின் ஜீவசமாதி ( .              9 மாத்வ சன்யாசிகள் உயிருடன் சமாதி ஆன தெய்வீக சக்தி உள்ள இடம் ) அமைந்துள்ளது. 

இங்கே பிரார்த்தனை செய்பவர்களுக்கு தான் நினைத்தது நடக்கிறது !!!

துங்கபத்ரா நதியின் மத்தியில் அமைந்துள்ள எழில் மிகு குட்டித் தீவு இது. மகத்தான சித்திகளையும், மந்திர சக்தி களையும் பெற்ற ஒன்பது மத்வ சித்தாந்த புருஷர்கள், தங்கள் ஆயுட்காலம் முடிந்த பின்பும் மக்களுக்கு அருள்செய விரும்பி, சூட்சும உடலில் தங்கி, இந்த பிருந்தாவனத்தில் இன்றும் அருள் புரிகிறார்கள்.

இந்த நவபிருந்தா வனத்தில், ஸ்ரீபத்ம நாப தீர்த்தர், ஸ்ரீகவீந்திர தீர்த்தர், ஸ்ரீவாகீச தீர்த்தர், ஸ்ரீவியாஸராஜ தீர்த்தர், ஸ்ரீரகுவர்ய தீர்த்தர், ஸ்ரீஸ்ரீ னிவாச தீர்த்தர், ஸ்ரீராம தீர்த்தர், ஸ்ரீசுதீந்திர தீர்த்தர், ஸ்ரீகோவிந்த உடையரு என ஒன்பது மகான்கள் அருள்புரிகின்றனர். 

இந்த ஒன்பது ஜீவ பிருந்தாவனங்கள் தவிர, அழகிய ஸ்ரீஆஞ்சனேயரின் சன்னிதி ஒன்றும் இங்கு உள்ளது. *இந்த ராமபக்த அனுமன் மிகவும் சக்தி வாந்தவர்.

 ஸ்ரீஆஞ்சனேயரின் சன்னிதிக்கு எதிரில் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபடு கின்றனர். இந்த ஆஞ்ச னேயரை சன்னிதியில் குனிந்து சென்று தான் வணங்க வேண்டும். 

மிகவும் விசாலமான திருக்கண்களோடு, வாயில் செந்தூரம் துலங்க, சேவை சாதிக்கிறார். *இவர் மிகவும் வரப்ரசாதி என்று பக்தர்கள் கூறுகின்றனர்.* *வழிபட்ட குறுகிய காலத்திலேயே, தீராத வியாதி களைத் தீர்த்தும், நடக்காத காரியங்களை நடத்திக் காட்டியும் அருள்புரிவதில் வல்லவர்.

 அதற்குத் தேவை உண்மையான பக்தி, தூமையான பணிவு, அன்பு கனிந்த மனம் மட்டுமே.

 நவபிருந்தாவன தரிசனம் செய்ய, நவ கிரக தோஷங்கள் நீங்குகின்றன.

பிராரப்த கர்மாக்களின் தீய பலன்கள் நீங்கி நமது கோரிக் கைகள், விருப்பங்கள் நிறைவேறுகின்றன.

 துளசி செடிகள் வளர்ந்துள்ள இந்த பிருந்தாவனத்துள் உறையும் மகான்கள், அபரிமித சக்தியுடன் சூட்சும உருவில் அருள்பாலிப்பதால், பிருந்தா வனங்களைக் கைகளால் தொடாமல் தரிசனம் செய்ய வேண்டும்.

மேலும், நம்மால் முடிந்த பிரதட்சிண நமஸ்காரம் செய்யலாம். நவ பிருந்தாவனத்தை நேரில் தரிசனம் செய்யும் வாப்பு கிடைப்பவர்கள்,👇

பத்மநாபம் ஜெயமுனீம் கவீந்த்ரம் ச வாகீசம் வ்யாஸ ராஜம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் ததைவ ச  ஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம் நவ பிருந்தாவனம் பஜே!’......

 எனும் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட, மிகுந்த பலன் கிடைக்கும்.

நேரில் தரிசிக்க முடியாதவர்கள் நவபிருந்தாவனம் படத்தை வணங்கி, மேற்கண்ட ஸ்லோகத்தைக் கூறி வந்தாலும் பலன் கிடைக்கும்.

ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் ம்ருத்திகா பிருந்தா வனமும் இங்கு அருகிலேயே அமைந்துள்ளது.

 செல்லும் வழி:

பெல்லாரி மாவட்டம், ஹாஸ்பெட் என்ற ஊரிலிருந்து, ஹம்பி வழியாக 12 கி.மீ. தொலைவில் உள்ளது ஆனே குந்தி. இங்கிருந்து படகு மூலம் நவ பிருந்தாவனம் செல்லலாம்.

No comments:

Post a Comment