முற்பகல் செயின்..34
By N Krishnamurthy
பகல் மணி கிட்டத்தட்ட ஒன்றரை ஆனது. வீட்டிலிருந்து கொண்டவரப்பட்ட புளி சாதம்,நேந்திரம் சிப்ஸ் மற்றும் தயிர்சாதத்தை வயிராற உண்டனர்.
அங்கிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரமுள்ள இலஞ்சி குமரன் கோவிலுக்கு சென்றார்கள்.
இலஞ்சியின் விசேஷம் என்னவென்று நமச்சிவாயம் சுப்ரமணிய பிள்ளையிடம் கேட்க அவர்" இலஞ்சி என்ற சொல் ஏரி, குளம், மடு, பொய்கை மதில் மகிழமரம் எனப்பல பொருள்படும்.இலக்கியங்களில் கவிகள் எத்தனையோ இடங்களில் இச்சொல்லை கையாண்டிருக்கிறார்கள்.மேலும், முருகப்பெருமான் ரிஷிகளின் வேண்டுகோளின் படி வரத்தை இன்றும் கொடுத்தருள்கிறார்.
இத்தலத்து திருவிலஞ்சிக்குமாரர் வரதராஜப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.மாமன்பெயரை தனக்கிட்டுக்கொண்டுள்ளார்.
திருக்குற்றாலத்தின் ஈசான திசையில் அமைந்துள்ள இலஞ்சியில் குடிகொண்டுள்ள குமரனிடம் கபிலர்,துர்வாசர்,காசிபர்,ஆகியோர் “உண்மையான பரம்பொருள் யார்?” என்று கேட்க “நானே பரம்பொருள்” என்று சொல்லித் தனக்குத் தானே வரதராஜப்பெருமான் எனும் பெயர் சூட்டிக் கொண்டார். வரதன் என்றால் வரம் தரும் வள்ளல். வேண்டுவோர்க்கு வேண்டியது கொடுக்கும் வள்ளலாக இத்தலத்துக் குமரன் உள்ளார்.முருகப்பெருமான் கருவில் உதித்த அவதாரம் கிடையாது. சிவனுடைய அங்க அவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
அருணாகிரிநாதரின் கந்தரனுபூதியில் வரும் ‘கருதாமறவா” எனத் தொடங்கும் பாடலின் கடைசி வரியில் ‘வரதா முருகா மயில் வாகனனே” என்று பாடுகிறார். ஆகையினால் முருகனுக்கும் வரதராஜப் பெருமான் என்னும் பெயர்பொருந்தும்.
அருணகிரிநாதர், ‘இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமாளே’ என்றும் இந்த முருகனை பாடியுள்ளார். வள்ளி-தெய்வானை சமேதராக முருகப் பெருமான் தனிச் சந்நதியில் அருள்கிறார்.
இங்கு மகிழ மரம் தல விருக்ஷம். மகிழம் என்பதை வகுளம் எனவும் சொல்வார்கள்.
இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாவும் உள்ளது.
"பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே ஓட்டுந் திரைவாய் ஒற்றியூரே"என சுந்தரர் பாடி உள்ளார்.
திருவொற்றியூரிலும் மகிழ மரம் தான் தல விருக்ஷம்.
அதோடில்லாமல்திருவண்ணாமலை, திரு இராமனதீச்சரம், திருநீடூர், திருப்புனவாயில் ,திருக்காளத்தி முதலிய சிவத் தலங்களில் மகிழமரம் தல விருக்ஷமாக உள்ளது"என்று கூறினார்.
வள்ளி தெய்வயானையோடு கூடிய முருகனை இலஞ்சியில் வழிபட்டனர். தேன்மொழி கண்மூடி மனதுக்குள்"முருகா. என்னை சுற்றியுளவர்கள் எல்லா நலமும் பெற வேண்டும். அடுத்த முறை நான் வந்து சேவிக்கும்போது ஆதித்யாவின் மனைவியாக வர வேண்டும்" என வேண்டினாள்.
ஆதித்யாவோ" தேன்மொழியை என்பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்"என வேண்டிக்கொண்டான்.
No comments:
Post a Comment