Tuesday, February 13, 2024

தவலை வடை

 தவலை வடை சாப்பிடணம் என்றால் விருத்தாச்சலம் தான் (இது  ரயில்வே ஸ்ட்டேஷனில் கூட கிடைக்கும் 👆👇

நீங்கள் வீட்டில் தண்ணி எடுத்து வரும் குடத்தை அந்த காலத்தில் தவலை என்பார்கள். 

அந்த காலத்தில் செப்பு தவலைகளை அதிகம் பயன் படுத்தினர், இதில் கவனிக்க வேண்டியது தவலை என்ற சொல்லை.... 

பானை . எண்ணை கொண்டு பொறித்து சாபிடுவது என்பது ஆரோக்கியமற்றது என்பதாலும், எண்ணை வாங்குவது எல்லோருக்கும் முடியவில்லை என்பதாலும் இந்த வடை என்பதை அவர்கள் செய்ய கையாண்ட விதம் வித்யாசமானது ! 

அந்த காலத்தில் இருந்த அடுப்பில் நெருப்பை மூட்டி, அதன் மேலே இந்த தவலையை கவிழ்த்து போடுவார்கள். 

பின்னர் இந்த மசால் வடை போன்ற மாவை தட்டி தட்டி, கவிழ்ந்து இருக்கும் அந்த தவலையின் மீது போடுவார்கள். செம்பு குறுகிய நேரத்தில் வெப்பத்தை கடத்தும் என்பதால், வடை வெகு விரைவாக வேகும். 

வெளியே மொறு மொறுப்பாகவும், உள்ளே மெது வாகவும் இருக்கும் இதற்கு ரசிகர்கள் அதிகம். 

அன்றைய அந்த சுவையில், சிறிது மாறி கிடைக்கிறது இந்த விருதாச் சலத்தின் தவலை அடை. 

இங்கு புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் முன், சிறிது தூரத்தில் இருக்கிறது இந்த ருசி உணவகம். 

உள்ளே நுழையும் போதே இந்த தவலை வடை வைத்திருப்பதை பார்க்கலாம், இதன் மூலம் எத்தனை பேருக்கு இது பிடிக்கும் என்று தெரிகிறது.

கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று எல்லா பருப்புக்களும் கலந்து, அதை மாவை விட கொஞ்சம் குறைவாக அரைத்து, அதை எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கும்போது கிடைக்கும் இந்த தவலை வடை காண்பதற்கே ருசிக்கிறது. 

ஒரு இடத்தில் மஞ்சளாக கடலை பருப்பு, இன்னொரு இடத்தில வெள்ளையாக உளுந்தம் பருப்பு, உள்ளும் வெளி யுமாக துவரம் பருப்பு, கரு வேப்பிலை என்று உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது. 

ஒரு கடி கடிக்கும் போதே வெளியே இருக்கும் மொரு மொருப்பும், உள்ளே இருக்கும் மெதுவும் என்று அந்த விருத கிரீஷ்வரரை பார்க்காமலேயே சொர்க்கத்தில் மிதக்கிறோம். 

இதுவரை மசால் வடையை மட்டும் காட்டி ஏமாத்தி டீங்க என்று மனதிற்குள் நினைக்கையில், பருப்பு விற்கிற விலைக்கு தவலை  வடையா என்று தலையில் நாமே தட்டி கொள்ள வேடியதாகி இருக்கிறது. 

ஒரு கர கர மொறு மொறு சுவைக்கு இந்த தவலை வடையே சரி !!

அடுத்த முறை விருத்தாசலம் செல்லும்போது இந்த தவலை வடையை சாப்பிட்டு பாருங்கள், உங்களுக்கே வித்யாசம் தெரியும். உளுந்த வடை யையும், கடலை வடையையும் சேர்ந்து செய்த கலவையாய் உங்களுக்கு சுவையூட்டும்.

சரி இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா ????

 தவலை வடை

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 கப்
பயத்தம் பருப்பு - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
அரிசி - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 
4 அல்லது 5
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் (பல்லு பல்லாக வெட்டியது) - 1/2 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கொத்துமல்லித் தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

 செய்முறை

அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும். 

பின்னர் நன்றாகக் அலம்பி, தண்ணீரை ஒட்ட வடிகட்டி விட்டு, முதலில் அரிசி யையும், உளுத்தம் பருப்பையும் ஒன்றாகப் போட்டு, அத்துடன் மிளகாயையும் சேர்த்து அரைக்கவும். 

மாவு பாதி மசிந்ததும், கடலைப் பருப்பையும்,  துவரம் பருப்பையும் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். கடைசியில் பயத்தம் பருப்பைப் போட்டு, எல்லாவற்றையும் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

அரைத்த மாவில், இஞ்சி, கொத்து மல்லி, கறி வேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போடவும். 

தேங்காய்த் துண்டுகள், பெருங்காய்த்தூள், உப்பு ஆகிய வற்றையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு சிறு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் அதை மாவில் சேர்த்துக் கலக்கவும்.

வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து வடை போல் தட்டி, எண்ணையில் போட்டு, பொன்னிற மாகப் பொரித் தெடுக்கவும்.

 *குறிப்பு* : அவரவர் தேவைக்கேற்றாற் போல் மிளகாயைக் ஒன்றிரண்டு கூட்டியோ, குறைத்தோ உபயோகிக்கவும். 

அரை கப் ஜவ்வரிசியை ஊற வைத்தும் மாவில் கலந்து வடை செய்யலாம். சுவையாக இருக்கும்.

 மேற்கூறியுள்ள அளவிற்கு, சுமார் 25 வடைகள் கிடைக்கும்.👆👆

No comments:

Post a Comment