Monday, February 5, 2024

முற்பகல் செயின்.. 28

 முற்பகல் செயின்.. 28

By N Krishnamurthy 

எல்லோருக்கும் தரையில் வாழை இலை போடப்பட்டது. கோமதிக்கு மட்டும் ஒரு சிறிய மேஜை மேல் வாழை இலை போட்டு, அதன் முன் நாற்காலி போட்டு இருந்தார்கள். எல்லோரும் சாப்பிட அமர்ந்தவுடன் நமச்சிவாயம் கண்களை மூடிக்கொண்டு, இரு கைகளையும்  குவித்து

"ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் 
இடமா நறும் கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே"

என்ற பதிகத்தை  பாடி, பின் கண்களைத் திறந்தார். இதன் பின் எல்லோரும் ஒருமித்த குரலில்

" நமச்சிவாய வாழ்க நாதன் தன் தாள் வாழ்க" என்று கூறினார்கள்.

நமச்சிவாயம் ஆச்சர்யத்தின் எல்லைக்கே போய்விட்டார். இளம் குழந்தைகளையும், சற்றே வளர்ந்த குழந்தைகளையும் இவ்வளவு ஒழுக்கமாகவும், பணிவாகவும், இறை நம்பிக்கையை ஊட்டி வளர்த்திருக்கிறார் இந்த பெரிய மனிதர் என்று மனதில் நினைத்தார்.

இதற்குப் பிறகு இலையில் சாப்பிடும் பண்டங்கள் பரிமாறப்பட்டன. பரமகல்யாணியும், தேன்மொழியும் பரிமாற ஆரம்பித்தார்கள். பொற்கொடி தண்ணீர் கொடுப்பது போன்ற சுற்றுப்புற வேலைகளிள் ஈடுபட்டிருந்தாள்.

முதலில் வாழை இலையில் ஒரு ஓரத்தில் சிறிது பால் பாயசம் பரிமாறப்பட்டது. இதன் பிறகு தோட்டத்திலே விளைந்த இளம் கத்திரிக்காய் பொரியல் இடப்பட்டது.

வெள்ளை வெளேர் என்ற அரிசி சாதத்தின் மேல் ,வீட்டு மாட்டிலிருந்து பெறப்பட்ட பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட நெய் விட்டார்கள். முருங்கைக் கீரை கூட்டை விட ஆரம்பித்தாள் பரமகல்யாணி. ரசத்திற்காக சாதம் போட்டு விட்டு அதன்மேல்  தக்காளி போட்ட மிளகு ரசத்தை தேன்மொழி பரிமாறினாள். இந்த ரசத்தை மிகவும் ரசித்து சாப்பிட்ட ஆதித்யா "இது ரசம் மாதிரியே தெரியவில்லை. தக்காளி சூப் மாதிரி இருக்கிறது" என்று கூறி "ஒரு டம்ளர் குடிக்க கொஞ்சம் ரசம் கிடைக்குமா" என்று கேட்டான். பின்னர் சாதமும், வீட்டு  மாட்டின் பாலிலிருந்து  தயாரிக்கப்பட்ட பசுந்தயிறும் இடப்பட்டது. தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மாஇஞ்சி ஊறுகாய் போட்டார்கள் .

"இதே போல் சாப்பிட்டால் கூடிய சீக்கிரம் நான் வெயிட் போட்டு விடுவேன்" என்று கூறி சிரித்தான் ஆதித்யா. 

பின்பு அவன் பரமகல்யாணியைப் பார்த்து" இதெல்லாம் தேன்மொழி செஞ்சதுதானா" என்று கேட்டான்.  அதற்கு பரமகல்யாணி "ஆமாம்ப்பா. எல்லாமே அவளே சமைத்தது தான்" என்று கூறினாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழி பொய் கோபத்துடன் "சரியான சந்தேகப் பிரணையா இருப்பீங்க போல" என்று கூறினாள். நமச்சிவாயமும், கோமதியும் சாப்பாடு மிக நன்றாக இருந்ததாக தேன்மொழியையும்,பரம கல்யாணியையும் பாராட்டினார்கள்.

இதற்கு சுப்ரமணிய பிள்ளை " பக்கத்தில் இருக்கும் கிராமத்திலிருந்து ஒரு வருஷத்துக்கு உண்டான அரிசியை  வாங்கிக் கொள்கிறேன். மத்தபடி வீட்டில் ஒரு பசு மாடு இருக்கிறது.அதன் புண்ணியத்தில் பால், தயிர், நெய் போன்றவைகள் கிடைத்து விடுகின்றன. தோட்டத்தில் எப்பொழுதும் தக்காளி கத்திரிக்காய் வெண்டைக்காய், கொத்தவரங்காய், கீரை போன்றவைகள் பயிராகிக் கொண்டே இருக்கும் . ஒரு முருங்கை மரமும் உண்டு. அதனுடைய கீரையைத்தான் நீங்கள் சாப்பிட்டீர்கள்" என்று பெரிய விளக்கத்தை கொடுத்தார். இதன் பிறகு ஆதித்யா "எல்லாம் சரி ஆனால் தண்ணீர் கூட இவ்வளவு டேஸ்டா இருக்கு. இது போன்ற நீரை நான் குடிச்சது இல்லை" என்றான். அதற்கு தேன்மொழி "தாமிரபரணி தண்ணி என்றால் சும்மாவா.மகா கவி பாரதிக்கே பாட்டெழுத சொல்லித்தந்த தண்ணி ஆயிற்றே" என்று கூறினாள். சாப்பிட்டதும் எல்லோரும் சிறிது நேரம் இளைப்பாறினார்கள்.

மதியம் மூன்று மணிக்கு தேன்மொழி எல்லோருக்கும் டீ போட்டு கொடுத்தாள். டீயினுடைய சுவை வித்தியாசமாக இருந்தது. ஆதித்யா " என்ன டீத்தூள் பயன்படுத்துகிறீர்கள். இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது" என்று கேட்டான். அதற்கு பரமகல்யாணி

"  வீட்டிலேயேதயாரித்த டீத்தூள் இது. தோட்டத்தில் நிறைய செம்பருத்தி செடிகள் இருக்கின்றன. செம்பருத்தி பூவை எடுத்து உலர்த்தி, பொடியாக்கி, 

அதன் மூலம் டீ தயாரிக்கிறோம். டீ கொதிக்கும் போது பாலையும், இஞ்சியையும் சேர்க்கிறோம். வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை சேர்க்கிறோம். இந்த டீ  ரத்தக்கொதிப்பை குறைப்பதற்கும், இதயத்திற்கு பலம் சேர்ப்பதற்கும்  உதவுகிறது என்று சொல்கிறார்கள்" என்று கூறினாள்.

இதன்பின்னர் சுப்பிரமணிய பிள்ளையும், நமச்சிவாயமும் கிளம்பி அடுத்த தெருவில் இருக்கும் ஜெகநாத ஐயர் வீட்டுக்கு சென்று இரண்டு ஜாதகங்களையும் காட்டினார்கள். முதலில் ஜெகநாத ஐயரிடம் நமச்சிவாயத்தை அறிமுகப்படுத்தினார் சுப்பிரமணிய பிள்ளை. இரண்டு ஜாதகங்களையும் நன்றாக பார்வையிட்ட ஜெகன்நாத ஐயர்  "எட்டு பொருத்தங்களுக்கு மேல் சரியாக இருக்கின்றன" என்று கூறியவர், நமச்சிவாயத்தை பார்த்து " தேன்மொழி உங்கள் வீட்டு மருமகளாக ஆகப்போறத  நினைத்து நீங்கள் மிகவும் சந்தோஷப்பட வேண்டும். ரொம்ப அருமையான பெண். எனக்கு ஒரு பையன் இருந்திருந்தால் நிச்சயம் அவளையே என் மருமகளாக நான் தேர்ந்தெடுத்து இருப்பேன்" என்றார். இதைக் கேட்ட நமச்சிவாயம் " ரொம்ப நன்றி ஐயா. அவளது குணத்தையும், பண்பையும் பார்த்து தான் நாங்கள் அவளை மருமகளாக்கிக்கொள்ள ஆசைப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்

No comments:

Post a Comment