Thursday, February 22, 2024

வசந்த காலம் வருமோ?- 113

 வசந்த காலம் வருமோ?- 113

By N Krishnamurthy 

பொரியிடுவதற்காக ம்ருதுளாவிற்கு சகோதரன் இல்லாததால், பத்மநாபன் தம்பி ரகுவின் பையன் நந்த கிஷோரை ம்ருதுளாவின் வலப்பக்கத்தில் அமரச் செய்தார்கள். ம்ருதுளாவின் இரு கைகளையும், சங்கர கிருஷ்ணன் கைகள் கீழே தாங்கி பிடிக்க, நந்த கிஷோர்  பொரியை மூன்று முறை எடுத்து மிருதுளாவின் உள்ளங்கையில் கொடுக்க, ம்ருதுளாவும், சங்கர க்ருஷ்ணனும் அதை அக்னியில் போட்டார்கள் .

பின்பு அதன் மேல் நெய்யையும் விட்டார்கள். அதன்பின் ம்ருதுளாவும், சங்கர க்ருஷ்ணனும்  அக்னி முன்  உட்கார்ந்து, சாஸ்திரிகள் மந்திரம் சொல்ல சொல்ல ஹோமத்தில் நெய்யை  விட்டார்கள்.

பொரியிட்ட மச்சினனுக்கு சங்கர க்ருஷ்ணன் சார்பில் ஒரு பேன்ட், ஷர்ட், அரை பவுனில் மோதிரம் வழங்கப்பட்டது. இதன் பிறகு ஆரத்தி எடுக்கப்பட்டது.

அதற்குப்பின் தம்பதிகள்  ஒவ்வொரு பெரியவர்களையும் தேடிப் பிடித்து  நமஸ்காரம் செய்தார்கள்.

பலர் சங்கர க்ருஷ்ணன் மற்றும் ம்ருதுளாவின் கைகளை குலுக்கினார்கள்.

இதற்குப் பிறகு கிரஹப்பிரவேசத்திற்காக, ராஜேஸ்வரி தாங்கள் தங்கியுள்ள ரூமுக்கு புதுமண தம்பதிகளை அழைத்து வந்து ஆரத்தி சுற்றி உட்கார வைத்தாள். அதன்பின் ஒருவர் பின் ஒருவராக  தம்பதிகளுக்கு பாலும், பழமும் கொடுத்தார்கள் பின்பு கிரஹப்பிரவேசத்திற்கு ம்ருதுளாவுக்கு வாங்கி இருந்த பட்டுப் புடவை ஓதியிட்டு கொடுத்தார்கள். சங்கர க்ருஷ்ணனுக்கு பட்டு வேஷ்டியும், அங்க வஸ்திரமும் கொடுத்தார்கள்.அங்கே திரண்டு இருந்த பெண் வீட்டார்க்கு  சந்தனம், குங்குமம் கொடுத்து, முகூர்த்த பையில்  கிப்டுக்கு பதில்  பணம் போட்டு கொடுத்தாள் ராஜேஸ்வரி. குடிக்க கொஞ்சம் ஜூசும் ,ஒரு மைசூர் பாகும் கொடுக்கப்பட்டன.

இதை தொடர்ந்து அக்ஷதை ஆசீர்வாதமும், மற்ற ஆசீர்வாதமும்,ஓதியிடலும்  நடைபெற்றன.

 இதன்பிறகு வாத்தியார் மந்திரம்  சொல்ல, சம்பந்திகள் இருவரும் பதில் மரியாதை செய்து கொண்டார்கள்.

முகூர்த்தமானவுடன் பையன் ,பெண் வீட்டார் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் வெற்றிலை பாக்கில் வைத்து கொடுத்த பலதானம் செய்தனர். இதன் பிறகு சாப்பாட்டு பந்தி ஆரம்பமானது.

மார்கரட்டும்,வந்தனாவும் அப்போது அறிமுகமாகியிருந்த கேம் கார்டரில் கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடீயோ எடுத்தனர்.

அன்றைய முகூர்த்த சாப்பாடு சுவையை விவரிக்கவே முடியவில்லை. அத்தனை பிரமாதமாக சமைத்து இருந்தார்கள். ஒன்றிரண்டு பாலக்காடு ஐட்டங்களும் முகூர்த்த  சாப்பாட்டில் இடம்பெற்றன. முக்கியமாக சொல்லப் போனால், சக்கபிரதமன் மற்றும் ஓலன்(பால் கூட்டு) இரண்டும் தவறாமல் இடம் பெற்றன.

பாதம் ஹல்வா,
ஆம வடை
சக்க பிரதமன், வெள்ளரி தயிர்பச்சடி,
பழ பச்சடி,
ஓலன்,
பீன்ஸ் பருப்பு உசிலி,
உருளைக்கிழ்ங்கு காரக்கறி,
அவியல்,
வாழைக்காய் சிப்ஸ்,
பருப்பு, 
நெய், 
அப்பளாம்,
புளியஞ்சாதம்,
கத்திரிக்காய் பிட்லை,
வறுத்த வெண்டைக்காய் போட்ட மோர் குழம்பு,
பைனாப்பிள் ரஸம்,
சாதம், தயிர்,ஊறுகாய்,கடைசியில் பீடாவும் அன்றைய முஹுர்த்த சாப்பாட்டில் இடம் பெற்றிருந்தன.

சாப்பிடும்போது சங்கர க்ருஷ்ணனும், ம்ருதுளாவும் அடுத்தடுத்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சங்கர க்ருஷ்ணன் அருகில் ஸ்ரீவத்சன் அமர்ந்திருந்தான். ம்ருதுளாவிற்கு பக்கத்தில் வசுமதி உட்கார்ந்து கொண்டிருந்தாள்.  வசுமதி ம்ருதுளாவின்  காதில்" நீ சாப்பிட்ட அல்வாவில் கொஞ்சம் மீதி வைத்து அதை அவர் இலையில் போடு"  என்று கூறினாள். அதைக் கேட்ட ம்ருதுளா" அய்யய்யோ. வேண்டாம் அக்கா. அது  எச்சல்" என்றாள். அதற்கு வசுமதி அவள் காதில் " அது உனக்கு எச்சல். அவருக்கு நீ சாப்பிட்ட எச்சல் தான் அமிர்தம். அத நீ அவர் எலையில் போடு. அப்புறம்  நடக்கறத பாரு" என்றாள்.வேறு  வழி இல்லாமல் ம்ருதுளா அப்படியே செய்ய வேண்டியதாயிற்று.

இதே  போல சங்கர க்ருஷ்ணனும் ஸ்ரீவத்சனால் செய்ய சொல்லி வற்புறுத்தப்பட்டான். அவனும் அவ்வாறே செய்தான். இப்படியாக சாப்பாடு கேலியும், கிண்டலுமாக தொடர்ந்தது.

எதிர் புறத்தில் ஜோடியாக அமர்ந்து கொண்டிருந்த ராஜேஸ்வரி, மார்க்க பந்து மற்றும் மைதிலி, சாரங்கன் இந்த கூத்தையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

சாப்பிட்ட உடன் எல்லோரும் சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துக்கொள்ள அவரவர்கள் இடத்துக்கு சென்றார்கள்

No comments:

Post a Comment