முற்பகல் செயின்..29
By N Krishnamurthy
ஐகன்னாத அய்யரிடம் விடை பெற்றுக்கொண்டு வீடு திரும்பிய
சுப்பிரமணிய பிள்ளையை பார்த்து பரமகல்யாணி "என்னங்க ஆச்சு ஐயர் என்ன சொல்றாங்க" என்று கேட்டாள். சுப்பிரமணிய பிள்ளை "எல்லாம் நல்ல விஷயம் தான். இரண்டு பேர் ஜாதகம் பொருந்தி இருக்கிறதா சொல்லிட்டாரு" என்று கூறினார்.இதைக் கேட்ட தேன்மொழி வெட்கம் கலந்த பார்வையை ஆதித்யா மேல் ஓட விட்டாள்.
சந்திரசேகரன் ஆதித்யாவின் கையை பிடித்து குலுக்கி "கங்கிராஜுலேஷன்ஸ்" என்று கூறினான். சுப்பிரமணிய பிள்ளை நமச்சிவாயத்திடம் "உங்க பையன் பையன், மருமகள் கிட்ட பேசி அவங்க சம்மதத்தையும் வாங்கணும் இல்லையா" என்று கேட்டார். அதற்கு ஆதித்யா" நிச்சயம் செய்யணும். ஆனா எங்க அப்பா, அம்மா இந்த விஷயத்துல தடையா இருக்க மாட்டாங்க" என்று கூறினான்.
"மத்தியானம் வச்ச பால் பாயசம் மீது இருக்கு கொஞ்சம் சூடுபண்ணி தரட்டுமா" என்று கேட்டாள் பரம கல்யாணி. எல்லோரும் தலையாட்டினர்கள். எல்லோருக்கும் பால் பாயாசம் விநியோகித்தாள் பொற்கொடி.
"மாலை இங்க இருக்குற சிவன் கோவிலுக்கு போயிட்டு வந்துடலாமா" என்று கேட்டார் சுப்பிரமணிய பிள்ளை. "நிச்சயம் செய்யலாமே" என்றார் நமச்சிவாயம்.
ஆறு மணி அளவில் வீட்டைப் பூட்டுக் கொண்டு எல்லோரும் அருகில் இருந்த கடக்காலீஸ்வரர் கோயிலுக்கு சென்றார்கள்
கோவிலில் இருந்த சிவாச்சாரியார் சிவநேசன் சுப்ரமண்ய பிள்ளையை பார்த்து" என்ன பிள்ளைவாள். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்காக போல இருக்கு" என்றார்.
"ஆமாம் சாமி"என்றவர் நமச்சிவாயத்தையும், கோமதியையும் அவருக்கு அறிமுகம் செய்த பின் ஆதித்யாவை சுட்டிக்காட்டி "இவர்தான் இவுங்க பேரப்பிள்ள. தேன்மொழிக்கு இவரை பார்த்திருக்கோம்" என்றார்.
"கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு பிள்ளைவாள். கடக்காலீஸ்வரர் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும்"என்றார்.
அவர் பின்னர் அவர்களிடம் "இங்குள்ள ஈசன் கடக்காலீஸ்வரர் என்று அறியப்படுகிறார். இறைவியின் பெயர் கரும்பால் மொழி அம்பாள்.
அகத்திய மாமுனி தென்னாட்டிற்கு விஜயம் செய்த போது, இங்குள்ள ஆநிரை மேய்ப்பவர்கள் அகத்திய முனிவருக்கு மூங்கில் கடக்காலில் (மூங்கிலால் உருவான குடுவை) பால் கொடுத்து உபசரித்தனர். பின்னர், ஆநிரை மேய்ப்பவர்கள் மாடு மேய்க்கச் சென்றுவிட்டனர். அகத்திய முனிவர் அந்த கடக்காலையே தலைகீழாகக் கவிழ்த்து சிவலிங்கமாக உருவம் செய்து வழிபட்டார். வழிபாடு முடிந்து அகத்தியர் சென்றுவிட்டார்.
ஆநிரை மேய்ப்பவர்கள் மாலையில் வந்து கடக்காலை நிமிர்த்த முயற்சி செய்தபோது அதை நிமிர்த்த முடியவில்லை. நிமிர்த்த முடியாததால் இடையர்கள் அதைக் கோடாரி கொண்டு உடைக்க முயன்றனர். அப்போது கடக்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதைப் பார்த்துப் பயந்த இடையர்கள் மன்னர் வல்லப பாண்டியனிடம் சென்று முறையிட்டனர்
பார்வைக் குறைபாடுடைய வல்லப பாண்டிய மன்னர் வந்து அந்த கடக்காலை தம் இரு கரங்களால் தடவி கண்களில் ஒற்றிக் கொண்டதும் கண்களுக்குப் பார்வை கிடைத்தது. இதனால் மனமகிழ்ந்து, 'கண் கொடுத்த கமலேசா' என்று அழைத்து இந்த கடக்காலீஸ்வரர் கோயிலைக் கட்டினார்.
கரும்பால்மொழி அம்மனுக்கு இங்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. 'கருவைக் காப்பவள், மாட்சிமைப்படுத்துபவள்' எனப் பொருள் உண்டு என்கிறார்கள். இந்தப் பகுதி பெண்கள் கர்ப்பமுற்றால் இந்த அம்மனிடம் வேண்டிக் கொள்வார்கள். தாயும் சேயும் நல்லபடியாகப் பிறந்தால் மஞ்சளைச் சாற்றி வழிபடுவதாக வேண்டிக்கொள்வார்கள். அதன்படி நல்லபடியாகப் பிரசவம் ஏற்படும். பக்தர்களும் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இதுபோல் மாடு கன்று போட்டாலும் அம்மனுக்கு மஞ்சள் சார்த்தி நன்றி செலுத்தும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது
முன்பு 'வில்வபுரி' என்றும் 'திருமலைக்கொழுந்துபுரம்"என்ற பெயர் கொண்ட இவ்வூர் நாளடைவில் கடையநல்லூர் என மருவியதாகவும் தல வரலாறு கூறுகிறது"என்று கூறி இறைவனுக்கும், அம்பாளுக்கும் கற்பூர ஆரத்தி காண்பித்தார். பின்பு சிவாச்சாரியாரிடம் விடைபெற்றுக்கொண்டு அனைவரும் வீடு திரும்பினார்கள்.
No comments:
Post a Comment