முற்பகல் செயின்..26
By N Krishnamurthy
வீட்டு வாசலில் சுப்பிரமணிய பிள்ளையும், பரமகல்யாணியும் நின்று கொண்டு அவர்களை வரவேற்றார்கள். அவர்களுக்கு பின்புறம் தேன்மொழி ஜாடையில் இரண்டு பெண்களும் மற்றும் ஒரு சிறுவனும் வெட்கத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.
தேன்மொழி , ஆதித்யா மற்றும் நமச்சிவாயம் தம்பதிகளுக்கு தன்னுடைய தங்கைகளை காட்டி, "இவ தான் எனக்கு அடுத்தவ, பெயர் வெண்ணிலா, அடுத்து நிக்கறது பொற்கொடி, இவன் தம்பி அருள்மொழி" என்று அறிமுகப்படுத்தினாள். எல்லோரும் வீட்டில் உள்ளே சென்றார்கள்.
"பல்துலக்கி, முகம் கை கால் கழுவிட்டு வந்தீர்கள் என்றால் காபி கொடுத்து விடுவேன்" என்றாள் பரமகல்யாணி. எல்லோருக்கும் சூடான காபி வழங்கினாள் தேன்மொழி. பின்பு ஹாலில் ஒரு பத்தமடை பாய் விரிக்கப்பட்டது. நமச்சிவாயத்தை பார்த்து " நீங்கள் உட்கார்ந்து கொள்ள முடியுமா "என்று கேட்டார் சுப்ரமணிய பிள்ளை.
" எனக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்ல. என் மனைவி கோமதி தான் கீழே உட்கார்ந்தா , எழுந்திருக்க ச்ரம படுவா" என்று கூறினார்
நமச்சிவாயம். கோமதிக்கு ஒரு சேர் போடப்பட்டது. மீதி எல்லோரும் பாயில் அமர்ந்தார்கள்.
பின்பு நமச்சிவாயத்தின் குடும்பத்தை பற்றிய விவரங்களை சுப்ரமணியம் கேட்டு தெரிந்து கொண்டார்.
கோமதியிடம் பேசிக் கொண்டிருந்த பரமகல்யாணி சுப்பிரமணிய பிள்ளையிடம் "இங்க பாருங்க. உங்க மாமா சம்சாரம் கமலாம்பா இவர்களுக்கு தூரத்து உறவாம் "என்று கூறினாள்.
" கிட்டத்தட்ட ஏற்கனவே சொந்தக்காரர்கள் ஆகிவிட்டோம் போலிருக்கு" என்றார் நமச்சிவாயம். ஒரு புன்சிரிப்புடன் அதை ஆமோதித்தார் சுப்பிரமணிய பிள்ளை.
அதன்பின்பு நமச்சிவாயம் சுப்ரமணிய பிள்ளையை பார்த்து
" தேன்மொழிக்கு கல்யாணத்திற்கு பாக்க ஆரம்பித்து விட்டீர்களா" என்று கேட்டார்.
"ஆமாங்க. முதல்ல பையனுக்கு பண்ணிடலாம்னு தான் இருந்தேன். ஆனா அவன் பிடிவாதமா தேன்மொழிக்கு பண்ணினதுக்கு அப்புறம் தான் பண்ணிப்பேன்னு சொல்றான். அதனால தேன்மொழிக்கு இப்பதான் ஒரு மூணு மாசமா ஜாதகம் பார்க்க ஆரம்பித்து இருக்கேன்" என்றார். நமச்சிவாயம் அவரிடம் "ஆதித்யா அமெரிக்காவிலிருந்து இப்போது வந்து சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அவனுக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று இருக்கிறோம். உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் ஆதித்யாவிற்கு தேன்மொழியை மனைவியாக்கி கொள்ளலாம் என்று பார்க்கிறோம்" என்று கூறினார்.
"நீங்க சொல்றத கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா உங்க குடும்பம் அளவுக்கு எங்க குடும்பம் கிடையாது. நாங்க நடுத்தர வர்க்கத்துக்கு கொஞ்சம் கீழே. இப்பதான் என் பையனும்,பொண்ணும் வேலைக்கு போய், கொஞ்சம் நிலைமை உசத்தற மாதிரி இருக்கு. உங்க பையனும்,
மருமகளும் அமெரிக்காவில் இருக்காங்க.உங்க பேரனும் இங்க நல்ல வேலேல இருக்கார். இதெல்லாம் பாத்தா நம்ப சம்பந்தம் சரியா வருமான்னு நீங்க யோசிக்கணும்" என்று கூறினார் சுப்பிரமணிய பிள்ளை. அதற்கு நமச்சிவாயம் அவரிடம்
" இதெல்லாம் நான் பலமுறை யோசித்து விட்டேன். உங்களது பொருளாதார நிலமயை பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. எங்களுக்கு வேண்டியது தேன்மொழி போன்ற ஒரு நல்ல பண்புள்ள பெண். உங்களதை போன்ற பண்புள்ள குடும்பத்தில் பொண் எடுக்கறதுக்கு நாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு தெரியுமா, தெரியவில்லையா என்று தெரியல, ஆதித்யாவுக்கும் தேன்மொழிக்கும் கூட ஒருவருக்கொருவர் ஈடுபாடு இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.
காதலை மிக நளினமாக "ஒருவொருக்கொருவர் ஈடுபாடு" என்று இப்படி விளக்க முடியுமா என்ன?
இதை அவர் கூறியதும் சுப்பிரமணிய பிள்ளை அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு" எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்களைப் போன்றவர்கள் சம்பந்தம் கிடைக்க நாங்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும்" என்று கூறி
" நீங்க ஆதித்யாவின் ஜாதகத்தை கொண்டு வந்திருந்தீங்கன்னா, அடுத்த தெருவில், என் கூட வேலையில் இருந்த ஜெகநாதன் ஐயர் கிட்ட
ரெண்டு ஜாதகத்தையும் கொடுத்து ஜாதகம் பொருந்துதான்னு பாக்கலாம். அவர் நல்லா ஜாதகம் பாப்பார்" என்று கூறினார்.
No comments:
Post a Comment