Wednesday, February 7, 2024

முற்பகல் செயின்..31

 முற்பகல் செயின்..31

By N Krishnamurthy 

காலை நான்கு மணிக்கு எழுந்த தேன்மொழியும், பரம கல்யாணியும் குளித்து முடித்து உணவு தயாரிக்க ஆரம்பித்தார்கள். நமச்சிவாயம் தம்பதிகளுக்காக, சுடு நீர் போடப்பட்டு அவர்களை தேன்மொழி ஐந்தரை மணிக்கு எழுப்பினாள்.

ஆறுமணிக்கு எழுந்த சந்திர சேகரன் ஆதித்யாவை எழுப்பினான்.மற்ற குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக எழுந்தனர். ஏழு மணிக்கு டெம்போ ட்ராவலர் வேன் வந்தது.

முதலில் உணவு பொருள்களை ஏற்றி பின் சீட்டுகளில் வைத்து விட்டு அனைவரும் வேனில் ஏறி அமர,ட்ரைவர்வண்டியை கிளப்பினார்.

இடைகல் வழியாக இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செங்கோட்டையை எட்டு மணிக்கு வேன் அடைந்தது. வழி நெடுகிலும் பல கல் மண்டபங்களை கண்ணுற்ற நமச்சிவாயம் சுப்ரமணிய பிள்ளையிடம் "எதற்கு அருகருகில் இவ்வளவு கல் மண்டபங்கள்" என வினவ, அதற்கு சுப்ரமணிய பிள்ளை

"திருமலை நாயக்கர் மதுரையிலிருந்து  ஆட்சி புரியும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், குற்றாலநாதர் கோவில் போன்ற கோவில்களில் உச்சிகால பூஜை முடிந்த பிறகே மதிய உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் மதுரையில் இருக்கும்போது கோவில்களில் பூஜை நடைபெறுவதை மணியோசை கொண்டு அறிந்துகொள்ள வழிநெடுக கல் மண்டபங்களை கட்டி அங்கு மணிகளை கட்டி வைத்தார். 

பூஜை தொடங்கியவுடன் கல் மண்டபங்களில் அமைக்கப்பட்ட மணிகளை ஒவ்வொரு மண்டபங்களில் இருந்தும் வரிசையாக,ஒன்றன் பின் ஒன்றாக ஒலிக்கச்செய்து பூஜை தொடங்கியதை அறிந்து கொண்டார். எனவே கல் மண்டபங்கள் மணிமண்டபங்கள் எனவும் அழைக்கப்பட்டன. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கல் மண்டபங்கள் பெரும்பாலான இடங்களில் சிதைந்து போயிருக்கின்றன. பல மண்டபங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இன்னும் பல மண்டபங்கள் இன்று வர்த்தக கட்டிடங்களாக செயல்பட்டு வருகின்றன. சில கல் மண்டபங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது"என்றார் வருத்தத்துடன்.

செங்கோட்டையிலிருந்தே குற்றால சாரல்  அடிக்க ஆரம்பித்தது.

குற்றாலம் நெருங்க நெருங்க சாரல் மழையாக பெய்ய ஆரம்பித்தது.ஒரு வழியாக குற்றாலம் சென்றடைந்தது வேன்.

விட்டு விட்டு பெய்யும் சாரல் மழை, இடையிடையே அடிக்கும் இதமான வெயில் அத்துடன் வருடிச் செல்லும் குளிர்ந்த காற்று என சொர்க்கபுரியாக குற்றாலம் காட்சி தந்தது . வேனிலேயே அமர்ந்து அனைவரும் கொண்டு வந்திருந்த இட்டிலி,சட்னி மற்றும் வாழைபுட்டை சாப்பிட ஆரம்பித்தனர்.

No comments:

Post a Comment