வசந்த காலம் வருமோ?-110
By N Krishnamurthy
மாப்பிள்ளை அழைப்பு அன்றிரவே வைத்யநாத சாஸ்திரிகள் மார்க பந்து, ராஜேஸ்வரி, சங்கர க்ருஷ்ணன் ஆகியோருக்கு மறுநாள் முஹுர்த்தத்தன்று நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளை,கிரமமாக பட்டியலிட்டு, அவைகளை விளக்கியும் கூறினார்.
முஹுர்த்தத்தன்று விடியற்காலைஐந்து மணிக்கே மங்கள வாத்யம் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.
இந்த நாளை எண்ணி இது நாள் வரை காத்திருந்த ம்ருதுளாவிற்கு இதையே நினைத்துக்கொண்டிருந்ததால், சரியான தூக்கம் இல்லை.
சங்கர க்ருஷ்ணனின் நிலைமையையும் கிட்டத்தட்ட அப்படித்தான்.
ராஜேஸ்வரிக்கோ முஹுர்த்தம் விக்னம் இல்லாமல் நடக்க வேண்டுமே என்ற படபடப்பு இருந்தது.
மாப்பிள்ளை சங்கர கிருஷ்ணனுக்கு " பல் தேய்க்கும் பக்ஷணம்" என்ற வகையில் ஒரு ட்ரேயில் டூத் பிரஷ், பேஸ்ட் ,ஷேவிங் செட் கண்ணாடி, சீப்பு , ஹேர் ஆயில் மற்றும் டவல் ஆகியவற்றுடன் "அத்தை ஸ்வீட்" என்று இரண்டு வகையான ஸ்வீட்டுகளையும் சேர்த்து, சில பெண்கள் கௌரி கல்யாணம் பாட, மைதிலி, சங்கர க்ருஷ்ணனிடம் ட்ரேயை கொடுத்தாள். பின்பு கோலம் போட்ட மணையில் சங்கர க்ருஷ்ணனை உட்கார வைத்து, அத்தை, மாமி யாரும் இல்லாததால், அதற்கு பதிலாக, ராஜேஸ்வரியே அவன் தலையில் சிறிது எண்ணெயை வைத்து இரண்டு பக்கத்திலும் இரண்டு பொட்டு வைத்து வழித்தாள். ம்ருதளாவுக்கும் இதே போல ரங்கநாயகி செய்தாள். சங்கர க்ருஷ்ணன் மங்கள ஸ்னானம் செய்து காசி யாத்திரைக்கு ரெடியானான்.
ம்ருதுளா மாமாவுக்கு பதிலாக பத்மநாமன் வாங்கிய புடவையை கட்டிக்கொண்டு ஊஞ்சலுக்கு ரெடியானாள்.
சங்கர க்ருஷ்ணனுக்கு சாஸ்திரிகளின் அசிஸ்டண்ட்,9X5 வேஷ்டியை பஞ்சகச்சமாக கட்டி, அங்கவஸ்தரத்தால் உடலை சுற்றி விட்டார்.கண்ணுக்கு மையெழுதி, கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைக்கப்பட்டது.
தோளில் சாத மூட்டை, கையில் தடி, காலில் புது செருப்பு, கையில் விசிறி, பகவத் கீதை புத்தகம் சகிதம் சங்கர க்ருஷ்ணன் காசி யாத்திரைக்கு புறப்பட்டான். பெண் வீட்டை சேர்ந்தவனாக இருந்தாலும், வேறு வழியில்லாமல், ஸ்ரீவத்சன் சங்கர க்ருஷ்ணன் பின்னால் நின்று குடை பிடித்தான்.
சந்தானத்தின் மனைவி மார்க்ரட்டும்,மகள் வந்தனாவும் இதையெல்லாம் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மண்டபத்திலிருந்து கொஞ்ச தூரம் போனதும், மைதிலி சகிதம் வந்த சாரங்கன் சங்கர க்ருஷ்ணனிடம் "நான் என் புத்ரியை உமக்கு கன்யா தானம் செய்து தருகிறேன். நீங்கள் அவளுடன் தம்பதிகளாக வாழ்க்கை
நடத்தி சீரும்,சிறப்புமாக வாழ வேண்டும் " என்ற மந்திரத்தை சொல்லி கையில் உள்ள மஞ்சள் தடவிய தேங்காய்,வெற்றிலை, பாக்கு,பழத்தை கொடுக்க, அவைகளை வாங்கிக்கொண்ட சங்கர க்ருஷ்ணன் , சாஸ்திரிகள் சொன்னபடி, அவற்றை மேளக்காரரிடம் கொடுத்தான்.
இதை எடுத்து மாலை மாற்றும் நிகழ்ச்சி ஆரம்பித்தது. ஏற்கனவே சங்கர க்ருஷ்ணனுக்கு ம்ருதுளாவுக்கும் தண்டு மாலை, சின்ன குட்டி மாலை அணிவித்து இருந்தார்கள். சங்கர க்ருஷ்ணனனும், ம்ருதுளாவும், எதிர் எதிர் பக்கம் நிற்க வைக்கப்பட்டார்கள். மாமா சந்தானம், சங்கர கிருஷ்ணனுக்கு மூன்று முறை மாலை எடுத்து தர , அதே மாதிரி ம்ருதுளாவுக்கும் ஸ்ரீ வத்சன் மாலை எடுத்து தர, சங்கர க்ருஷ்ணனும் ம்ருதுளாவும் மாலை மாற்றிக்கொண்டார்கள். கூட்டத்தில் இருந்த சிலர் பெண்ணையும் மாப்பிள்ளையும் அவரவர் மாமன்கள் தூக்கிக் தூக்கிக்கொண்டு மாலை மாற்ற வேண்டும் என்று கூறினார்கள். ராஜேஸ்வரியும், மைதிலையும் "அதெல்லாம் இந்த காலத்தில் ஒத்து வராது' என்று கூறி அதை மறுத்து விட்டார்கள். மாலை மாற்றும் போது அங்கிருந்து சில பெண்கள் "மாலை மாற்றினாள்" என்ற பாடலை பாட , திருவிழா ஜெயசங்கர் மிக அழகாக அதை நாயனத்தில் வாசித்துக் காண்பித்தார்.
இதற்கிடையில் காலை டிபன் பந்தி ஆரம்பமானது.
இதை தொடர்ந்து காபி தரப்பட்டது.
No comments:
Post a Comment