Sunday, February 25, 2024

வசந்த காலம் வருமோ?- 118

 வசந்த காலம் வருமோ?- 118

By N Krishnamurthy 

பஸ் திருச்சூரை அடைந்த உடன் பத்மநாபன் அருகில் அமர்ந்து கொண்டிருந்த சிதம்பரத்தை பார்த்து "போர் அடிக்கறது. நீங்க எதாவது பேசுங்களேன்" என்றார். உடனே  சிதம்பரம் தன் பையில் இருந்த ஒயர்லெஸ்  மைக்கை எடுத்து வைத்துக் கொண்டு எல்லோரையும் பார்த்து "பத்மநாபன் மாமா போர் அடிக்கிறது அப்படின்னு  சொல்லி  என்ன பேச சொல்றார் . நான் இப்ப பேசி போர் அடிக்க போறேன்" என்றார்.

" இந்த பஸ்ஸில் நிறைய ஸ்ரீவைஷ்ணவர்களும், ஸ்மார்த்தர்களும்  இருக்கா. நம்ப ஒண்ணுக்குள்ள ஒண்ணு சம்பந்தம் வெச்சுண்டு இருக்கோம்.

உங்களுக்கு நான் இப்போ ரெண்டு விஷயம் சொல்ல போறேன்.ரெண்டுமே சிவ, விஷ்ணு பேதம் பார்க்க வேண்டாம் என்பதற்கான  அறிவுரையாகும்.

முதல் விஷயம் காஞ்சி மகா பெரியவா அவருடைய தெய்வத்தின் குரலில் எழுதியிருக்கார். அவர் சொல்றபடி ஈஸ்வரன் மேல் அதீத பக்தியும், வெறியும் கொண்ட ஒரு அன்பர் பெரியவாள பார்த்து நமஸ்காரம் பண்றார். பெரியவா அவர்கிட்ட நாலு வரி கொண்ட ஒரு சம்ஸ்க்ருத  ஸ்லோகத்தினுடைய முதல் இரண்டு வரிகளை சொல்லி அர்த்தம் சொல்றார். அந்த ரெண்டு வரில சிவன் ரொம்ப உசத்தியாகவும்,விஷ்ணு  ஒரு படி கம்மியாகவும் சொல்வதாக இருந்தததாம். அத கேட்டு அந்த அன்பருக்கு பரம சந்தோஷம். இந்த சந்தோஷத்தோட பெரியவாள மறுபடியும் நமஸ்காரம் பண்ணீட்டு அந்த இடத்தை விட்டு கெளம்பறார். இதுக்கு அப்புறம் பெரியவா சொல்றா "அடுத்த ரெண்டு வரி அர்தத்த  நான் சொல்லி இருந்தேன்னா  அவன் பெரிய ஆட்டம் ஆடி இருப்பான். அங்கு ஒரு பிரளயமமே உண்டாகியிருக்கும். ஏன்னா அடுத்த ரெண்டு வரில விஷ்ணுவை பத்தி ரொம்ப ஒசத்தியும், சிவனப் பத்தி தாழ்த்தியும் எழுதி இருக்கார் அந்த கவிஞர். நான் எதுக்கு சொல்றேன்னா அப்படின்னா சிவ, விஷ்ணு பேதம் பாக்க கூடாது அப்படின்னு வற்புறுத்த அந்த கவிஞர் அந்த ஸ்லோகத்த பண்ணியிருக்கார்" 

மகா பெரியவா இந்த விஷயத்த என்ன சமத்காரமா ஹேண்டில் பண்ணியிருக்கா பாருங்கோ.

சரி அடுத்த விஷயத்துக்கு வரேன்.

உங்களுக்கெல்லாம் ஒண்ணு தெரியுமா?

ஒரு ஆழ்வார் ஓரு  சிவனடியாரை அதுவும் ஒரு ராஜாவைப் பாராட்டி  பத்து பாடல்கள் எழுதி மங்களாசாசனம் பண்ணி இருக்கார்" என்று கூறிய சிதம்பரம் "இது பத்தி  யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டார். சக்கரவர்த்தி "நேக்கு தெரிஞ்சு அப்படி  எந்த ஆழ்வாரும் சிவனடியாரை பாராட்டின மாதிரி தெரியல. பாராட்டவும் மாட்டான்னு  நான் நெனக்கிறேன்.யாராவாது அப்படி ஒரு கதையை இட்டு கட்டியிருந்தாதான் உண்டு" என்றார். இதைக் கேட்ட சிதம்பரம்" இல்லை. இல்லை.திருமங்கை ஆழ்வார் தான் அப்படி செஞ்சிருக்கார். கோச்செங்கணான் அப்படின்ற சோழ மன்னன பத்தி அவர் புகழ்ந்து பத்து பாடல் எழுதி இருக்கிறார்" என்று கூறி திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி, திருநறையூர் பாசுரத்தில் பத்து பாசுரத்தில் நாற்பது வரிகளில் கோச்செங்கட்ச் சோழனாரின் திறத்தை  வியந்து பாடி இருக்கார். அதுமட்டுமா "செங்கணார் அமைச்ச கோயிலுக்கு வாருங்கள், வாருங்கள்" என்று  கூவி அழைக்கின்றார் என்றார்

"செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

தென் தமிழின், வட புலக்கோன்சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை"

"திருமங்க ஆழ்வார்  ஏன் அப்படி செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்" என்று ஒரு கதையை கூற ஆரம்பித்தார் சிதம்பரம்.

எல்லோரும் மிகவும் கவனமாக அவருடைய கதையை கேட்க காதுக ளை கூர்மையாக்கிக்கொண்டார்கள்.

No comments:

Post a Comment