Wednesday, February 21, 2024

முற்பகல் செயின்..45

 முற்பகல் செயின்..45

By N Krishnamurthy 

சனிக்கிழமை முழுவதும் தேன்மொழி அவர்களுடனே இருந்தாள். அன்று கோமதியை ஒரு வேலையும் செய்ய விடவில்லை அவள். எல்லா வேலையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். அன்று இரவு அவள் செய்திருந்த வெண் பொங்கலும், கடப்பாவும் மிக உயர் ரகமாக இருந்தது. ஆதித்யா சாப்பிட்டவுடன் அவளிடம்" இப்பொழுது உண்மையிலேயே உன் சமையல் பிரமாதம் என்று நான் ஒத்துக் கொள்கிறேன்" என்று கூறினான். அதற்கு அவள் சிரித்துக் கொண்டே " நீங்கள் ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் என் சமையல் பிரமாதம் தான் என்று எனக்கு தெரியும்" என்றள்.

மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு காபி சாப்பிட்ட ஆதித்யா தாத்தா, பாட்டியிடம் "நானும் தேன்மொழியும் காசிநாதன் தாத்தா வீட்டிற்கு சென்று வருகிறோம். அவர்கள் பகல் சாப்பாடு சாப்பிட்டு போக சொல்வார்கள். எனவே அங்கு சாப்பிட்டு விடுகிறோம். மாலை 4 மணி போல திரும்பி விடுவோம்" என்று கூறி அவனுடைய டூவீலரில் தேன்மொழி அழைத்துக் கொண்டு காசிநாதன் வீட்டிற்கு சென்றான்.

வீட்டின் முன் கதவில் இருந்த பெல்லை அடித்தவுடன் கதவை திறந்து சுடிதார் அணிந்த பதினாறு வயதுப்பெண் "உங்களுக்கு யார் வேண்டும்" என்றாள். " காசிநாதன் சாரை பார்க்க வேண்டும்" என்றான் ஆதித்யா. "உள்ளே வாருங்கள்" என்று அழைத்துச் சென்று அவர்களை சோபாவில் அமர வைத்தாள் அப்பெண். " பாட்டி தாத்தாவை பார்க்க யாரும் வந்து இருக்காங்க "என்றாள். அறையிலிருந்து இருந்து வெளியே வந்த காந்திமதி " ஆதித்யாவா,வா வா " என்றவள் அந்தப் பெண்ணை பார்த்து "உனக்கு ஆதித்யாவை அடையாளம் தெரியலையா" என்றார். உடனே அந்த பெண் யாரென்று பார்வையாலே ஆதித்யா கேட்க, அதற்கு காந்திமதி " வித்யா சித்தி பொண்ணு ரம்யாவை அதுக்குள்ள நீ மறந்துட்டயா" என்றாள்.

" ரம்யாவா இது. சின்ன வயசுல பார்த்திருக்கேன்.இப்போ என்னமோ வளர்ந்துட்டா" என்ற ஆதித்யா ரம்யாவை பார்த்து " ஹாய், ரம்யா.என்ன பண்ற நீ" என்று கேட்டான்.

அதற்கு அவள் " இப்பதான் பிளஸ் டூ எக்ஸாம் எழுதி முடிச்சிருக்கேன் அண்ணா. ரிசல்ட்டுக்கு வெயிட் பண்றேன் .வந்த உடனே தான் காலேஜுக்கு எல்லாம் அப்ளை பண்ணனும்" என்றாள். "மேற்கொண்டு என்ன படிக்க போற? இன்ஜினியரிங்கா?" என்று கேட்டான் ஆதித்யா. அதற்கு ரம்யா சிரித்துக் கொண்டே " இன்ஜினியரிங் படிக்கிறதுக்கு உன்ன போல கொஞ்சம் மூளை இருக்கணம். நான் பயாலஜி குரூப் தான் எடுத்து இருக்கேன் மெடிக்கல் கிடைத்தால் சேருவேன்" என்றாள்.

ஆதித்யாவுடன் வேறு ஒரு பெண்ணை பார்த்த போது காந்திமதிக்கு திகைப்பே தோன்றவில்லை.

முதல் நாள் இரவே நித்யா அவளிடம் பேசி இருப்பாள் போல இருக்கிறது."இது யாரப்பா உன் கூட வந்து இருக்கா" என்று தேன்மொழியை காட்டி கேட்டாள் காந்திமதி. ஆதித்யா உடனே " பாட்டி இதான் என் கூட வேலை செய்கிற தேன்மொழி" என்று கூறினான். தேன்மொழி எழுந்து நின்று காந்திமதியை பார்த்து "வணக்கம்" என்று சொன்னாள். 

" உட்காரம்மா" என்று சொன்ன காந்திமதி உள்பக்கம் குரல் கொடுத்து "ஏங்க உங்க பேரன் வந்து இருக்கான்" என்றாள். கைலியும், பனியனும் அணிந்து கொண்டிருந்த காசிநாதன் உள்ளே இருந்து வெளியே வந்து ஆதித்யாவை பார்த்து " வாப்பா .நம்ப வீட்டுக்கு வர இப்பதான் வழி தெரிந்ததா" என்று கேட்டார். ஆதித்யாவும் பதிலுக்கு கிண்டலாக

 " வழி தான் தெரியல தாத்தா. நேத்து அம்மாவுக்கு போன் பண்ணி எப்படி போகணும்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேன்" என்றான்.

" நம்ம வீட்டுக்கு தான் வரது இல்ல. அது தவிர கிண்டல் பேச்சு வேற"

என்று சொல்லி சிரித்தார் காசிநாதன். பின்பு அவருக்கும் தேன்மொழியை அறிமுகம் செய்து வைத்தான் ஆதித்யா.

காந்திமதி "சாப்டூட்டு போவயாம்" என்றாள் ஆதித்யாவிடம். அதற்கவன் " அது நீ மத்தியானம் செய்யப் போற சாப்பாட்டு மெனுவை பொறுத்தது" என்றான் கிண்டலாக. காந்திமதி சிரித்துக் கொண்டே" உனக்கென நாங்கள் தனியாக செய்ய முடியாது. நாங்கள் என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தான் உனக்கு போட முடியும்" என்றாள். இதைக் கேட்ட தேன்மொழி" நான் வேண்டுமானால் உங்களுக்கு சமைத்து கொடுக்கிறேன்" என்றாள். உடனே காந்திமதி அமர்த்தலாக " அதெல்லாம் வேண்டாம்மா.நம்ம வீட்டுல சமையலுக்கு ஆள் இருக்கு. சமையல் செய்ய ஒரு ஆச்சியை போட்டு இருக்கோம்" என்றாள் பெருமையாக. பிறகு பொதுவான விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதன் பிறகு ஆதித்யா காசிநாதன், காந்தி மதியிடம் மெல்ல " தேன்மொழிக்கு சொந்த ஊர் கடையநல்லூர். அவங்க அப்பா சுப்ரமண்ய பிள்ளை வாத்தியாராக இருந்து ரிட்டயர் ஆனவர்.போன வாரம் தாத்தா, பாட்டியை அடித்துக்கொண்டு போய் நான் கடையநல்லூர் சென்று இவர்கள் வீட்டில் மூன்று நாள் இருந்து விட்டு வந்தோம்" என்று கூற ஆரம்பித்தான். ஏற்கனவே நித்யா அவர்களிடம் இதையெல்லாம் சொல்லியிருந்தாள். இருவரும் இதைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டிருந்தார்கள். ஆனால் தெரிந்த மாதிரி காண்பித்துக் கொள்ளவில்லை.

பகல் உணவு முடிந்ததும்,கை கழுவிக்கொண்ட பின் ஆதித்யா,காசி நாதன்,காந்திமதி மட்டும் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தனர்.

தேன்மொழியை ரம்யா தனது அறைக்கு அழைத்து சென்றாள்.

No comments:

Post a Comment