Wednesday, February 14, 2024

வசந்த காலம் வருமோ?-103

 வசந்த காலம் வருமோ?-103

By N Krishnamurthy 

ட்ரெயின் வடகோவையை அடைந்ததும் கல்யாண கோஷ்டி மேலே இருந்த சாமான்களை இறக்கலானார்கள்.

போய்ச்சேரவேண்டிய நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்தாகவே ட்ரெயின் கோவையை அடைந்தது.

போர்ட்டர்களிடம் மல்லு கட்டி, சாமான்களை லோட் வண்டியில் ஏற்றினர். பத்மநாபனும், ஸ்ரீவத்சனும் சாமான்களை எண்ணி சரி பார்த்தனர்.

ஸ்டேஷனை விட்டு பின்புற வாசலுக்கு  வெளியே வந்தது கல்யாண கோஷ்டி.

சாஸ்திரிகள் கோஷ்டி (மொத்தம் ஆறு பேர்) வெளியில் சாப்பிட போவதில்லை என்பதால் அவர்கள் சாமான்களை கண்காணித்துக்கொள்வதாக ஏற்பாடானது.

ராஜேஸ்வரி வயதானவர்களை ஆட்டோவில் ஏற்றி, ஸ்டேஷன் முன்புறத்திற்கு எதிர் சந்திலிருந்த கீதா ஹோட்டலில் விடுமாறு கேட்டுக்கொண்டாள்.

மீதி உள்ளவர்கள் அனைவரையும் மார்கபந்து கீதா ஹோட்டலுக்கு வழி காட்டி அழைத்துச்சென்றார்.(மார்கபந்து கோவையில் டிகிரி படித்தவர்).

ஏற்கனவே ராஜேஸ்வரி கேட்டுக் கொண்டபடி அவர்கள் அனைவருக்கும் தனியிடத்தில் வாழை இலை போட்டு உணவு பறிமாறப்பட்டது. தும்பைப்பூ போன்ற சாதமும்( அன் லிமிடட்), குட மிளகாய் சாம்பாரும், தக்காளிக்காய் கூட்டும்,கோஸ் பட்டாணி கறியும், தக்காளி ரசமும், உளுந்து அப்பளமும் அமர்களமாக இருந்தன. தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள நெல்லிக்காய் ஊறுகாய் கிடைத்தது.

சாப்பிட்டு முடிந்ததும் சார்டட் ஆம்னி பஸ் ட்ரைவருக்கு ராஜேஸ்வரி போன் செய்தாள்."சொல்லுங்கம்மா" என்றார் ட்ரைவர்.

ராஜேஸ்வரி "பஸ் எங்க இருக்கு "என்றாள்.

"ஸ்டேஷனுக்கு பின்புறம் இருக்கேம்மா" என்றார் அவர்.

"பஸ் கண்டிஷன்ல இருக்குமா. ஏசி ஒழுங்கா வேல செய்யுமா",என்று கேட்டாள் ராஜேஸ்வரி.

"பஸ் பக்காவா இருக்கும்மா. ஏற்கனவே ஏசியை போட்டு வெச்சூட்டேன்" என்றார் ட்ரைவர் பாலு. 

மீண்டும் அனைவரும் ஸ்டேஷன் பின்புறம் சென்றனர். அங்கு பஸ் நின்று கொண்டிருந்தது. பஸ் ட்ரைவர் மற்றும் க்ளீனர் உதவியுடன் சாரங்கன், ரகு, ஸ்ரீவத்சன், சங்கர க்ருஷ்ணன், பத்மநாபன்,  மார்கபந்து ஆகியோர்  சில சாமான்களை பஸ்சில் மேலே போட்டு கட்டினர்.

மீதியை கடைசி சீட்டுகளின்மேல் வைத்தனர். சரியாக இரண்டு ஐம்பதுக்கு பஸ்  கிளம்பியது. பஸ் கிளம்பியதும் சக்ரவர்த்தி "வெங்கட்ரமண சுவாமிக்கு "என்றதும் அனைவரும் "ஜே"போட்டும், "கோவிந்தா,கோவிந்தா" என்றும் முழங்கினார்கள். மார்கபந்துவும், ராஜேஸ்வரியும் தங்கள் குல தெய்வமான மரகதவல்லி சமேத மார்கபந்தீஸ்வரரை மனதில் வேண்டிக்கொண்டார்கள்.

உக்கடம் பஸ் நிலையம்  தாண்டியதும் டீசல் ரொப்பிக்கொண்டார்  பாலு. பொள்ளாச்சி சாலையை இடப்புறம் ஒதுக்கிவிட்டு, குனியமுத்தூர் நோக்கி பஸ் விரைந்தது. ஈச்சனேரி வினாயகர் கோவிலில் வண்டி பத்து நிமிடம் நின்றது. அனைவரும் வினாயகரை வேண்டினர். மார்கபந்து கற்பூரம் காட்டி, சூரைத்தேங்காயை உடைத்தார். மதுக்கரை தாண்டியதும் வண்டி பாலக்காடு செல்லும் ஹைவேயில் ஒடத்தொடங்கியது.

உண்ட மயக்கத்தில் சிலர் உறங்க ஆரம்பித்தனர். பெண்கள் க்ரூப் க்ரூப்பாக பேச ஆரம்பித்தார்கள்.

வசுமதி,ம்ருதுளா,சங்கர க்ருஷ்ணன், ஸ்ரீவத்சன் ஆகியோர் அருகருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ம்ருதுளா மூன்று நாட்களுக்கு பிறகு திரும்பி இதே பஸ்ஸில் வரும்போது, தான் ம்ருதுளா சங்கர க்ருஷ்ணனாக இருப்போம் என்ற நினைத்தபோது அவள் நெஞ்சம் இனித்தது.

ராஜேஸ்வரி தனது தம்பி சந்தானத்தின் மனைவி மார்கரட்டிடம்(இவள் பிரிட்டனை சேர்ந்தவள்)

கல்யாண நிகழ்ச்சிகளை பற்றி விளக்கிக் கொண்டிருந்தாள்.

No comments:

Post a Comment