வசந்த காலம் வருமோ?-97
By N Krishnamurthy
சாரங்கன் வீட்டு வாசலில் முதல் நாள் இரவே மாக்கோலம் போட்டு சுற்றிலும் செம்மண் இட்டாள் ரங்கநாயகி.
நிச்சயதார்த்தம் ஹாலில் நடக்கப்போவதாக இருந்ததால்,ஹாலில் இருந்த சோபாவை முன்புறம் இருந்த வராண்டாவிற்கு சாரங்கனும், பத்மநாபனும் மாற்றினார்கள்.
அடுத்த தெருவிலிருக்கும் பர்னிசர் வாடகை கடையில் பத்து ஸ்டீல் மடக்கு நாற்காலிகளை வாடகைக்கு எடுத்து ஹாலில் வைத்திருந்தனர்.
நிச்சயதார்த்தன்று காலை ஏழு மணிக்கு மார்கபந்து, சபேசஐயர், ராஜேஸ்வரி, சங்கர க்ருஷ்ணன், மரகதம் ஆகியோர் சாரங்கன் வீட்டிற்கு வேனில் வந்து இறங்கினார்கள். அவர்களை சாரங்கனும், மைதிலியும் வரவேற்றார்கள். தனது தந்தையையும், மாமியாரையும் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் ராஜேஸ்வரி.
சக்ரவர்த்தி அவர்களை பார்த்து " நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்" என்றார்.சக்ரவர்த்தியும், சபேச ஐயரும் பேச ஆரம்பித்தார்கள்.
எல்லோருக்கும் வசுமதி காபி கலந்து கொடுத்தாள்.
பத்மநாபன் கேட்டுக்கொண்டபடி எட்டு மணிக்கு ஜோடி பருப்பு தேங்காயை ஆட்டோவில் அனுப்பியிருந்தாள் மாம்பலம் மாமி.
சுப்பு லக்ஷ்மியின் அத்திம்பேர் வீட்டிற்கு வழக்கமாக வரும் சாஸ்திரிகளை சுப்பு லக்ஷ்மி ராஜேஸ்வரிக்கு ஏற்பாடு செய்திருந்தாள். சுப்பு லக்ஷ்மி,கண்ணன், ராதிகா மற்றும் வைத்யநாத சாஸ்திரிகள் வந்து சேர்ந்தார்கள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அடையாரிலிருந்து ராமகிருஷ்ணன் தம்பதிகள் வந்து சேர்ந்தனர்.
டேப் ரெகார்டரை ஆன் செய்து வேதாரண்யம் வேதமூர்த்தியின் நாதஸ்வர இசை டேப்பை போட்டு,மங்கள இசையை பாடவிட்டான் ஸ்ரீவத்சன். முதல் பாட்டாக தீக்ஷதரின் பேகடா ராக உருப்படியான "வல்லப நாயகஸ்ய"வை வேதாரண்யம் வேதமூர்த்தி இசைக்க ஆரம்பித்தார்.
ஹாலில் மூன்று பட்டுப்பாயும், இரண்டு பெரிய ஈரோடு ஜமக்காளமும் விரிக்கப்பட்டன
அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் சாரங்கன் வீட்டு வாத்யார் கருணாகர அய்யங்கார் ஆஜரானார். அவரும் வைத்யநாத சாஸ்திரிகளும் அன்று நடக்க வேண்டியவைகளை பற்றி பேசி முடிவெடுத்தனர். இரண்டு வாத்யர்களும் அமர , அவர்களை சுற்றிலும் பெரியவர்கள் அமர்ந்தனர். மைதிலி,ராஜேஸ்வரி,ரங்க நாயகி,வசுமதி,ம்ருதுளா ஆகியோர் ஹாலில் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தனர்.
கருணாகர அய்யங்கார் "பையனோட தோப்பனார் எங்க"என்று கேட்டதும் மார்கபந்து "தோ,இருக்கேன் மாமா" என்றார். கருணாகர அய்யங்கார் அவரை பார்த்து ",கல்யாண பண்ண எந்த மாசம் சௌகர்யபடும்னு ரெண்டு வீட்டாரும் சேர்ந்து முடிவு பண்ணா அதை வெச்சிண்டு அந்த மாசத்ல முஹுர்த்த நாளை பாக்கலாம்"என்றார்.
இதற்கு பத்மநாபன் "எங்கள பொறுத்தவரை சுபஸ்ய சீக்ரம்ன்ற மாதிரி, எவ்வளவு சீக்ரம் முஹுர்தத்தை வெச்சிக்கலாமோ அவ்வளவு சீக்ரம் வெச்சகலாம்னு அவிப்ராய படறோம். மார்கபந்து சார் .நீங்கதான் உங்க சௌகர்யத்தை அனுசரிச்சு உங்க முடிவை சொல்லணம் "என்றார்.
மார்கபந்து ராஜேஸ்வரியை திரும்பிப் பார்க்க, ராஜேஸ்வரி" இவருக்கு மார்ச் மாசத்தோடு ஜாப் முடியறது. இப்ப ஊருக்கு போன உடனே ஆபீஸ்ல சொல்லிட்டமானா அவா இவர மார்ச் 31ம்தேதி ரிலீவ் பண்ணிடுவா. ஏப்ரல் பிகினிங்ல சங்கர கிருஷ்ணனுக்கு ஃபைனல் எக்ஸாம் முடிஞ்சுடறது. பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சுண்டு நாங்க ஏப்ரல் 20 தேதிக்கு இந்தியா வந்துடு வோம். அதனால மே 15 தேதிக்கு அப்புறம் கல்யாணம் வெச்சிண்டா சௌகர்யமா இருக்கும். ஏப்ரல் 20 ஆம் தேதியிலிருந்து மே 15 ஆம் தேதி வரைக்கும் எங்களுக்கு பர்சேஸ் பண்ண டைம் கிடைக்கும்" என்று கூறினாள்.
இதை கேட்ட கருணாகர சுவாமிகள் பஞ்சாங்கத்தை எடுத்து பார்க்க ஆரம்பித்தவர் " மே 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒன்பது பத்தரை, அமிர்த யோகம், நண்ணா இருக்கு. அன்னிக்கு வெச்சுக்கலாமா? பொம் னாட்டிகள் அவா சௌகர்யத்தையும் பாத்து சொல்லணும்" என்றார். ஐந்து நிமிடம் எடுத்துக்கொண்டு சாரங்கன் மைதிலி, மற்றும் ம்ருதுளாவிடம் பேசிவிட்டு திரும்பி வந்து "எங்களுக்கு அந்த தேதி சரியா இருக்கு மாமா" என்றார். ராஜேஸ்வரியும் அந்த தேதியை ஆமோதித்தாள். கருணாகரன் வைத்ய நாத சாஸ்திரிகளை பார்த்து " ஹரிஹி. நீங்களும் சித்த பார்த்துடறேளா " என்று பஞ்சாங்கத்தை அவரிடம் கொடுத்தார் . அதைக் கேட்ட வைத்தியநாத சாஸ்திரிகள் " தேவரீர் பார்த்தா சரி. அப்புறம் நான் எதுக்கு பாக்கணம்" என்று கூறினார் . " அப்போ மே மாதம் 27 ஆம் தேதி முஹுர்தத்தை வச்சுக்கலாம்" என்று கூறினார் கருணாகர சுவாமிகள். இதைக்கேட்ட ராஜேஸ்வரியின் கண்கள் பளிச்சிட்டன.
No comments:
Post a Comment