Monday, February 19, 2024

முற்பகல் செயின்.. 43

 முற்பகல் செயின்.. 43

By N Krishnamurthy 

தேன்மொழி நமச்சிவாயத்தை பார்த்து "என்ன தாத்தா. நீங்க என்ன தேடி வந்து இருக்கீங்க" என்று கேட்டாள்.

அதற்கு நமச்சிவாயம் "என்னம்மா செய்வது. சில சமயம் சிறியவர்களை தேடி பெரிவர்கள் வர வேண்டி இருக்கிறது" என்று கூறினார்.

தேன்மொழி இதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டாள்.பின்பு மௌனமாக இருந்தாள். நமச்சிவாயம் அவளிடம் "நான் ஒரு சில விஷயங்களைப் பற்றி உன்னிடம் பேச வேண்டும் என்று தான் வந்திருக்கிறேன்" என்று கூறினார்.

தேன்மொழி கலக்கமடைந்தாள். "ஒரு வேளை ஆதித்யா தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால், ஆதித்யா அதை  தன்னிடம் சொல்லமுடியாமல் இவர் வழியாக சொல்லச்சொல்லி இருக்கிறானோ "என்று நினைத்துக் கொண்டாள். இதை புரிந்து கொண்ட நமச்சிவாயம், அனுமன் "கண்டேன் சீதையை" என்று சொன்னபடி, முதலிலேயே "தேன்மொழி நீ தான் எங்க வீட்டு மருமகள். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது" என்று கூறினார். பின்னர் அவர் அவளிடம் "ஆதித்யா எதையோ விளையாட்டாக கூறப்போக, அதை நீ உண்மை என்று நினைத்து கோபத்தில் இருக்கிறாய் . ஆதித்யா பலமுறை உன்னிடம் பேச முயன்ற போது கூட நீ அவனிடம் பேசவில்லையாம். அவன் மிக மன உளைச்சலில் இருக்கிறான். நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது. நான் வேண்டுமானால் ஆதித்யா  உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வான் என்று ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க சொல்கிறேன். போதுமா"என்று கேட்டார். இதைக் கேட்ட தேன்மொழிக்கு சிரிப்பு வந்தது. இந்த சமயம் பார்த்து அங்கே வந்த ஆதித்யா ஒன்றும் தெரியாத மாதிரி "என்ன தாத்தா நீங்க இங்க"என்றான். உடனே தேன்மொழி" இது தாத்தாவும், பேரனும் சேர்ந்த போடற நாடகம் என்று  தெரியாத அளவுக்கு நான் ஒண்ணும் மக்கு இல்லை" என்று அவனிடம் கூறி புன்னகைத்தாள். "அப்பாடா. ஒரு வழியா தேன்மொழி என்னிடம் பேசி விட்டாள் " என்றான் ஆதித்யா.

நமச்சிவாயம் தேன்மொழியிடம் "உன் ஆபீஸ் டயத்தை நான் அதிகமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை அம்மா. நாளை காலை, முதல் வேலையாக, எங்க வீட்டுக்கு வந்து வந்துவிடு"என்றார். தேன்மொழி "நாளைக்கு எனக்கு வேலை இருக்கிறது தாத்தா. துணிகளை எல்லாம் துவைக்க வேண்டும்" என்றாள் . அதற்கு நமச்சிவாயம் "நீ நாளைக்கு வரவில்லை என்றால் கோமதி உன் ஹாஸ்டலுக்கு வந்து விடுவாள் "என்று கூறினார். இதைக் கேட்ட தேன்மொழி பயந்த மாதிரி நடித்து "தாத்தா , அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள். நானே வந்து விடுகிறேன்" என்றாள். பின்பு நமச்சிவாயம் அவளிடம் "காலை காபிக்கே வந்து விடம்மா" என்றார்.

' சரி தாத்தா' என்று கூறினாள்  தேன்மொழி. அவளிடம் ஆதித்யா "நான் இரண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டு இருக்கேன். தாத்தாவுடன் கிளம்பி கொஞ்சம் வெளியில் போய்விட்டு அப்படியே வீட்டுக்கு போய் விடுவேன். நாளைக்கு நீ காலையில் வரவில்லை என்றால் நானே பாட்டியை அழைத்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு வந்து விடுவேன்" என்று கூறினான். அதற்கு தேன்மொழி   "அப்படிப்பட்ட ஒரு அவசியம் இருக்காது" என்று கூறி ஆபீஸின் உள்ளே சென்றாள்.

இதற்குப் பிறகு ஆதித்யா நமச்சிவாயத்திடம் "ரொம்ப தேங்க்ஸ் தாத்தா" என்றான் . அதற்கு நமச்சிவாயம் "எவ்வளவு பெரிய காரியம் பண்ணி இருக்கேன். இதை ஒரு தேங்க்ஸோட விட்டுட்ட. ஸ்வீட்டு கிடையாதா" என்று கேட்டார்.

"நிச்சயம் உண்டு தாத்தா" என்று சொல்லி, அவரை வண்டியில் ஏற்றிக்கொண்ட ஆதித்யா போகிற வழியில் இருந்த ஒரு ரெஸ்டாரண்டில் நுழைந்து அவருடன் சேர்ந்து ரசமலாய் சாப்பிட்ட பின்னர், கோமதிக்கும்,மறுநாள் வரப்போகிற தேன்மொழிக்கும் சேர்த்து ரசமலாயை வாங்கிக்கொள்ள , இருவரும் வீடு திரும்பினார்கள். ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த கோமதி "என்ன ஆதித்யா காரியம் பழமா ?" என்று கேட்டாள். அதற்கு ஆதித்யா சிரித்துக்கொண்டே "கிழம்  போனா காரியம் பழம் இல்லாமல் இருக்குமா" என்றான்.

No comments:

Post a Comment