Wednesday, February 28, 2024

நவ பிருந்தாவனம் - 4

 நவ பிருந்தாவனம் - 4👇

By Ramesh 

சற்றே புராணம் நோக்கி செல்வோமா ???

பிரம்மாவின் அவையில் அங்கம் வகித்தர்களுள் ஒருவர் சங்குகர்ண தேவதை. இவர் ஸ்ரீமந் நாராயணனின் அர்ச்சனைக்காகவும்,அலங்காரத்திற்க் காகவும் நாள் தோறும் வாசனை மிகுந்த பல விதமான மலர்களை கொண்டு வரும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தார். 

இதற்காக இவர் பிரம்ம லோகத் திலிருந்து பூலோகம் வருவது வழக்கம். இப்படி அவர் வரும் போது அவரை கவர்ந்த ஒரு சில இடங்களில் அப்படியே லயித்து விடுவார். 

இவ்வாறு ஒரு சமயம் காலம் போவது தெரியாமல் காலம் தாழ்த்தி பூக்களை கொண்டு சென்றார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன் பூலோகத்தில் மனம் லயித்து நின்ற நீ அந்த பூலோகத்தில் பிறவியெடுக்கக் கடவாய் அதுவும் அரக்கர் கூட்டத்தில் பிறக்கக் கடவாய் என்று சாபம் தந்தார். 

இவ்வாறு பிரம்ம தேவரின் சாபம் பெற்ற சங்கு கர்ண தேவதை, பிரம்ம தேவனை நோக்கி கடும் தவம் செய்து தன்னை யாராலும் அழியாதபடிக்கு பலமான வரத்தை வாங்கிக்கொண்டு தேவர்கள் உட்பட்ட அனைவரையும் துன்புறுத்தி வந்த ஹிரண்யகசிபுவின் மனைவி லீலா வதியின் கர்பத்தில் ஸ்ரீ பிரஹலாதராக ஜனித்தார், 

இவருக்காக ஸ்ரீஹரி ந்ருஸிம் ஹராக அந்தியம் போதில் அரியுருவாய் அவதரித்து அவனது மார்பை தனது வள்ளுகிரால் கீறி ஹிரண்யகசிபுவை அழித்தார். 

தன் தந்தை கொல்லப்பட தானே காரணமாக இருந்ததை எண்ணி வேதனைப்பட்ட பிரஹலாதர் ஸ்ரீந்ருஸிம்ஹரை வேண்ட அவரும் மனத்தை ஒரு நிலைப் படுத்தும் யோகத்தை, யோகானந்த ந்ருஸிம்ஹராகி போதித்து தன் வக்ஷத்தலத்தி லிருந்து சாலக் ராமத்தை எடுத்துத் தந்து “புண்ய க்ஷேத்ரங்களுக்கும், புனித தீர்த்தங் களுக்கும் சென்று பூஜை தவம் செய்ய தந்தை மாண்டதற்குக் காரணமான பாவம் விலகும், மனதும் சாந்தமடையும் என்று அருளினார்.

தங்கத்தேரில் பிரஹலாதன் அந்த சாலக் ராமத்தை எடுத்து கொண்டு வந்து கிருத யுகத்தில் பிரஹலாதர் தவம் செய்த இடம்தான் இந்த நவ பிருந்தாவனப் பகுதி.

 இந்த சங்குகர்ண தேவதையே பின் வரும் பிறவிகளில்   ஸ்ரீவியாஸ ராஜ ராகவும், ஸ்ரீராகவேந்திரராகவும் அவதாரம் செய்து நவ பிருந்தாவனப் பகுதியை புனிதப் படுத்தியுள்ளனர்.

 இங்கு தவம் செய்த போது அவரது மனதில் சாந்தம் பொங்கியது பாபம் விலகியது. இதனால்தான் இன்றும் நவ பிருந்தாவனத்திற்கு செல்பவர்களின் மனதில் உள்ள கவலைகள் விலகும், முன் ஜென்ம வினை தீர்கின்றது.

கிஷ்கிந்தா மலைத்தொடர்

நவ பிருந்தாவனம் இராமருடனும் தொடர்புடையது. இராமசந்திர பிரபு சிற்றன்னை சொல் கேட்டு வனவாசம் வந்த காலத்தில் சீதையை பிரிந்த பின்பு கிஷ்கிந்தை நோக்கி வருகிறார் வந்த காகுத்தன் சொல்லின் செல்வனாம் ஹனுமனின் மூலம் வானர அரசன் சுக்ரீவனுடன் நட்புக்கொண்டு வாலியை வதம் செய்கிறான் 

பின்பு சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகின்றது பதவியின் மோகத்தில் சுக்ரீவன் ராமனிடம் கொடுத்த வார்த்தையை மறக்கின்றான் பின்பு லக்ஷ்மணனின் கோபம் கண்டு தன் பரிவாரங்களை எட்டு திக்கும் அனுப்புகின்றான் இவை நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான், 

இவ்வாறு வன வாசத்தில் இருந்த இராமபிரான் நாடுகளின் எல்லையில் வசிக்க வேண்டுமே தவிர நாடுகளின் உள்ளே பிரவேசிக்க கூடாது என்பது நியமம் அதன் பிரகாரம் ராமன் கிஷ் கிந்தைக்கு வெளியே ஒரு குகையில் வாழுகின்றான் 

 வானரங்களின் வாழ்விடம் என்பதால் தன் சந்தியாவந்தன சமயத்தில் அந்த குகையின் அருகில் இருக்கும் துங்கபத்ரா நதியின் நடுவில் தீவு போன்ற அந்த பகுதிக்கு சென்று சூரிய பகவானை வழிபடுவது வழக்கம்.

ராமசந்திர பிரபு கண்டேன் சீதையை என்று காகுத்தனிடம் சுந்தரன் அனுமன்* கூறிய இடம்தான் அக்கால கிஷ் கிந்தை இன்றைய ஆனேகுந்தி ஹம்பி பகுதி.

 இவ்வாறு இராம பிரானாலும், இளைய பெருமாளாலும் , வாயு புத்ரன் அனுமனாலும் புனிதப்பட்ட அந்த புண்ணிய பூமியில் தான் பின்னர் பக்த பிரகலாதன் ஸ்ரீமந் நாராயணை நினைத்து தவம் இயற்றினார்

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த புண்ணிய பூமி என்பதால்தான் பிருந்தாவனத்தில் அமர்ந்தனர் புனித மத்வாசாரிய மகான்கள். 

 நவபிருந்தா வனங்களில் நடு நாயகமாக அமைந்துள்ள வியாஸராஜரின் பிருந்தாவனம் பிரஹலாதர் தவம் செய்த அதே இடமாகும் .

இனி அடுத்த பதிவில் இந்த நவ பிருந்தாவனம் அமைந்துள்ள துங்கபத்ரா நதியின் சிறப்பை பற்றி சொல்கிறேன்.

மேலும் சொல்கிறேன்.....

No comments:

Post a Comment