Wednesday, February 21, 2024

வசந்த காலம் வருமோ?- 112

 வசந்த காலம் வருமோ?- 112

By N Krishnamurthy 

மணமக்களுக்கு மிகவும் கிட்டின சொந்தங்கள் மேடையின்மேல் குழுமினர்.

தாலி கட்டும் முன் சங்கர க்ருஷ்ணன் மஞ்சள் சரட்டில் சேர்த்த திருமாங்கல்யத்தை, வெள்ளி பிளேட் மீது வைத்து,வாத்தியார் சொல்லும் மந்திரத்தை சொல்லி பூஜை செய்தான். பின்பு வாத்தியார் சொன்ன மந்திரங்களை சொல்லி ம்ருதுளாவின் கழுத்தில், திருமாங்கல்யத்தை கட்டினான் சங்கர க்ருஷ்ணன். நாதஸ்வரம்கெட்டி மேளத்துடன் உரக்க ஒலித்தது. அவன், அவள்  கழுத்தில் இரண்டு முடிச்சு போட, மற்றொரு முடிச்சை சங்கர க்ருஷ்ணனின் சகோதரியாக  வந்தனா போட்டாள். சாரங்கன், மைதிலி கையில் நீரை ஊற்ற, ம்ருதுளாவின் கையைப் பிடித்து சங்கர க்ருஷ்ணன் கையில் கொடுத்து பாணிகிரகணம் செய்தார். நாதஸ்வரம் ஆனந்தம், ஆனந்தமே என்று சந்தோஷத்தோடு ஒலித்தது.

சங்கர க்ருஷ்ணன் ம்ருதுளாவிற்கு தாலி அணிவித்து, அவளை சட்டபூர்வமாகவும், மனப்பூர்வமாகவும் மனைவியாக ஏற்றுக் கொண்டான்.

மேடையில் மேலிருந்த  எல்லோரும் புது மண தம்பதிகள்  மேல்  அக்ஷதையையும், பூவையும் தூவினார்கள்.

மேடையின் கீழே உள்ளவர்கள், மேடைக்கு வெகு அருகில் வந்து நின்று கொண்டு, அவர்கள் மேல் அக்ஷதையையும், பூவையும் தூவினார்கள்.

(நமது வாசகர்களுக்கு E புஷ்பமும்,E அக்ஷதையையும் அனுப்பி உள்ளேன். சுமார் பத்து மணிக்கு அவற்றை ம்ருதுளா,சங்கர க்ருஷ்ணன் மீது மானசீகமாக தூவவும்).

ராஜேஸ்வரி தன் முதுகின் மேல் இவ்வளவு நாள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த பெரிய பாரம் இறக்கி வைக்கப்பட்டதாக உணர்ந்தாள்.

ம்ருதுளா தன் மனோரதம் நிறைவேறியது கண்டு மனம் மகிழ்ந்தாள்.சங்கர க்ருஷ்ணன் அடைந்த சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை.

இதன்பிறகு ருக்மணி ராஜேஸ்வரியை பார்த்து "என்னம்மா மாட்டு பெண் வந்தாளா" என்று கேட்டாள். கண்களில் நீர் துளிக்க ராஜேஸ்வரி, அவள் கைகளை பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டு, "ஆமாம். மாமி மாட்டுப்பொண் வந்தூட்டா.இனி நேக்கு கவலையே இல்லை" என்று கூறினாள். இதே போல மைதிலியை பார்த்து ரங்கநாயகி மற்றும் பலர் "என்ன மாப்பிள்ளை வந்தாச்சா" என்று கேட்டார்கள்.

மார்கபந்துவை பார்த்து கண்ணன்,ஸ்ரீ வத்சன் மற்றும் பலர் "என்ன மாமா, மாட்டுப்பொண்  வந்து சேர்ந்தாளா" என்று கேட்டார்கள்.

இதே போன்று சிலர் உறவுகளை சொல்லி சொல்லிராஜேஸ்வரி,மார்கபந்து,சாரங்கன்,மைதிலியை  விஜாரித்துத்துக் கொண்டிருந்தார்கள்.

பெண்ணுக்கு திருமணம் முடிந்த சந்தோஷம் இருந்தாலும், இனி ம்ருதுளா வேறு  ஒரு வீட்டிற்கு வாழ சென்று விடுவாள் என்று நினைத்த சாரங்கனும்,மைதிலியும் அவர்களை அறியாமலே  கண்ணீர் விட்டார்கள்.பெண்ணை பெற்றவர்கள் பெண் கழுத்தில் தாலி ஏறும் வரை "எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே "என்று இயந்திர கதியில் இயங்குகிறார்கள்.

பெண் கழுத்தில் தாலி ஏறிய பின்தான், இவ்வளவு காலம் தன்னுடனே இருந்த தன் செல்ல மகள்  தன்னை விட்டு வேறொரு வீட்டிற்கு சென்று வாழ்நாள் பூராவும் அங்கேயே இருப்பாள் என்ற உணர்வு வரும் போது தான் துக்கம் தொண்டையை  அடைக்கும். இதனால் கண்ணில் நீர் வரும். ஒழுங்காக கல்யாணம் முடிந்ததால் சந்தோஷம் வரும். கண்ணதாசன் எழுதியபடி இவர்கள் "சிரித்துக்கொண்டே அழுகின்றார்". 

இதில் பெண்ணின் தந்தைக்கு தான் தர்ம சங்கடம். ஆண் அழக்கூடாது என்ற பொது விதியால் அவன் அழவும் கூடாது. அழாமலும் இருக்கமுடியாது.

மாங்கல்யதாரணம்  ஆனதும் சாரங்கனும், மைதிலியும்  வந்தனாவுக்கு, புடவை, ரவிக்கை, வெற்றிலை, பாக்கு, பூ, பழம் ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்து 500 ரூபாய் பணத்தையும் வைத்து, மரியாதை செய்தார்கள்.

வைத்யநாத சாஸ்திரிகள் மைக்கில்"தயவு பண்ணி புது தம்பதிகளின்  கையை பிடித்து குலுக்க யாரும் இப்போது வரவேண்டாம். சப்தபதி முடிந்ததும் நானே அனவுன்ஸ் பண்றேன்.அப்போ வரலாம் "என்றார்.

பெண்ணிற்கு மாமி இல்லாததால், வசுமதி  ம்ருதுளாவின் இரண்டு கால்களிலும், கட்டை விரலுக்கு அடுத்த விரலில் வெள்ளியால் செய்த மெட்டியை போட்டாள்.

இந்து சம்பிரதாயத்தில் ஒரு பெண் திருமணம் ஆனவள் என்று உலகத்திற்கு அறிவிப்பதற்கு கழுத்தில் தாலி, காலில் மெட்டி ,நெற்றியின் உச்சியில் குங்குமப் பொட்டு ஆகியவைகளே  அடையாளங்கள் ஆகும்.

இப்பொழுது உள்ள இளம் கல்யாணமான பெண்கள் இவற்றில் எந்த அடையாளத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

இதன் பிறகு சப்தபதி ஆரம்பித்தது. இது ஒரு முக்கியமானதும், விசேஷமானதுமான சடங்கு ஆகும்.இதன் முழு விவரத்தையும் இங்கே என்னால் விவரிக்கவே முடியவில்லை.

சங்கரக க்ருஷ்ணன் ம்ருதுளாவின் கைகளை தனது இடது கையால் பிடித்துக் கொண்டு அவள் வலது காலை சற்று தூக்கி, ஒவ்வொரு அடியாக , 7 அடி முன்னால் நகர்த்தி கொண்டே சென்றான். இதற்காக அர்த்தமுள்ள பல மந்திரங்களை சாஸ்திரிகள்  சொல்லிக் கொண்டிருந்தார். சிலர் இந்த சப்தபதியைத்தான் இந்துக்கள்  கல்யாண சடங்கின் முக்கியமான சட்டபூர்வமான ஆதாரம் என்று கூறுகிறார்கள்.

சப்தபதி முடிந்த உடன் ம்ருதுளாவும் சங்கர க்ருஷ்ணனும் தம்பதிகளாக அக்கினி பகவானை வலம் வந்தார்கள். ஹோம குண்டத்தின் முன் உட்கார்ந்து ஹோமத்தில் நெய்யை விட்டு, சாஸ்திரிகள் சொல்ல சொல்ல மந்திரங்களை கூறினான் சங்கர க்ருஷ்ணன். ஹோமத்தின் மூலம் பல தேவர்களையும், தேவியர்களையும்  திருப்தி செய்து அவர்கள் ஆசீர்வாதத்தை தம்பதிகள் இதன் மூலம் பெறுகிறார்கள்.

இதனை அடுத்து சங்கர க்ருஷ்ணன் ம்ருதுளாவின் கைகளை தனது இடது கையால் பிடித்துக் கொண்டு , ஹோம குண்டத்திற்கு மேற்குப் பக்கத்தில், ஏற்கனவே கோலம் போட்டு இருந்த, அம்மியின் மேல், தனது கையினால் அவளது வலது கால் கட்டை விரலை வைத்து,வாத்தியார் சொன்ன  மந்திரத்தை  சொன்னான். இதன்பிறகு வாத்தியார் சொன்னபடி இருவரும் மண்டபத்தின் வெளியே வந்து ஆகாயத்தில் இருந்த அருந்ததி நக்ஷதிரத்தை  பார்த்தார்கள் . பகல் வேளையா இருந்ததால் நக்ஷத்ரம் தெரிவதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும் ம்ருதுளா அதை பார்த்தேன் என்று சாஸ்திரிகள் சொன்னபடி கூறினாள். உத்தமி அருந்ததியை  போல கற்புடனும், கணவனிடம் மரியாதை, மனோபலம் ,தெய்வ பலம் பெற்று கல் போல திடனமான, அசைக்க முடியாத மனத்துடன்  மணவாழ்வு வாழ வேண்டும் என்ற மந்திரங்களை மணமக்கள் இருவரும் சொன்னார்கள்.

No comments:

Post a Comment