Thursday, February 1, 2024

முற்பகல் செயின்.. 25

 முற்பகல் செயின்.. 25

By N Krishnamurthy 

அடுத்த வியாழக்கிழமை இரவு கடையநல்லூர் செல்வதற்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி கம்பார்ட்மெண்டில் மூன்று பர்த்துகளை புக் செய்தான் ஆதித்யா. அது முடிந்த கையோடு, திரும்பி வருவதற்கு அதே ட்ரெயினில் ஞாயிற்றுக்கிழமை இரவுக்கு  மூன்று பர்த்களை புக் செய்தான் .

புதன்கிழமை காலை அவன் பாட்டியிடம்          " பாட்டி, இன்னிக்கு  சாயங்காலம்  வர  கொஞ்சம் லேட் ஆகும்" என்று கூறினான். உடனடியாக கோமதி "  என்னப்பா தேன்மொழியை ரயில் ஏத்திட்டு வர போறியா" என்று கேட்டாள். ஆதித்யா சிரித்துக் கொண்டே"  எப்படி பாட்டி இவ்ளோ ஷார்ப்பா திங் பண்ற"என்றான். அதற்கு கோமதி சிரித்துக் கொண்டே

 "ஒருவேளை நான்  உன்னை கொண்டு வந்தூட்டேனோ, என்னமோ" என்றாள்.

மறுநாள் வியாழனன்று ஆதித்யா அரைநாள் லீவ் போட்டுவிட்டு வீட்டிற்கு ஒரு மணிக்கு வந்து சேர்ந்தான். வந்தவுடன் கடையநல்லூர் போவதற்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் இரண்டு சூட்கேசுகளில் திணித்தான். பொதிகை எக்ஸ்பிரஸ் கிளம்புவதற்கு ஒண்ணே  கால் மணி நேரம் முன்பு ஒரு டாக்ஸியை வரச் சொல்லி இருந்தான். கோமதி,

நமச்சிவாயம் மற்றும் ஆதித்யா எக்மோர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தபோது பிளாட்பாரத்தில் ட்ரெயின் நின்று கொண்டு இருந்தது.

ரயிலில் சரியான கம்பார்ட்மெண்ட்டில் ஏறி அவரவர்கள் பர்த்தில் அமர்ந்து கொண்டார்கள். இரவு சாப்பிட  கோமதி  மிளகாய் பொடி தடவிய இட்லியை கொண்டு வந்திருந்தாள். வண்டி செங்கல்பட்டை தாண்டியதும் மூவரும் இட்லியை  உண்டார்கள். ஆதித்யா  இருவருக்கும் உண்டான படுக்கையை தயார் செய்துவிட்டு, அப்பர் பர்த்திலுள்ள தனது படுக்கைக்கு தாவினான். இரவு நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஆதித்யா திடீரென்று யாரோ விளக்கை போட முயற்சி செய்வதை தெரிந்து கண் முழித்து  பார்த்தபோது, கோமதி விளக்குக்குண்டான   ஸ்விச் எங்கு இருக்கிறது என்று தேடிக் கொண்டிருப்பதை பார்த்தான். "  என்ன பாட்டி. பாத்ரூம் போணமா" என்று கேட்டான் ."ஆமாம்ப்பா. நீ எழுந்துட்டியா . உன்ன எழுப்ப வேண்டாம் என்று பார்த்தேன்" என்றாள் கோமதி. " அதனால என்ன  பாட்டி. என்ன கூப்பிட்டு இருக்கலாமே"  என்று சொன்ன ஆதித்யா அவளை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் பாத்ரூமில் விட்டுவிட்டு, திருப்பி அழைத்துக் கொண்டு வந்தான்.

காலை 7 மணிக்கு ரயில் கடையநல்லூர் சென்றடைந்தது.  இறங்கியவுடன் அங்கு தேன்மொழியும், வேறொரு  ஆண் பிள்ளையும் இருப்பதை பார்த்த ஆதித்யா, அநேகமாக  அவன்தான் தேன்மொழியின்  அண்ணன் சந்திர சேகரனாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். தேன்மொழி அருகில் இருந்தவனை காண்பித்து " என் அண்ணா சந்திர சேகரன்" என்று கூறி அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள். பின்பு வெளியில் நின்று கொண்டிருந்த இரண்டு ஆட்டோக்களில் அவர்கள் ஏறிக்கொண்டு தேன் மொழியின் வீட்டை அடைந்தார்கள்.

No comments:

Post a Comment