Wednesday, February 14, 2024

முற்பகல் செயின்..38

 முற்பகல் செயின்..38

By N Krishnamurthy 

ஞாயிறு காலை ஏழரை மணிக்கு வள்ளிநாயகம் வேனை ஒட்டிக்கொண்டு வந்து சுப்ரமண்யபிள்ளையின் வீட்டின் முன் நிறுத்தினார். வேனிலிருந்து அவர் மBனைவி வானதியும், நான்கு வயது மகள் வினோதினியும் இறங்கி வீட்டினுள்ளே சென்றனர். வினோதினியை பார்த்த பொற்கொடி அவளை கட்டிக்கொண்டாள். பரம கல்யாணி அவர்களை வரவேற்றாள். உடை உடுத்திய பின் அறையிலிருந்து வெளிவந்த தேன்மொழி, வானதியை பார்த்து "வாங்க அண்ணி.சுகமா இருக்கேங்களா"என்றவள்,வினோதினியை பார்த்து "வினு குட்டி.எப்படிடா இருக்கே"என்றாள்.

வினோதினி முகத்தில் பொய்க்கோபம் காட்டி"நீங்க எங்க வீட்டுக்கு வரதே இல்லை.நான் உங்க கூட பேசமாட்டேன்" என்றாள். "ஆனா தோ இப்ப பேசீட்டயே"என்ற தேன்மொழி அவளை வாரி அணைத்து முத்தம் கொடுக்க, அவள் தேன்மொழியிடம் ஒட்டிக்கொண்டாள்.

ஆதித்யாவை வானதிக்கு அறிமுகப்படுத்தினான் சந்திரசேகர்.

தேன்மொழியிடம் வானதி ரகசியமாக "ஜோடிப்பொருத்தம் சூப்பர்" என்றவள் "கல்யாணம் எப்போ "என்றாள்.

"குறைந்தது ஆறு மாசமாவது ஆகும்னு நெனைக்கறன்" என்றாள் தேன்மொழி.

மதிய சாப்பாட்டு அய்டங்களை எடுத்துக்கொண்டு அனைவரும் வேனில் ஏறினர்.

கடைய நல்லூரிலிருந்து வடகரை வழியாக, அணையின் பதினாறு கிலோ மீட்டர் தூரத்தை அடைய வேனுக்கு  முப்பது நிமிடம் ஆனது.

இயற்கையின் அழகையும், நீரின் குளிச்சியையும், இதமான வெயிலையும், உடலை வருடிச்செல்லும் சுகமான காற்றையும் அனுபவித்து கொண்டு அனைவரும் நடந்தனர்.

அகன்று விரிந்த பெரிய ஸ்லோப்பில் தண்ணீர் பீறீப்பாய்ந்து விழும் அழகு கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

அருகிலிருந்த சிறுவர் பூங்காவில் சிறிது நேரம் செலவிட்டனர். இருபது வருடங்களுக்கு பிறகு,திருமணமாகி,இதே அணைக்கட்டிற்கு தங்களது முதல் குழந்தையுடன் வருவோம் என்று அறியாமல், ஏழு வயது அருள் மொழியும்,நான்கு வயதான வினோதினியிம் கண்ணாம்பூச்சி ஆட்டம்  ஆடினர்.

வெளியில் வந்து தரையில்  அமர்ந்து வானதி கொண்டு வந்திருந்த இட்லியை ருசி பார்த்தனர்.

மருந்துக்கும் கூட பூண்டே  சேர்க்காமல் தேங்காய் சட்னியை இவ்வளவு ருசியாக செய்ய முடியும் என்ற உண்மை ஆதித்யாவை ஆச்சரியப்படுத்தியது.

வானதியிடம் இதை பாராட்டி அவன் சில வார்த்தைகள் சொல்ல, அதற்கு வானதி அவனிடம்"தேன் மொழி இதை விட நல்லா சமைப்பா"என்றாள்.

இதை கேட்ட ஆதித்யா "அதையும் பாக்கத்தானே போறேன்"என்றான்.

இயற்கை வனப்பில் தன்னை மறந்த தேன் மொழி,தனது மெல்லிய குரலில்,

 மகா கவியின்

"வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,
இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.
மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்"
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,

என்று பாடி முடிக்கும் போது அவள் கண்களில் உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் எட்டிப்பார்த்தது. இதை வெகுவாக கேட்டு ரசித்த ஆதித்யா "சரி.நம்மைப்போல இவளும் சரியான பாரதி பைத்யம்தான் "என்று நினைத்து புளகாங்கிதம் அடைந்தான்.

அப்போது சந்திர சேகர் அவர்களிடம் "இந்த அணைக்கட்டு பகுதியில் சிறிய அருவி ஒன்று உள்ளது.

நீர்த்தேக்கம் மலைப்பகுதியில் அமைந்துள்ள தனியார் அருவிக்கு சென்று குளிக்க பொதுப்பணி துறை மூலம் வாகன கட்டணம் செலுத்தி சென்று வந்தனர். இவ்வாறு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் மடைமீது அமர்ந்து மது அருந்திவிட்டும், அணை பகுதியில் பாட்டில்களை உடைத்துவிட்டு சக சுற்றுலா பயணிகளிடம் கை கலப்பில் ஈடுபடுவது மட்டும் இல்லாமல் பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு,பொறப்பற்ற முறையில் நடந்து வந்தனர்.

மேலும் மலை பகுதியில் மது பாட்டில்கள் உடைந்து கிடப்பது, பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் குவிந்து கிடப்பதால் வன விலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனை தடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சுற்றுலா பயணிகளின் செயல்பாடு குறித்து இப்பகுதி விவசாயிகள் சரமாரி புகார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில்  அடவி நயினார் நீர்த்தேக்கம் மேல் உள்ள அருவிக்கும், அணை பகுதிக்கும் செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிரடி தடை விதித்து விட்டனர்" என்றார். 

"தமிழர்கள் கூர்மதி படைத்தவர்கள் என தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம்.அதே தமிழர்கள் தான் இதை போல ஈனத்தனமான செயல்களால் பேரை கெடுத்துக்கொள்கிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் அரசே ஜனங்களுக்கு மதுவை ஊற்றி கொடுப்பதுதான்"என்றார் சுப்ரமண்ய பிள்ளை.

No comments:

Post a Comment