வசந்த காலம் வருமோ?- 116
By N Krishnamurthy
சிதம்பரம் அவருடைய உரையை முடிக்கும் போது மாலை 6 மணி ஆகிவிட்டது. எல்லோரும் முகம், கை, கால்களை கழுவிக்கொண்டு சுவாமி தரிசனத்திற்கு குருவாயூரப்பன் கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். ராஜேஸ்வரி குடும்பம் கோவிலுக்கு கிளம்பும் போது, எதிர்புறம் ரங்கநாயகி வர " வாங்களேன். கோயிலுக்கு போயிட்டு வந்தூடலாம்" என்று ராஜேஸ்வரி அவளை கூப்பிட்டாள். "நீங்க போயிண்டு இருங்கோ மாமி. நாங்க பின்னாடியே வந்துடறோம். எங்க ரூம் சாவிய தேடிண்டிருக்கோம்" என்றாள் ரங்கநாயகி.
ராஜேஸ்வரி, ம்ருதுளா, சங்கர க்ருஷ்ணன், மார்கபந்து ஆகியோர் குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்று, திருப்தியாக ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, கல்யாண மண்டபம் வெறிச்சோடி கிடந்தது. ஹாலில் சக்கரவர்த்தி முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். கோமளம் கண்ணீரும், கம்பலையுமாக இருந்தாள். இதைப் பார்த்த ராஜேஸ்வரி பதறிப் போய் " என்ன மாமி ஆச்சு? ஏன் அழறேள்" என்று கேட்டாள். அவள் கைகளை பிடித்துக்கொண்ட கோமளா" நான் என்னத்த சொல்லறதடி .நீங்க எல்லாம் கோவிலுக்கு போய் பத்து நிமிஷம் கழிச்சு ரங்கநாயகியும், மாப்பிள்ளையும் கோவிலுக்கு போய் இருக்கா . போற வழியில அவ ரோட சரியா பாக்காம கிராஸ் பண்ணியிருக்காளா அல்லது அந்த கடங்கார கார் ட்ரைவர் அவளை பாக்கலயான்னு தெரீல. கார் அவ மேல மோதி அவ கீழ உழுந்தூட்டாளாம். நெத்தியில காயம் பட்டு இருக்கு. ரத்தம் கொட்டிண்டு இருக்காம். ஆஸ்பத்திரிக்கு அழிசிண்டு போயிருக்கா. பெருமாளே.நான் என்ன பண்ணுவேன்.என் பொண்ணு பொழப்பாளா"என்று கூறி அழுதாள். ராஜேஸ்வரி பதறிப் போனாள். "குருவாயூரப்பா.இது என்ன சோதனை. எல்லாம் நல்லபடியாக நடத்திக் கொண்டிருந்த நீ இப்ப ஏன் இப்படி பண்ற. நேக்கு அவப்பேர் வந்தூடுமே" என்றெல்லாம் மனதுக்குள் புலம்பித் தீர்த்தாள் .
" எந்த நர்சிங் ஹோமுக்கு கொண்டு போய் இருக்கா" என்று கோமளத்திடம் ராஜேஸ்வரி கேட்க அதற்கு அவள் "நேக்கு நர்சிங் ஹோம் பேர் வாயில நுழையல" என்றாள் கோமளம்.
அப்போதுதான் பத்மநாபன் உள்ளே நுழைந்தார். அவரைப் பார்த்து ராஜேஸ்வரி "மாமா, மாமிக்கு எப்படி இருக்கு" என்று கேட்டாள்." ரத்தம் வரது நிந்தூடுத்து. ஆனா பிரக்ஞை இல்லாமல இருக்கா. டாக்டர் பிளட் கொடுக்கணும்னு சொல்றார். அவ பிளட் குரூப் என்னன்னு தெரியல. அவ ஹேண்ட்பேக்ல ரிசன்ட்டா எடுத்த அவ பிளட் க்ரூப் சர்டிபிகேட் இருக்கு. அதை எடுத்துண்டு போக தான் நான் வந்து இருக்கேன்" என்றார்.
அவர் முகம் வாடி கிடந்தது. ரங்கநாயகி ப்ளட் க்ரூப் சர்டிபிகேட்டை எடுத்துக்கொண்டு அவர் கிளம்பும்போது ராஜேஸ்வரி, சங்கர கிருஷ்ணன், ம்ருதுளா மற்றும் மார்கபந்து அவருடன் கிளம்பி நர்சிங் ஹோம் சென்றார்கள்.
நர்சிங் ஹோம் கல்யாணத்துக்கு வந்தவர்கள் கூட்டத்தால் ஜெ ஜெ என்று நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
ரங்கநாயகியின் ப்ளட் குரூப்பை அறிந்து கொண்ட டாக்டர் "இது ரொம்ப ரேர் ப்ளட் க்ரூப் ஆச்சே. இந்த குரூப் பிளட் எங்க ஹாஸ்பிடல்ல இல்ல. வேற எங்கேயும் கிடைக்கறது கஷ்டம். என்ன பண்றதுன்னு தெரியலை. பேசாம பேஷண்ட்டை திருச்சூருக்கு ஷிப்ட் பண்ணிடுங்க " என்றார்.
பத்மநாமன் முகத்தில் ஈயாடவில்லை. வசுமதி "அம்மா" "அம்மா" என்று புலம்பினாள். ஸ்ரீவத்சன் வசுமதியை தேற்ற முயன்றான். இதையெல்லாம் கண்டு மனதுடைந்து போன ராஜேஸ்வரி, பத்மநாபனிடம் "மாமி என்ன பிளட் குரூப் மாமா"என்று கேட்டாள். "பி பாசிடிவ் " என்றார் பத்மநாபன். ராஜேஸ்வரி உடனே உரத்த குரலில் "என்து பி பாசிடிவ் தான். நான் பிளட் கொடுக்கிறேன்" என்றாள். இதை டாக்டரிடம் சொல்லவும் அவர் ராஜேஸ்வரியிடம் "உங்களது நிச்சயமாக பி பாசிடீவ்தான்னு சொல்ல முடியுமா? உங்க பிளட்ட எடுத்து அதை எந்த க்ரூப்ன்னு கண்டு பிடிக்க டைம் இல்லை. வேற குரூப்ல ப்ளட்டா இருந்தா காம்ப்ளிகேஷன் ஆகிவிடும்" என்று சொன்னவுடன், ராஜேஸ்வரி " எனக்கு நன்றாக தெரியும் .என் ப்ளட் குரூப் பீ பாசிட்டிவ் தான் "என்றாள். உடனே ராஜேஸ்வரியை அழைத்துக்கொண்டு போன டாக்டர் அவள் கையில் இருந்து பிளட் எடுக்க ஆரம்பித்தார். பின்பு டாக்டர் "இங்கு அதிகம் கூட்டம் கூட வேண்டாம் "என்று கேட்டுக் கொண்டதின் பேரில் பத்மநாபன், சங்கர க்ருஷ்ணன் ஸ்ரீவத்சன்,வசுமதி, ராஜேஸ்வரி தவிர மற்ற அனைவரும் மண்டபத்துக்கு திரும்ப வேண்டியதாயிற்று.
மண்டபத்தில் இரவு சமைத்தது அப்படியே இருந்தது. நர்சிங் ஹோமிலிருந்து வந்தவர்கள் ஏதோ பேருக்குத்தான் சாப்பிட்டார்கள்.என்ன முயன்றும் கோமளாவின் புலம்பலை நிறுத்த யாராலும் முடியவில்லை.
சிதம்பரம் தான் கொண்டு வந்திருந்த ஞானனந்தர் படத்தின் முன்னால் அமர்ந்து, கண் மூடி "சத்குருநாதா. ராஜேஸ்வரி மாமி சிறு துரும்புக்கும் மனசால கூட கெடுதல் நெனைக்கற டைப் இல்ல. அப்படிபட்டவளுக்கு அவப்பெயர் வராம நீ தான் ரங்கநாயகியை காப்பாத்தி கொடுக்கணம்"என்று மனமுருகி வேண்டிக்கொண்டார்.
ராஜேஸ்வரியிடமிருந்து முடிந்த அளவு ரத்தம் எடுக்கப்பட்ட பின் அதை ரங்கநாயகியின் உடலில் செலுத்தினார்கள்.
அங்கிருந்தவர்கள் மனதில் ஒடிக்கொண்டிருந்தது ஒரே கேள்வி தான்.
ரங்கநாயகி பிழைத்து, மறு நாள் நல்ல நாளாக விடியுமா என்பதே. எல்லாம் வல்ல குருவாயூரப்பன் தான் இதற்கு விடை அளிக்க வேண்டும். இது அவன் நடத்தும் நாடகமா?அப்படி என்றால் அவன் ஏன் இதை நடத்தவேண்டும்?
கூட்டுப்பிரார்த்தனைக்கு நிச்சயம் பலனுண்டு என சொல்கிறார்கள். ரங்கநாயகி உயிர் பிழைக்க வேண்டுமென்று நாமெல்லாம் குருவாயூரப்பனிடம் கூட்டாக வேண்டிக்கொள்வோமே.
No comments:
Post a Comment