வசந்த காலம் வருமோ?- 115
By N Krishnamurthy
நலங்கு முடிந்தவுடன் எல்லோருக்கும் தொண்ணையில் மிக்சரும்,மைசூர் பாகும் வைத்து தரப்பட்டது. இதைத் தொடர்ந்தது சூடான காபி /டீ.
நான்கு மணிக்கு சிதம்பரம் ஞானானந்தரை பற்றி பேச ஆரம்பித்தார்."ஞானானந்தர் பல அற்புதங்களை செய்திருக்கிறார்.
ஒரு சமயம் யாரோ ஒரு அன்பர் அவரிடம் வந்து, என் பெண் ஜாதகத்தில் கட்டங்கள் சரியில்லை என்று கூறுகிறார் ஜோசியர். அவளுக்கு குரு பலனே வரவில்லை. இப்போது கல்யாணம் ஆவது சிரமம் தான் என்று கூறிவிட்டார்" என்று சொல்லி முறையிட்டாராம். அதைக் கேட்ட ஞானானந்தர் வாத்சல்யுத்துடன்"குரு பலன் தானே வரவில்லை. நீ இங்க வந்ததனால உனக்கு குரு பலம் வந்துவிட்டது. உன் பொண்ணுக்கு ரெண்டு மாசத்துல கல்யாணம் ஆய்விடும்" என்றார். வந்த அன்பருக்கு அவ்வளவாக இதில் நம்பிக்கை இல்லை. மீண்டும் ஜோசியரிடம் சென்று இதை சொல்லி "இன்னொரு முறை ஜாதகத்தை சரியா பாக்கணும்" என்று வேண்டிக் கொண்டார். ஜோசியர் "எத்தனை முறை பார்த்தாலும் ஜாதகம் மாறப்போவதில்லை. நான் சொன்னது சொன்னது தான். அதையும் மீறி நடந்ததானே நான் ஜோசியம் பார்க்கிறத உட்டுடறேன்" என்றார்.
என்ன ஆச்சரியம்! சத்குருநாதன் சொன்னபடி அந்த குழந்தைக்கு அடுத்த ரெண்டு மாதத்துக்குள் திருமணம் ஆனது. ஜோசியர், ஞானானந்தரிடம் வந்து மன்னிப்பு கேட்டு விட்டு, தான் இனி ஜோசியம் சொல்லப் போவதில்லை என்று கூற அதற்கு குருநாதர் "நீ சொன்னதில் ஒரு தவறும் இல்லை. பகவான் அந்த குழந்தையின் விதியை மாத்தி எழுதீட்டான்" என்று கூறினார்னு சொல்றா.
இன்னொரு விஷயம் உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கலாம். மகா பெரியவா ஒரு தரம் இளயாத்தாம்குடில பூஜை பண்ணிண்டு இருக்கா. அப்ப திருக்கோவிலூர் தபோவனத்தில் இருந்த ஞானானந்தர் கூடியிருந்தவாள பார்த்து "கொஞ்சம் இருங்கோ"ன்னு சொல்லி, ஒரு அறைக்குள் போய்விட்டு, சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். அவர் கழுத்தில் மல்லிகைப்பூ மாலையும், கையில் வாழைப்பழமும் இருந்தது.யாரோ ஒருவர் "ஸ்வாமி எங்கே போய்விட்டு வருகிறது" என்று வினவ" காஞ்சி பெரியவர் என்னை நினைத்துக் கொண்டார் எனவே அவரை பார்க்க சென்றிருந்தேன் " என்று கூறினார். இதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பத்திரிகை நிருபர் இதை நம்ப முடியாமல் ஏளனமாக பார்த்தார். மறுநாள் தபோவனத்திற்கு இளையாத்தங்குடியில் இருந்து ஒரு தம்பதிகள் வந்தார்கள். அப்போது ஞானானந்தர் அவர்களிடம் "இளையாத்தான் குடியில் என்ன விசேஷம்"என்று கேட்டார். அப்போது அவர்கள் "நேற்று பெரியவா பூஜை பண்ணிண்டு இருந்தா. அப்ப திடீர்னு ஒரு ஆடு உள்ள வந்துடுத்து. பெரியவா அந்த ஆட்டுக்கு ஒரு மல்லிகைப்பூ மாலையை போட்டு, வாழைப்பழத்தையும் கொடுத்தா. அதை வாங்கிண்டு அது போயிடுத்து" என்றார்கள். இதை கேட்டுக்கொண்டிருந்த ஞானானந்தர் அந்த நிருபரை பார்த்து ஒரு பொருள் பொதிந்த பார்வையை ஓடவிட்டார். அந்த நிருபர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து "குருசாமி என்ன மன்னிச்சுக்கோங்க" என்றார். இவர்களுக்கிடையில் என்ன நடக்கிறது என்று அந்த சத்குருவுக்கும், நிருபருக்கு மட்டுமே தெரியும்.
காஞ்சி மகா பெரியவரும், சிருங்கேரி சுவாமிகளும் சத்குருநாதன் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார்கள், காஞ்சி பெரியவா அவரை ஞானானந்தர் என்று கூட கூப்பிடுவது கிடையாது. " *தாத்தா சுவாமிகள்* " என்றே தான் சொல்லுவார். யாராவது ஞானானந்தரை பார்த்து விட்டு திரும்பி வந்திருக்கேன் என்று கூறினால் "ஓஹோ, தாத்தா ஸ்வாமியை பார்த்துட்டு வந்துண்டு இருக்கேளா" என்று தான் கூறுவார்.
உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன். ஞானானந்தர் சமாதி அடைந்து விட்டாலும் இன்னும் தபோவனத்தில் இருந்து தன் பக்தர்களுக்கு அருள் பாலிச்சிண்டி ருக்கார். வீக் எண்டில் கண்ட கண்ட இடத்துக்கு போகாமல் நீங்கள் எல்லோரும் தபோவனம் செல்ல வேண்டும். முதல் நாள் மாலையே சென்று விட்டால் உங்களுக்கு அருமையான காபியும், இரவு சாப்பாடும், எதுவும் கட்டணம் இல்லாமல் கிடைக்கும். காலையில் கோ பூஜை, சமஷ்டி கணபதி ஹோமம், பாத பூஜை, அதிஷ்டான பூஜை வேணுகோபால சாமி பூஜை என்று பல பூஜைகள் நடக்கின்றன. அவற்றில் எல்லாம் கலந்து கொண்டு சத்குருவின் அருள் பிரசாதத்தோடு, காலை அருமையான வெண்பொங்கல் பிரசாதத்தையும் ,11:30 மணிக்கு மிகவும் நேர்த்தியான, சுவை மிகுந்த வீட்டு சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டு வரலாம்" என்று கூறினார்." என்னை இந்த கல்யாணத்திற்கு வரவழைத்து சத்குருநாதன் ஞானானந்தரை பற்றி ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்ல வாய்ப்பு கொடுத்த ராஜேஸ்வரி மாமிக்கும், மார்க்க பந்து சாருக்கும் எனது நன்றியையும் கூறி,ம்ருதுளாவும் சங்கர க்ருஷ்ணனும் ஞானானந்த ஸ்வாமிகள் அருளால் சீரும் சிறப்புடன், பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.சத்குரு நாதர் ஞானானந்த ஸ்வாமிக்கு" என்று முடித்ததும் கூடியிருந்தோர் "ஜே" என்றனர்.
No comments:
Post a Comment