Monday, February 26, 2024

வசந்த காலம் வருமோ?- 121

 வசந்த காலம் வருமோ?- 121

By N Krishnamurthy 

போகும் வழியில் ஈச்சனாரி விநாயகர் கோவிலில் ஐந்து நிமிடம் நிறுத்த வேண்டும் என்று ட்ரைவரிடம் கேட்டுக் கொண்டார் சிதம்பரம். கோவிலை  அடைந்ததும் சிதம்பரம் கையில் உள்ள மட்டை  உறித்த தேங்காய்களை எடுத்துக்கொண்டு போய் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்தார்.சிலர்  ஆலயத்தின்  உள்ளே போய் விநாயகரை வேண்டிக்கொண்டு திரும்பி பஸ்சுக்கு வந்தார்கள். 

ஒன்றரை மணிக்கு பஸ் கோயம்புத்தூர் ஸ்டேஷனை  அடைந்து, பின்புறத்தில் நின்றது. எல்லோரும் இறங்கி, லக்கேஜுகளை எடுத்துக்கொண்டு, முதல் வகுப்பு வெயிட்டிங் ரூமுக்கு சென்றார்கள். ராஜேஸ்வரியும், மார்க பந்துவும், பஸ்சுக்கு ஆன பணத்தில் அட்வான்ஸை கழித்துக்கொண்டு மீதியை  டிரைவரிடம் கொடுத்தனர். அவருக்கு மறக்காமல் ஒரு தாம்பூலப்பையையும், அத்துடன் இரு நூறு ரூபாயையும் சேர்த்து  கொடுத்தார்கள்.

வெயிட்டிங் ரூமில், கொண்டு வந்திருந்த கட்டு சாதத்தை பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

சரியாக மூன்று  மணிக்கு ட்ரெயின் கோவையை விட்டு கிளம்பியது. எல்லோருக்கும் ஒரே கம்பார்ட்மெண்டில்  இடம் கிடைத்தது தான் அதிசயம் .  ராஜேஸ்வரி மாமி மிகவும் புத்திசாலி. இல்லாவிட்டால்  சென்னையிலிருந்து கோவை செல்லும் போது சங்கர க்ருஷ்ணனுக்கும், ம்ருதுளாவுக்கும் வேறு வேறு சீட்டிற்கு புக் செய்தவள் , திரும்பி வரும்போது இருவருக்கும் அடுத்தடுத்த   இருக்குமாறு டிக்கெட் புக் பண்ணியிருப்பாளா?

ரங்கநாயகி, பத்மநாபன் மற்றும் சிதம்பரம் அடுத்தடுத்து  மூன்று பேர் சீட்டில்  அமர்ந்து இருந்தார்கள். ட்ரெயின் கிளம்பியவுடன், ஒரு வார அலைச்சலால் தூங்க ஆரம்பித்த ராஜேஸ்வரி ஜோலர்பேட்டை வரும் வரை அசந்து தூங்கினாள்.

காட்பாடி தாண்டியதும் வசுமதி,வந்தனா மற்றும் ம்ருதுளா கட்டு சாத கூடையை பிரித்து எல்லோருக்கும்,பாக்கு மட்டை தட்டில், புளியோதரையும்,மிளாகாய் பொடி தடவிய இட்லிகளையும் போட்டு வினியோகித்தார்கள். விருப்பப்பட்டவர்கள் ட்ரையினில் கிடைத்த டீ (வென்னீரை) யை பருகினார்கள்.

வழக்கமாக டாக்ஸி புக் செய்யும் ட்ராவல்ஸ் நிறுவனித்திடம் 20 பேர் பிடிக்கக்கூடிய மூன்று வேன்களை இரவு பத்து மணிக்கே சென்ட்ரலுக்கு வந்து காத்திருக்குமாறு முதலிலேயே ஏற்பாடு செய்திருந்தாள் ராஜேஸ்வரி. அரக்கோணம் தாண்டியதும் ட்ராவல்ஸ் ஓனரை  போனில் தொடர்பு கொண்ட ராஜேஸ்வரி சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வேன்கள் வந்தாகி விட்டதை உறுதி செய்து கொண்டாள். 

சென்னையை ட்ரெயின் அடையும் போது மணி பத்து இருபத்தைந்து  ஆகிவிட்டிருந்தது.   சாமான்களை பத்திரமாக  இறக்கி, அவற்றைப் போர்ட்டர்கள் உதவியுடன் தள்ளு வண்டியில் ஏற்றி ஸ்டேஷனுக்கு வெளியே நின்றிருந்த வேனில் ஏற்றினார்கள்.

முதல் வேனில் சாரங்கன் தம்பதிகள், சக்ரவர்த்தி தம்பதிகள்,ருக்மணி,அவர் கணவர்,வசுமதி,ஸ்ரீவத்சன்,அவனது பெற்றோர்கள்,ரங்கநாயகி,பத்மநாபன்,மஹாலக்ஷ்மி குடும்பம்,ரகு குடும்பம், கருணாகரச்சாரியார், அவருடன் வந்தவர்கள் அமர்ந்ததும் வேன் கிளம்பி சாரங்கன் வீட்டை அடைந்தது.

ராஜேஸ்வரி,மார்கபந்து,சபேச அய்யர், மரகதம்,சந்தானம் குடும்பம், லலிதா, ஸ்ரீதரன்,வினோத், சிதம்பரம்,வைத்யநாத சாஸ்திரிகள்,அவருடன் இருந்த இரண்டு வைதீகர்கள் இரண்டாவது வேனில் அமர,வேன் ராஜேஸ்வரியின் வீட்டை அடைந்தது

மூன்றாவது வேனில் பயணித்த சுப்பு லக்ஷ்மி குடும்பம்(அத்தை,அத்திம்பேர், ராமகிருஷ்ணன் அவர் மனைவி உட்பட)சுப்பு லக்ஷ்மியின் வீட்டை அடைந்தது.

ம்ருதுளாவிற்கு வெளியில் சென்று விட்டு திரும்பி வழக்கமாக மீண்டும் தன் வீட்டிற்கு போகாமல் தன் புகுந்த வீட்டிற்கு போவதை வித்யாசமாக உணர்ந்தாள்.  ராஜேஸ்வரி  சென்ட்ரலிலேய அவளிடம் " உனக்கு எங்காத்துக்கு வரது ஒரு மாதிரி இருந்தா, நீ ஒன்னோடு ஆத்துக்கு ராத்திரி போய்ட்டு,  அம்மாவோட தங்கிட்டு, நாளைக்கு கார்த்தால  வந்துக்கலாம்" என்று சொன்னாள். அதற்கு ம்ருதுளா ராஜேஸ்வரியிடம் "இல்லம்மா.நான் நம்பாத்துக்கே வந்துடறேன்" என்று சொன்னாள்.  பெண்கள் தான் எவ்வளவு சீக்கிரமாக தங்களை அட்ஜஸ்ட்  செய்து கொண்டு விடுகிறார்கள். 

மறுநாள் காலை குளித்து, சந்தியை செய்து முடித்த வைத்தியநாத சாஸ்திரிகள் "சாந்தி முகூர்த்தத்தை எப்போ வச்சிகறதா உத்தேசம்" என்று கேட்டார் .அதன் பின்பு அவர் அடுத்த வாரத்தில் ஒரு நாள் நன்றாக இருப்பதாக கூறி அது பெண்ணிற்கு சௌகரியப்படுமா என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். மைதிலியிடம் இது விஷயம் பற்றி போனில் பேசிய ராஜேஸ்வரி அன்றே வைத்துக் கொள்ளலாம் என்று கூறினாள்.

அடுத்தநாள் காலை சிதம்பரம் ராஜராஜபுரத்திற்கு கிளம்பினார்.அவர் எவ்வளவு சொல்லியும் அதை கேட்க்காமல் ராஜேஸ்வரி அவருக்கு திரும்பிப்போக டூரிஸ்ட் கார் ஏற்பாடு செய்திருந்தாள். ம்ருதுளாவும்,சங்கர க்ருஷ்ணனும் அவரை நமஸ்கரித்தார்கள். "சீக்ரமேவ சந்தான ப்ராப்தி ரஸ்து"என்று அவர்களை ஆசிர்வதித்தார். ஒரு தட்டில் முஹுர்த்த தாம்பூலத்தை வைத்து அதனுடன் வெற்றிலை பாக்கோடு இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் வைத்து ராஜேஸ்வரியும்,மார்கபந்துவும் அவரிடம் நீட்டினார்கள். சிதம்பரம் அதை பெற்றுக்கொள்வதற்கு முன் "ஒரே ஒரு கண்டிஷன் பேர்ல நான் இதை எடுத்துக் கொள்வேன்" என்று கூறினார்." என்ன கண்டிஷன் சொல்லுங்கோ" என்றாள் ராஜேஸ்வரி. "இனிமே நம்மளுக்குள்ள ஒரு தொடர்பும் இல்ல அப்படின்னு இருக்கும் பட்சத்தில் நான் இதை எடுத்துக் கொள்வேன். இப்படி ரூபாய் எல்லாம் கொடுத்து நம்ப நட்பை கொச்சைப்படுத்தாதீர்கள்" என்று கூறியவர் முகூர்த்த தாம்பூலத்தையும், வெற்றிலை, பாக்கையும் மட்டும் எடுத்துக்கொண்டு, ரூபாயை தட்டிலேயே வைத்து அதே சங்கர கிருஷ்ணனுக்கும், ம்ருதுளாவுக்கும் அளித்தார்.

மார்ககபந்துவும், ராஜேஸ்வரியும் அவருக்கு நமஸ்காரம் செய்தார்கள். சிதம்பரம் எல்லோரையும் பார்த்து "ராஜராஜபரத்துக்கு அடிக்கடி வந்து போயிண்டிருங்கோ"என்று கூறி காரில் ஏறினார்.

சாந்தி முகூர்த்தத்திற்கு ராஜேஸ்வரியின் வீட்டில் ஒரு அறை அலங்கரிக்கப்பட்டது அன்று  மாலை மைதிலி, சாரங்கன், வசுமதி, ஸ்ரீவத்சன், ரங்கநாயகி, பத்மநாபன் ,கோமளா சக்கரவர்த்தி ஆகியோர்  ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வைத்தியநாத சாஸ்திரிகள்  தன்னால் வர முடியவில்லை என்று அவருடைய சிஷ்யன்  ஒருவரை அனுப்பி இருந்தார் .வைதீக காரியங்கள் முடிந்தபின் ம்ருதுளாவும், சங்கர க்ருஷ்ணனும்  அறைக்குள் விடப்பட்டார்கள்.

இறைவன் என்னும் சூத்ரதாரி நம்மையெல்லாம் படைத்து, சம்சாரம் என்னும் மாயவலையில் நம்மை சிக்க வைக்க,புத்ரபாக்யத்தை கொடுக்க வேண்டி, நமக்கு சரியான பருவத்தையும், சூழ்நிலையையும் தருகின்றான். இது போன்ற தருணத்தில் இருக்கும் ம்ருதுளா,சங்கர க்ருஷ்ணன் தம்பதிகளை நாம் இப்போதைக்கு விட்டு விடுவோம்.

No comments:

Post a Comment