வசந்த காலம் வருமோ?- 99
By N Krishnamurthy
ராஜேஸ்வரி தன்னுடைய கண்டிஷன்களை சொல்ல வாய் திறந்தாள்.
"என்னோட முதல் கண்டிஷன எல்லோரும் ஏத்துப்பான்னு நேக்கு தெரியும் .ரெண்டாவது கண்டிஷன தான் ஏத்துப்பாளான்னு பயமா இருக்கு" என்று சொல்ல எல்லோரும் மிகுந்த பயம் கலந்த ஆவலுடனும், அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.
ராஜேஸ்வரி சொல்ல ஆரம்பித்தாள். "என்னுடைய முதல் கண்டிஷன் இதுதான். எப்ப நான் மொத மொதலா ம்ருதுளாவ பாத்தேனோ, அப்பவே அவளை மாட்டு பொண்ணா ஆக்கிக்கணும்னு நெனைச்சேன்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன். அப்பவே இன்னொண்ணையும் நெனச்சேன். இந்த கல்யாணம் ஒண்டி தகஞ்சதுன்னா, இந்த கல்யாணத்தை குருவாயூரில வச்சுக்கணும் அப்படின்னு தான் . இதான் என் முதல் கண்டிஷன் "என்றாள். அவளுடைய முதல் கண்டிஷனை கேட்டு அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வசுமதி கூட" அப்பா. என்னவோ ஏதோன்னு பயந்துண்டு இருந்தோம். நல்ல வேளை, நாம் நெனச்சபடி எல்லாம் இல்லை" என்று நினைத்துக் கொண்டாள். பிறகு ராஜேஸ்வரி, என்னுடைய ரெண்டா கண்டிஷன இப்பசொல்றேன் " என்று கொஞ்சம் இடைவெளி கொடுத்தாள். இது மீண்டும் பீதியை கிளப்பி விட்டது. ராஜேஸ்வரி அப்போது
" என்னுடைய ரெண்டாவது கண்டிஷன் என்னன்னா, இந்த கல்யாணத்துக்கு உண்டான மொத்த செலவையும் நான் தான் ஏத்துப்பேன்" என்று கூறினாள். இது சிலருக்கு திருப்தி அளித்தது.சிலருக்கு இது பிடிக்கவில்லை.
முதலில் வாயைத் திறந்த ரங்கநாயகி
" அது எப்படி நீங்க சொல்ற கண்டிஷனை ஒத்துக்க முடியும். நீங்க சொல்ற கண்டிஷன பாத்தா எங்காத்து பொண்ண கட்டின பொடவையோடு அனுப்பிச்சா போதும்னு சொல்ற மாதிரி இல்லை இருக்கு. எங்களுக்கு வக்கில்லேன்னு உலகம் நெனச்சூடாதா?அது நடக்காது" என்றாள். அதற்கு ராஜேஸ்வரி" நான் அப்படி சொல்லல மாமி.தயவு செஞ்சு தப்பா புரிஞ்சுக்க வேணாம். கல்யாணத்துக்குன்னு மொத்த செலவை பாக்கும்போது முக்கியமா கல்யாண மண்டபத்துக்கு உண்டான செலவு, சாப்பாட்டுக்கு உண்டான செலவு, இது ரெண்டையும் முழுசா ஏத்துக்க எனக்கு அனுமதி கொடுங்க. மீதி நகைநட்டு மற்றும் துணி மணி, பண்ட பாத்திரங்கள் வாங்கறத உங்க சௌகரியபடி செஞ்சுகோங்க. பண்ட பாத்திரம்னு வரும்போது, ஏற்கனவே இருக்கறது கூட, இதுவும் சேர்ந்து எடத்தை அடச்சுக்காமா இருக்கணும்னு பாத்துக்கணும்" என்று கூறினாள்.
இதைக் கேட்ட பத்மநாபன் " பண்ட, பாத்திரம் விஷயத்துல மாமி சொல்லுறது சரியா இருக்கலாம். கல்யாண மண்டபம் செலவையும்,சாப்பாடு செலவுயையும் மாமி முழுசா ஏத்துக்கறது தான் கொஞ்சம் சரிப்பட்டு வருமான்னு தெரியல . நம்ப ஏன் அது ரெண்டையும் சரி பாதியா பிரிச்சுக்க கூடாது" என்று கேட்டார். இதற்கு ராஜேஸ்வரி " அப்படித்தான் உங்க இஷ்டம்னா அப்படியே செஞ்சுக்கலாம். ஆனா.." என்று இழுக்க , சாரங்கன் " என்ன மாமி.ஏன் ஆனான்னு இழுக்கறேள் "என்று கேட்டார். " இங்கிருந்து அவ்வளவு பேரையும் குருவாயூர் அழச்சுண்டு போயிட்டு திரும்பி கொண்டு வர வரைக்கும் உண்டான செலவெயெல்லாம் என்னோடதா இருக்கட்டம் . இதனை கண்டிஷனா போடல. வேண்டுகோளா தான் வைக்கிறேன்" என்றாள்.
இதை கேட்ட மைதிலி "நீங்க சொல்ற மாதிரி இல்லாம , அதலயும் 50% ஷேர் பண்ணா தான் நண்ணா இருக்கும்னு நாங்க நெனைக்கிறோம்" என்றாள்.
இப்போது ராஜேஸ்வரியின் மாமியார் மரகதம் பேச ஆரம்பிச்சாள்.
"நான் சித்த பேசலாமா" என்று அவள் கேட்க "நீங்க பெரியவா.அவசியம் உங்க அவிப்ராயத்தை சொல்லுங்கோ" என்றாள் மைதிலி. "என் மாட்டுப்பொண்ணு சொக்க தங்கம். அவ இது மாதிரி செலவ எல்லாம் ஏத்துகறதா சொன்னது, உங்களால அப்படி முடியாது அப்டீன்னு தப்பர்த்தம் பண்ணிக்கப்படாது. அவளுக்கும்,மார்க பந்துவுக்கும் பொண் குழந்த இல்லையேன்னு கொறை இருக்கு. அதானலே ம்ருதுளாவை தன் பொண்ணா நெனச்சு,ஒரு பொண் தனுக்கு இருந்தா அந்த கொழந்த கல்யாணத்துக்கு தான் செலவு பண்றத, இந்த கல்யாணத்துக்கு செலவிடணம்னு பாக்கறான்னு நெனக்கறேன்" என்றாள்.
ராஜேஸ்வரி இதை கேட்டதும் மாமியார் கூறியதை ஆமதிக்கும் விதமாக தலையை ஆட்டினாள்.இதைக்கேட்ட ருக்மணி அங்கிருந்தவர்களிடம் "தோ பாருங்கோ. ராஜேஸ்வரிய அவ போக்குல விட்டுடுங்கோ. அவ இஷ்டபட்ட மாறி அவ செலவழிச்சுகட்டும்.
உங்களுக்கு ம்ருது கல்யாணத்துக்கு நம்ப செலவு பண்ணலயேன்னு கொற இருந்தா நக,நட்டை கூட போடுங்க.பின்னால நெறய விசேஷங்கள் வராமலா போயிடும். அத யெல்லாம் விமர்சய நடக்க செலவு பண்ணுங்க. கல்யாணத்தன்னிக்கு குருவாயூர் கோவில்ல அன்னதானத்துக்கு ஏதாவது அமௌண்ட் கொடுங்கோ" என்றாள்.
இதை கேட்ட ராஜேஸ்வரி தன் இடக்கையை உயர்த்தி" கல்யாணத்தன்னிக்கு குருவாயூர் கோவில்ல அன்னதானத்துக்கு நான் நேர்ந்துடிருக்கேன் "என்றாள். இதைக்கேட்ட ருக்மணி " ஒண்ணுத்தயும் வுட்டு வெக்க மாட்ட போலிருக்க இவ" என்றாள்.
குருவாயூர் சென்று வர ஆகும் முழு செலவை ராஜேஸ்வரி ஏற்பாளெனவும், கல்யாண மண்டபம் மற்றும் சாப்பாட்டு செலவை சரி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், நகை,துணி மணி,பாத்திரங்கள் வகையறா செலவு பெண் வீட்டை சேர்ந்தது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பெண்ணுக்குண்டான புடவைகள், திருமாங்கல்யம் அகியவற்றிற்கு உண்டான செலவை 50:50 என ஏற்கவும் ஒத்துக்கொள்ளப்பட்டது.ஒரு வழியாக எல்லாம் சுமுகமாக முடிந்தது.
அப்பாடா. எனக்கே இப்போது தான் நிம்மதி பெருமூச்சு வருகிறது. ராஜேஸ்வரி பற்றி என்னவெல்லாம் தவறாக நினைத்துக் கொண்டிருந்தோம் என்று நினைக்கும் போது எனக்கே வெட்கமாக இருக்கிறது. என்ன செய்வது, சில சமயம் சிலரைப் பற்றி இப்படித்தான் தவறாக நினைத்துக் கொண்டு விடுகிறோம். நல்ல வேளை ராஜேஸ்வரி கண்டிஷன் போடுவதற்கு முன்னால் அவளைப் பற்றி தவறாக நினத்தார்களே தவிர அதை யாரும் அவள் முன் பேசி விட வில்லை.
இதெல்லாம் முடிந்த அரை மணி நேரத்துக்குள் சமையலறைக்கு சென்று சூடான பில்டர் காபி தயாரித்து கொண்டு வந்து எல்லோருக்கும் விநியோகம் செய்தாள்
மைதிலி. காப்பி சாப்பிட்ட பின் ராஜேஸ்வரி சாரங்கனிடம் " உங்க சைடுல இருந்து எவ்வளவு பேர் வருவா? அவ பேர்,வயசு விவரம் நீங்க கொடுத்தேள்னா நான் ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணறதுக்கு சௌரியமா இருக்கும். மார்ச் 27 ஆம் தேதி அன்னைக்கு ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணிடலாம்"என்றாள். இதைக் கேட்ட பத்மநாபன்"குருவாயூர் ட்ராவல பத்தி உங்க பிளான சொல்லுங்கோ. கேட்டுக்கறோம் " என்றார்.
இதற்கு ராஜேஸ்வரி "கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி காலேல டே எக்ஸ்பிரஸ் ட்ரெயின பிடிச்சு கோயம்புத்தூர் போயிடலாம். அங்க லஞ்ச முடிச்சிண்டு, அங்கேந்து ரெண்டு டெம்போ ட்ராவலரோ அல்லது ஒரு சார்டட் பஸ்ஸோ ஏற்பாடு பண்ணிண்டு குருவாயூர் போயிடலாம். அதாவது கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி ராத்திரி அங்க இருப்போம். அடுத்த நாள் காலையில நிர்மால்ய தர்சனம் பண்ணிக்கலாம். அன்னிக்கு காலைலேந்து விரதம்,நாந்தி போன்ற விசேஷங்களை ஆரம்பிக்கலாம். கல்யாணம் முடிஞ்ச கையோடு பொண்ணு, மாப்பிள்ளையும் குருவாயூரப்பனை ஜோடியா,ஸ்பெஷலா தரிசிக்கற்தக்கு ஏற்பாடு பண்ண போறேன். அன்னைக்கு ராத்திரி அங்க இருந்துட்டு, மறு நாள் காலைல கிளம்பி திரும்பி கோயம்புத்தூர் வந்துடுவோம்.பெரிவாளுக்கெல்லாம் ச்ரமம் இல்லேன்னா, அன்னைக்கு மத்தியானமே ட்ரெயின்ல கிளம்பி மெட்ராசுக்கு ராத்திரி வந்து சேரலாம். ராத்திரி ரொம்ப லேட் ஆயிடும்னு நெனச்சா , எல்லாம் அன்னிக்கு கோயம்புத்தூரில தங்கீட்டு, வேணும்றவா மருதமலை முருகனை தரிசனம் பண்ணிட்டு, அடுத்த நாள் காலை ட்ரெயின பிடிக்கலாம். இப்படித்தான் நான் நினைச்சிண்டு இருக்கேன்" என்றாள். இதைக் கேட்ட ருக்மணி
" நீ ஏதாவது ஒரு பெரிய ஆபீஸ்ல மேனேஜ்மென்ட் கேடர்ல இருந்து இருக்கணும்னு நெனைக்கறேன் .எப்படி இவ்வளவு துல்லியமா, இவ்வளவு நாள் முன்னாடியே பிளான் பண்றேன்னு நினைக்கும் போது ஆச்சரியமா இருக்கு" என்றாள்.
No comments:
Post a Comment