Friday, January 14, 2022

செருவாமணி 24

 செருவாமணி 24

Written by Baskar Sathya 

'என்னடி இப்படி குண்ட தூக்கிப் போடற.  அப்பாகிட்ட சொல்லிட்டயா?'

'இதெல்லாம் எப்படிம்மா அப்பாகிட்ட சொல்றது.  என்ன கேட்டுண்டுண்டா எல்லாம் நீங்க செய்யறேள்.'

'ஏண்டி, ஏதாவது வெந்தையத்தையாவது போட்டுண்டு வந்திருக்கலாமில்லையோ?'

'ஏம்மா, நாலஞ்சு நாள் முன்னாடிலேந்து போட்டுக்கணும்னு நீதானே சொல்லியிருக்கே.  நேத்திக்கு அப்பா காலேஜ் வரும்போதுதான் தெரியும் என்ன பொண்ணு பார்க்க வரது.'

'ஈஸ்வரா'.  ஒருகணம் விசாலத்திற்கு ஒண்ணுமே புரியவில்லை.

நந்தினி சொன்னது இதுதான்:

'எனக்கு நேத்திலேந்தே டைம்.'

'அவாளெல்லாம் கிளம்பறதுக்கு முன்னாடியாவது சொல்லி தொலச்சிருக்காமில்லையோ.  நேத்திக்கு வந்தோண்ணயாவது சொல்லியிருக்கலாமேடி.'

'வரும்போதே ராத்திரி பதினொண்ணு ஆயிடுத்து.  எங்க சொல்றது.'

விசாலம் முகத்தில் கவலை இப்போது.  இவளுக்கு வயித்துவலி வேற வந்துடுமே.  வெண்ணெய் திரண்டு வர நேரத்துல இப்படி ஒரு கூத்தா?  பகவானே, ஏன் இப்படி எங்கள படுத்தற.  நிம்மதியாவே ஒரு க்ஷணம் வைக்க மாட்டேங்கறியே.'

மனதுக்குள் மாட்டியது பகவான் தான்.  கொஞ்சம் டோஸ் அவருக்கு.

'சரி, சரி.  யார்கிட்டேயும் சொல்லிண்டு இருக்காதே இதை.  அங்கேயும் இங்கேயும் அலையாதே.  நான் அப்பாகிட்ட பார்த்து சொல்லிக்கறேன்.

'படிக்கறேன் படிக்கறேன்னா கேட்டாதானே.  இப்ப பார், எல்லார் முன்னாடியும்...போம்மா, அவமானமா இருக்கு எனக்கு.'

'ஆரம்பத்திலேந்தே அபசகுனமாவே பேசிண்டிருக்க நீ.  பேசாம வாய மூடிண்டு இரு. பகவான் இருக்கார், பார்த்துப்பார்.'

'எல்லாத்துக்கும் என்னையே திட்டு.  நீங்க செய்யறதெல்லாம் ரைட்டாக்கும்.'. சிணுங்கிக் கொண்டே சென்றாள் நந்தினி.

அப்போது உஷா வந்தாள்.  உஷா  செருவாமணி வீட்டுக்கு நாலு வீடு தள்ளி வசிப்பவள்.  விசாலத்தின் நட்பு.

'என்ன நந்துக்கு கல்யாணம் வரதா, விசாலம்?'

'வா உஷா.  இன்னிக்கு நாலு மணிக்கு அவா கிட்டேந்து ஃபோன் வந்தது.  ரெண்டு கார்ல  எட்டு பேர் வராளாம்.  எப்படியும் ரெண்டரை மணிக்குள்ள வராளாம்.  எங்காத்துல மூணு பேர்.  தெருக்காரா பத்து பேர மாமா கூப்பிட்டுருக்கார்.  அதுக்கு தகுந்த மாதிரி சொஜ்ஜி பஜ்ஜி ஏற்பாடு பண்ணனும்.  மாமா வெத்தலை பாக்கு பழம் வாழை இலை எல்லாம் வாங்க போயிருக்கா.  நீ ஆத்து வேலையெல்லாம் முடிச்சிண்டு சீக்கிரம் வந்துடு.  ஒரு மணிக்காவது ஆரம்பிச்சாத்தான் சரியா இருக்கும்.  ஆத்துல எல்லாரையும் அழச்சிண்டு வந்துடு, என்ன?'

'நானும் என் பொண்ணு ஆத்துக்காரர்தான்.  பையன் ஏதோ மட்டைய தூக்கிண்டு கார்த்தாலேயே கிளம்பிட்டான்.  நான் வந்துடறேன் விசாலம்.  கவலைப் படாம இரு.'

'வரும்போது ஆத்துலேந்து நல்ல ஜமக்காளம் இருந்தா எடுத்துண்டு வா.  இங்க ரெண்டு இருக்கு.  எதுக்கும் இருக்கட்டுமே.'

அவள் சென்றவுடன் செருவாமணி வந்தார்.

'சாலி, நீ சொன்னதெல்லாம் வாங்கிட்டேன்.  ஜாக்கெட் பிட் ஒரு இருபது வாங்கியிருக்கேன்.  போறுமோன்னோ?'

'யதேஷ்டம்னா' என்றவள் அவரை ஜாடை காட்டி கொல்லைப்புறம் அழைத்துக் கொண்டு போனாள்.

'பொண்ணுக்கு நாளாம்.  குண்ட தூக்கி போடறா இப்ப.'

கேட்ட மாத்திரத்திலேயே கலக்கம் செருவாமணிக்கு முகத்தில்.

'இப்ப என்னடி பண்றது சாலி. நா வேற அவா கிட்ட வயத்துவலி சமாச்சாரமெல்லாம் சொல்லல.  அவாளுக்கு தெரிஞ்சா?'

'நீங்க வேற பயமூத்தாதீங்கோ என்ன? ஒண்ணும் ஆகாது.'

'வெள்ளிக் கிழமை சந்தனக்காப்பு சாத்தாதுக்கு பிள்ளையார் படுத்தறாரா?'

'நீங்க அதுலியே இருங்கோ.  அதான் இன்னிக்கி சாத்திண்டுடறாரே.  எல்லாம் அவர் பார்த்துப்பார்.  நடக்கறது நடக்கட்டும்.  நீங்க யார் கிட்டேயும் உளறிக் கொட்டாம இருங்கோ, அது போதும்.'

சித்தப்பா, சித்தி, குழந்தைகள் முதலில் ஆஜர், ஒரு மணிக்கே.  அதைத் தொடர்ந்து திருப்பாற்கடல் தெருவில் வசிக்கும் சில குடும்பங்களிலிருந்து.  அப்பாசாமி ஐயர், பாலகிருஷ்ணன், சேஷாத்திரி, ரமேஷ், கோபாலன், ரங்கராஜன் இவர்களையெல்லாம் அழைத்திருந்தார் செருவாமணி.  அவர்தம் குழந்தைகளைத் தவிர்த்து மனைவிகளோடு வரத்துவங்கினர்.

ஒருபுறம் நந்துவின் பால்ய ஸநேகிதிகள் ப்ரியா, ப்ரபா, ஜெயஸ்ரீ, குமுதா, அமுதா என்று ஒரு கூட்டம் நந்தினியின் அலங்காரத்தை கிண்டல்களோடும் சிரிப்பொலிகளோடும் நடத்திக் கொண்டிருந்தன.

மற்றொரு புறம் விசாலத்தின் தெரு நட்புகள் சித்தியை சேரத்துக் கொண்டு பலகார ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தன.

வரனைப் பற்றி செருவாமணி ஒருபுறம் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவ்வப்போது சேது சித்தப்ப்பாவும் சேர்ந்து கொண்டார்.

விசாலமும் சமையல் அறையில் வரனைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

இரண்டு மணி ஆனது.  குட்டி போட்ட பூனையானார் செருவாமணி.  வாசலுக்கும் ஹாலுக்கும் அடிக்கடி நடை.  மனதில் டென்ஷன்கள்.

'ஒரு எடத்துல உட்காருங்கோ மாப்ள.  கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் வந்துடுவா.  மெட்ராஸுலேந்து வரணுமோன்னோ?'

சித்தப்பா அவர் மனநிலையை புரிந்து கொண்டு அவரை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தார்.

வந்தவர்களிடமும் பரிமாற்றங்கள் இருந்தன ஒருவருக்கொருவரிடத்தில்.  'என் பொண்ணுக்கு நல்ல வரனா இருந்தா சொல்லுங்கோ.  ஜாதகம் கொடுக்கிறேன்.'

செருவாமணியின் ஆத்மார்த்த ஏற்பாடுகள் வந்தவர்களிடத்தில் அவர்கள் குழந்தைகளின் கல்யாண சிந்தனைகளை தூண்டி விடாதா என்ன?

தெருக்காரா தெரிந்த நண்பர்கள் நெருங்கிய உறவினர்கள் செருவாமணியைப் பற்றி, நந்தினி பற்றி வருகிறவர்களிடம் நாலு நல்ல வார்த்தை சொன்னால் கூடுதல் பலம்தானே?  இதற்குத் தானே அவர்களையும் சேர்த்து இந்த வைபவம்.

முன்பின் அறியாதவர்கள் சம்பந்தங்களுக்கு டெஸ்டிமனிகள்தானே இம்ப்ரெஷன்களை கொடுக்கின்றன.

மணி மூணு பத்து.  இருப்பு கொள்ளாமல் வாசலுக்கு ஒருமுறை சென்ற செருவாமணியின் கண்களில் தெருக்கோடியில் விலாசம் தேடி தயங்கி தயங்கி வந்து கொண்டிருந்த இரு கார்கள் கண்ணில் பட்டன.  அவர்கள்தான், நிச்சயம் அவர்கள்தான்.  மேல்துண்டை எடுத்து முதல் ட்ரைவர் கண்களுக்கு தெரியுமாறு அசைக்கிறார்.  ட்ரைவர் பார்த்து விட்டான்.

உடனே சமையலுள்ளுக்குள் ஒரு ஓட்டம்.  'சாலி, மாப்ளையாத்துக்காரா வந்தாச்சு.  ஆரத்தி ரெடியோன்னோ?'

'வாசல் திண்ணைலியே வெச்சிருக்கேன்னா.  உஷாவையும் சித்தியையும் அனுப்பறேன் ஆரத்தி எடுக்க.  அங்கேயே சந்தன பேலா, பன்னீர் சொம்பு, பூவெல்லாம் இருக்கு பாருங்கோ. ஆம்பிள்ளைகள்ல ரெண்டு பேர வெச்சிண்டு சந்தனம் கல்கண்டு காமிங்கோ வரவாளுக்கு, என்ன?  நானும் பட்டுப் புடவைய ஒரு சுத்து சுத்திண்டு ரெடியாகறேன்.'

ஒரு செகண்டில் பரபரப்பு எல்லோரிடத்தும்.  அனைவரும் வாசலை நோக்கி.

'ஏய் நந்து, உங்காளு வந்தாச்சு.  எப்படியிருக்கான் பாரேன்.  சரியான அதிர்ஷ்டக்காரிடி நீ.  மாப்பிள்ளை டக்கர்.  ஜன்னல் வழியா ஒரு லுக் உடேன் அவனுக்கு.'

ஜெயஸ்ரீ சொன்னபடி பார்க்கவில்லை வாசலில் காரில் இறங்கி கொண்டிருந்தவனை.  வெட்கம் வியாபிக்கும்போது காட்சிகள் எதற்கு?

ஆரத்தி எடுத்தாச்சு.  சந்தனம், கல்கண்டு, புஷ்பத்துடன் வரவேற்பு.  சூழ்ந்திருந்த இருபது பேரும் புன் சிரிப்போடு வரவேற்றனர்.

'சாரி, ஒரு அரைமணி நேரம் லேட்.  ரோடெல்லாம் சேத்தியாதோப்பிலிருந்தே சரியில்ல.  அதான்.  ட.ரைவிங் கொஞ்சம் சிரமமா இ்ருந்தது.  கும்பகோணம் தாண்டி நல்ல ஸ்பீடா ஓட்டினானோ, ராகுகாலத்துக்கு முன்னாடி வரமுடிஞ்சது.'

ஜமக்காளங்களை சுற்றி இருந்த நாற்காலிகளில் வந்தவர்கள் உட்கார்ந்தார்கள்.  தெருக்காரா அவரவகள் சௌகர்யப்படி ஐமக்காளத்திலும், தரையிலும், அமர்ந்தார்கள்.

ஒவ்வொருவராக அறிமுகப் படுத்தினார் மூர்த்தி டாக்டருக்கு, தெருக்காராளை.  அவரும் தன்னோடு வந்தவர்களை அறிமுகப் படுத்தினார் அவர்களிடம்.

'பகவானே, இன்னும் இரண்டு மூன்று மணி நேரம், நந்துவைப் படுத்தாமல் இரு.'

ஒரு திக் திக் சிந்தனை வராமல் இருக்குமா?

தொடரும்...

No comments:

Post a Comment